Wednesday, August 8, 2018

அமெரிக்காவைப் பார் - 2015 chapter 4

அமெரிக்காவைப் பார்
கலைச்செல்வி ராமநாதன்
(நவம்பர்  2015 நகரத்தார் மலரில் வெளிவந்த கட்டுரை) 







 நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் (2005ல் ) அமெரிக்கா போய் வந்த பின்னர் சிறியதாக அமெரிக்கப் பயணக் கட்டுரை நகரத்தார்  மலரில் எழுதியுள்ளேன். பின்னர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பின்லாந்தின் இனிய நினைவுகள் (சற்றே நீண்ட தொடர்  கட்டுரை) எழுதித் தாங்கள் அனைவரின்  மனதையும் மகிழ்வித்தேன் .  நாங்கள் அமெரிக்கா விற்கு  மூன்றாவது முறையாக    சென்று வந்த சுவாரஸ்ய மான  நிகழ்வுகளைப்  பற்றியும், பழகிய மனிதர்களைப்  பற்றியும் , தற்போது சிறிய கட்டுரையாக எழுத விரும்புகிறேன்.

May 27, 2015 அன்று சென்னையிலிருந்து அபுதாபிக்கு எத்திஹாட் ஏர்வேஸ் மூலம் ,3 மணிநேரம்  பயணம் செய்து ,  பின்னர் அங்கிருந்து  டல்லாஸிற்கு அதே எத்தியாட் மூலம் 14 மணிநேரம் பயணம் செய்து, பத்திரமாக எங்கள் புதல்வன் செந்தில்குமார்  வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தது ஒரு சிறிய சாதனையாகவே தோன்றியது. அவ்வளவு நேரம் விமானத்தில் தொடர்ந்து அமர்ந்திருந்தாலும், அதிகப் படியான களைப்போ, அலுப்போ எங்களுக்குத் தோன்றாததற்குக் காரணம்-
எங்கள் பேத்தி சிந்துவின் நடன அரங்கேற்றத்தைக் காண அல்லவோ கடல் கடந்து செல்கிறோம் என்ற ஆர்வமும், மகிழ்ச்சியும் தான்.

நாங்கள் US. சென்ற மறு நாளே நாச்சியாபுரம் செல்வமணி- அழகு அவர்கள் பெண்கள் அட்சயா, சோனாவுடன் எங்கள் பேத்திகள் சிந்து, சூர்யாவுடன் நாங்கள் அனைவரும் , ஒரு சிறிய உணவகத்தில், எங்களுக்கு  முன்னால் கார்கள் இடைவிடாமல் அங்கும்  இங்குமாக ஓடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு, அந்த நிலா வெளிச்சத்தில் ஊர்க்கதைகளை சிரித்துப் பேசி உணவருந்தியது சுவாரஸ்யமான விஷயம். அங்கே ஒலித்த மெல்லிசையும் இதமாக இருந்தது. இங்கு வந்து, ஒரிரண்டு வாரங்களில் பலர் எங்களைக் கேட்ட கேள்வி உங்களுக்கு Jet-lag ஆகவில்லையா - என்பது தான். ஆனால் எங்களுக்கு Jet-lag ஆகவில்லை என்பது தான் உண்மை . Jet-lag என்பது இரவில் விழித்திருப்பது, பகலில் தூங்குவது, பலருக்கும் தெரிந்த விஷயம் தான் இது. தெரியாதவருக்காக விவரம் எழுதுகிறேன்.

எத்தியாட் விமானத்தில் எனக்கு மிகவும் பிடித்த (50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அற்புதமான, பாடல்கள் நிறைந்த படம்) Sound of music போட்டபோது மிகவும் மகிழ்வுடன் பார்த்தேன். நான் 5வது முறையாகப் பார்க்கும் படம் காலத்தால் அழியாத Sound of music.

எல்லென்ஸ் என்ற இடத்தில் உள்ள அரங்கத்தில் கோப்பல் தமிழ்ச் சங்கத்தினரின் 13வது ஆண்டு விழா | May 31ந் தேதி மாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. வார இறுதி நாட்களில் தமிழ் பயிலும் சிறுவர் சிறுமிகளின் ஆடல், பாடல், நாடகம்,
அத்தனையும் அருமை. எல்லாருக்கும், பரிசுகளும் வழங்கப்பட்டன. அங்கு அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் தன்னார்வத் தொண்டர்கள் தம் பிள்ளைகளுக்கு முனைப்புடன் தமிழ் கற்றுக் கொடுப்பதும், அந்தப் பிள்ளைகளும் ஆர்வத்துடன் தமிழ் கற்றுக் கொள்வதும் சிறப்பு அம்சமாகும்.

நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 'சங்கே முழங்கு’ படப்பாடலுக்கு அதே மாதிரி உடையணிந்து , அதே வெண் சங்குடன் அந்தச் சிறுவர் சிறுமிகள் நடனம் ஆடியது இன்னும் அப்படியே என் கண்களுக்குள் நிழலாடுகிறது.

இங்கு அடிக்கடி மாலை நேரங்களில் walking போகும் வழக்கத்தை வைத்திருந்தோம். சில சமயங்களில் நானாகத் தனியாக walking சென்றால் கூட, ஏதும் பயமாகத் தெரிவதில்லை . ஏனெனில் இரவு 8, மணிக்கு மேல் தான் சூரியன் அஸ்தமிக்கிறார்.

என் புதல்வன் செந்தில் குமார் - லதா இருக்குமிடத்திற்குப் பெயர் Dancing water lane, அதைச் சுற்றியுள்ள இரண்டு இடங்களுக்குப் பெயர் Rustling Water lane, Sandy water lane, இந்த மூன்று பெயர்களும் இப்படி அமைவதற்குக் காரணம் இங்கே சற்று அருகில் ஒரு சின்ன ஆறு ஓடுகிறது.

அதன் நடுவே ஒரு அழகான சிறிய நீர் வீழ்ச்சி (Water falls) உள்ளது. இரவு நேரங்களில் விளக்கொளியில் நீர்வீழ்ச்சி மின்னுவது காண்பதற்கரிய காட்சியாகும். இங்கு எல்லார் வீடுகளிலும் 'Security Alarm' (பாதுகாப்பு உப காரணம்) கண்டிப்பாகப் பொருதத்தப்பட்டுள்ளது. ஒரு தடவை அதைப் புரிந்து கொள்ளாமல் நான் அதிகாலையில் கதவைத் திறக்க அலாரம் அலற, என் மகன் வந்து சரிசெய்ய, அங்கிருந்து (அதற்குள்ள அலுவலகத்திலிருந்து தொலைபேசி ஒலிக்க, என் மருமகள் லதா விளக்கம் கூற, அன்று ஐந்து நிமிடத்திற்குள் ஒரு சின்ன நாடகமே அரங்கேறியது. அதன் பின்னர் நான் கவனமாகத் தான் நடந்து கொண்டேன் என்பதைக் கூறவும்  வேண்டுமா என்ன?

நாங்கள் Walking சென்றபோது, அழகழகான பூக்கள் ஒரு வீட்டின் முன்னால் பூத்துக்குலுங்கின. பக்கத்தில் போய்ப் பார்த்தால் எல்லாம், பிளாஸ்டிக் பூக்கள். அசல் பூக்களை மிஞ்சும் பிளாஸ்டிக் பூக்கள், மனிதன் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டேன். அதே வீட்டின் முன்னால் மூன்று நாய்க்குட்டி பொம்மைகள் 'Welcome board' ஐக் கவ்விக் கொண்டு விருந்தினர்களை வரவேற்கின்றன.

இந்தச் சின்ன ஆறு, இந்த சின்ன நீர்வீழ்ச்சிக்கிடையே இனிமையான நட்புறவுடன் கூடிய ,  அறுபது வயதிற்கு மேல் கூடிய, 'சேலை சுடி அணிந்த, 6 பெண்களை நான் சந்தித்தேன். அதில் நாலு பெண்கள் வட இந்தியர்.
இரண்டு பெண்கள் தமிழ்ப்பெண்கள். அவர்கள் அனைவரும் தினந்தோறும் இரவு 7 மணியிலிருந்து 9மணி வரை அந்த ஒரே பெஞ்சில் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்வதையும், பஜனைப் பாடல்களை தத்தம் மொழியில் மனம் விட்டுப் பாடுவதையும் பார்த்தபோது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது. இந்த ஆறு பெண்களும், தங்கள் பிள்ளைகள் வீட்டிற்கு வந்திருப்பதாகவும் குறித்த காலத்தில் தாயகம் திரும்புவோம் என்றும்  கூறினார்கள். அதில் 'வசந்தி என்பவர்கள் வடலூரில் இருந்து வந்திருப்பதாகக் கூறியவர்கள்,
''குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா ” வைப் பாடிய போது நெகிழ்வாக இருந்தது. ஒரு நல்ல பக்திப் பாடலை, அதுவும் நம் தாய்மொழி - தமிழ் மொழிப் பாடலை, அந்த அமெரிக்க மண்ணில் கேட்ட போது மனநிறைவாக இருந்தது.

எதேச்சையாக அமெரிக்க மாத இதழான தென்றல் (April 2014) பத்திரிக்கையை காண நேரிட்டபோது பஞ்சு அருணாசலத்தின் புதல்வி (எங்கள் செந்தில்--லதாவின் நெருங்கிய குடும்ப நண்பர்) கீதா அருணாசலத்தின் புகைப்படத்தையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் படித்தபோது வியப்பாக இருந்தது. கவியரசு கண்ண தாசனின் மடியில் மூன்று வயது கீதா துருதுருவென்று அமர்ந்திருக்கிறார். இன்னொரு மடியில் அவர்கள் வருங்கால கணவர் சுப்ரமண்யம் அமர்ந்திருக்கிறார்-- Rare photo. திருக்குறள் முழுவதையும் 2014 இல் ஒப்புவித்துக் "குறளரசி” என்று பட்டம் பெற்றவர். இவர் metroplex தமிழ்ச் சங்கத்தின் தலைவி; தமிழ்ப் பள்ளி ஆசிரியை; தஞ்சாவூர் ஓவியக்கலையில்  வல்லுநர்; அமெரிக்கா வாழ்  நகரத்தார் சங்கத்தில் முக்கியப் பொறுப்பாளர்;  எனப் பன்முகங் கொண்டவர். எங்கள் பேத்தி சிந்துவின் ஓவியத்தை (நடன அசைவுடன் கூடிய ஒவியம்) அவ்வளவு தத்ரூபமாக வரைந்து அரங்கேற்றத்தின்போது அரங்கத்தின் முன்னால் Display பண்ணியவர் .அவர்கள் வீட்டில் அறுசுவை விருந்து சாப்பிட்டதும், அவர்கள் இல்லத்தினர் அனைவரையும், சந்தித்ததும் மறக்க முடியாத இனிமையான அநுபவம்.

டல்லாஸில் சச்சிதாநந்த சுவாமிகள் அவர்கள் கட்டி  ஜீலை -2015ல்  கும்பாபிஷேகம் ஆகியுள்ள 'காரியசித்தி ஹனுமான் கோவில்"   மிகவும் பிரசித்த பெற்ற கோவிலாக உள்ளது. மூலவர் ஹனுமான், மற்றும் பக்கவாட்டில் நம் சிவன், சக்தி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர், அனைவரும் உள்ளனர்.  இந்தக் கோயிலுக்குத் தொண்டு செய்வதற்கென்றே பல பக்தர்கள் கோயில் காம்பவுண்டிற்குள்ளேயே சின்னச்சின்ன வீடுகளாக கட்டி க் கொண்டு தன்னலமற்ற சேவை செய்து வருகின்றனர். இங்கு கூட்டுப் பிரார்த்தனை, பஜனை எல்லாமே நடைபெறுகிறது. இந்த பிளேனோ நகரில் மட்டுமல்லாது , மற்றும் இதே  மாதிரியான  நம் ஹிந்து கோவில்கள் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் கட்டப்பெற்று , அனைவரும் பக்தியுடன் வழிபடுவது சிறப்பு, அதுவும் முக்கியமாக ஹுஸ்டன் நகரில் நாட்டரசன் கோட்டை Sam கண்ணப்பன் அண்ணன்  அவர்கள் ,  பெரு முயற்சியுடன் கட்டியுள்ள மீனாக்ஷி அம்மன் கோவில், மிகவும் பிரசித்த பெற்ற கோவிலாகும். அந்த மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனையும், சிவனையும் வழிபட்டது எனக்கு மனநிறைவாக இருந்தது.

எங்கள் சிந்து தற்போது படித்து வரும் யுனிவர்ஸிட்டி ஆப் டெக்ஸாஸ், டல்லாஸிற்குச் சென்று ஜீன் மாதம் பார்த்து வந்தோம். அது மிக மிக விரிவான பல்கலைக்கழகம்.  அங்கே அத்தனை வசதிகளுடன், மேலும் நீச்சல் குளம் எல்லாம் கூட வைத்துக் கட்டப்பட்டிருக்கின்றது. இங்கே சில ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற, நம் வட இந்திய தொழில்  அதிபர் , நவீன் சிண்டால், இந்தக் கல்லூரிக்கு அன்பளிப்பாக ஒரு பெரிய தொகையைக்  கொடுத்துள்ளார். அதை நினைவு கூறும் வண்ணம் ஒரு கண்ணாடி shelf இல் அவரது புகைப்படமும், நமது இந்தியாவின் தேசியக் கொடியும் நவீன் சிண்டால் புகைப்படத்தின் அருகே வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்தபோது மனநிறைவாக இருந்தது.

எங்கள் மூத்த மகன் திருநாவு மருமகள் Dr.மீனா வீட்டிற்கு, Atlanta என்ற சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட அழகிய நகரத்திற்கு, சென்று அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து அங்கேயிருக்கும் ஹிந்து கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தது மிகவும் மனநிறைவான விஷயம். ''சுவாமி நாராயணன் கோயில் முற்றிலும் சலவைக் கற்களால் ஆனது. இதைக் கட்டியவர் ஸ்வாமி பரமுக மஹராஜ் என்பவர். ஆயிரத்து முந்நூறு பேர் முனைந்து 2005 ஆம் ஆண்டில் இக்கோயிலைக் கட்டியதாக கேட்டறிந்தேன் .. அவர் கூறிய "In the joy of others lives our Own." என்ற  நல்லதொரு வாசகத்தை  அங்குள்ள சலவைக் கற்களில், பொறித்து   வைத்துள்ளார்கள். இந்தக் கோவிலுக்கு முன்னால் அழகான சற்றே பெரிய குளம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு முன்னால் பதினைந்து கருங்கல்லால் ஆன யானைத் தலைகள் தண்ணீரைத் தங்கள் வாய் மூலம் குளத்துக்குள் ஊற்றுவது போல அமைப்பு உள்ளது. அந்தக் குளத்துக்குள் செல்ல நான்கு அகலப் படிகள் உள்ளன. ஆனால் யாரும் குளத்துக்குள் செல்வது இல்லை. குளத்துக்கு மேலே நின்றவாறே தங்கள் வேண்டுதல்களை மனத்துக்குள் சொல்லிக் கொண்டே சில்லறைக்காசுகளை வீசி எறிகின்றனர்.

மற்ற எல்லாக் கோவில்களையும் போல் இங்கு ஸ்பெஷல் பூஜைகள், ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் எல்லாமே நடைபெறுகின்றன. நாங்கள் சென்றபோது, ஒரு தம்பதியினர் அவர்கள் இல்லத்தினருடன் சதாபிஷேகம், இரண்டு வேத விற்பன்னர்கள் , உடனிருந்து ஸ்தோத்திரம் எல்லாம் சொல்ல, நடுவில் கலசத்துடன் எண்பதாம் கல்யாணம் செய்து கொள்வதைப் பார்க்க நேர்ந்தது ஒரு பாக்கியமே .

Dallas/Fort worth விமான நிலையத்தில் பார்த்த  வேடிக்கையான சில காட்சிகளையும், எழுத விரும்புகிறேன். ஒர்  ஆண்மகன் தன் ஷுக்களைக் கட்டிப் பத்திரமாகத் தன் முதுகுப் பக்கம் தொங்கவிட்டிருந்தார். அவர் சூட்கேஸில் ஷுக்களை வைக்க இடமில்லை போலும்!,  என நினைத்துக் கொண்டேன். பிறிதொருவர் தன் கேமராவை தலையைச் சுற்றிக் கட்டி முன் நெற்றியில் அந்தக் கேமரா தெரியுமாறு தோற்றத்திலிருந்தார். இன்னொருவர் போட்டிருந்த ஜீன்ஸில் பல பகுதிகள் வேண்டுமென்றே கிழித்துத் தைக்கப்பட்டிருந்தன. அந்த ஜீன்ஸும் பல இடங்களில் சாயம் போனதாக இருந்தது. இதெல்லாம் அந்த நாட்டின் fashion போலும்!  ஆனால் யாரும் யாரையும் கண்டு கொள்வதில்லை. ஏளனமாகப் பேசுவதுமில்லை! . இது இந்த அமெரிக்க மண்ணின் சிறப்பு அம்சம்.



Atlanta வில் ,  பெரிய  கடை ஒன்றில் ,  13வகை காப்பிக் கொட்டைகளைப் பார்க்க முடிந்தது. அதே சமயம் நம் இந்திய சைவ உணவகத்தில் பல்வேறு வகையான தோசை, சட்னி, சாம்பார் கிடைக்கிறது. வார இறுதியில் அனைவரும் தத்தம் குழந்தைகளுடன் இங்கு உணவருந்த வரத் தவறுவதில்லை . அந்த உணவகங்கள் நம் தென்னிந்திய 'சரவணபவனை' நினைவு படுத்தியது. Atlanta விலும் Dallas இலும் பல இடங்களில் நாங்கள் walking சென்றபோது பார்த்தது நாய்க்குட்டி வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக, வெளியே செல்லும் போது, அதற்காகவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை உடன் எடுத்துச் சென்று, அங்கேயிருக்கும் நாய்க்குட்டிகளுக்கான குப்பைத் தொட்டிகளில், போட்டு விடுகின்றனர்.




                                                                                         அட்லாண்டாவில் பேரன் ஹரிஷ் உடன் 



Atlanta வில் முழுவதுமே மலையாக இருப்பதால், எங்கள் மகன் வீட்டு பால்கனியில் இருந்து பார்த்தால் சில சமயங்களில் அழகிய மான் குட்டிகள் கீழே துள்ளி ஒடுவதைப் பார்க்க முடியும். அதே சமயம் முயல் குட்டிகளும் ஆங்காங்கே ஓடிக் கொண்டிருக்கும். Atlanta வில் பேரன் ஹரீஷ் உடன் கேரம் விளையாடியது, You know/ UNO விளையாடியது, அங்கே பால்கனியில் ஜவ்வரிசி வற்றல்போட்டு காய்ந்தவுடன் பொரித்துச் சாப்பிட்டது எல்லாமே மலரும் இனிமையான நினைவுகள்.

அங்கே நாங்கள் walking சென்றபோது ஒரே வீட்டில் நான்கு கார்களைப் பார்த்தோம். ஏனெனில் அமெரிக்காவில் பேருந்துவசதி, ரயில்வசதி எல்லாம் குறைவாகத்தானே உள்ளது. எல்லாவற்றிற்கும் கார் ஒன்று தான் கைகொடுக்கிறது. ஆக நம் இல்லத்தரசிகள் இங்கு வந்த பின்னர் முதன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது “கார் டிரைவிங்” தான் என்பதை சொல்லவும் வேண்டுமா?

மேலும் Atlanta வில் நாங்கள் பார்த்து ரசித்த சில இடங்களுள் குறிப்பிடத்தக்கவை Coco - Cola company, Georgia Aquarium ஆகும். 1886ஆம் ஆண்டில் John S. Pemberton Coco-cola என்ற புதுவகை பானத்தைக் கண்டுபிடித்ததாகவும் தற்போது உலகிலுள்ள பலரும் இப்பானத்தை விரும்பிக் குடிப்பதாகவும் வரலாறு கூறுகிறது.

 இந்த COCO-Cola பானத்தைப் பற்றிய சிறு குறிப்பு உள்ளது.அதாவது 1883 ஆம் ஆண்டு நடைபெற்ற Calcutta International Exhibition-ல் இந்த கொக்ககோலாவின் formula எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், அதைப்பார்த்துத் தான் Atlanta வில் முதன் முதலில் கொக்ககோலா தயாரித்ததாகவும் கூறுகிறார்கள். ஆக கோலாவின் தாயகம் நம் இந்தியா என்று வேண்டுமானால் நாம் மார் தட்டிக் கொள்ளலாம். இது எந்த அளவு உண்மை என்று யாருக்கும் தெரியாது. ஆனால் , தற்போது இந்த formula தெரிந்து வைத்திருப்பவர்கள் உலகிலேயே இருவர் மட்டும் தான் என்று எழுதப்பட்டுள்ளது.

Georgia Aquarium மிகமிகப் பிரம்மாண்டமானது. நம்மை அப்படியே கடல்சார் உலகிற்கு அழைத்துச் சென்று கட்டிப்போட வல்லது. இந்த “World of Cococola” விற்கு பக்கத்திலேயே தான் Georgia Aquarium -Pembenton Place என்ற இடத்தில் உள்ளது. உலகிலேயே இரண்டாவது பெரிய Aquarium இது தான். முதல்  பெரிய Aquarium சிங்கப்பூரில் உள்ளது.


நம் தலைக்கு மேல் கடல் போன்ற பிரம்மாண்ட அமைப்பு. அதற்குள் மீன்கள் நீந்துகின்றன. ஆக நம் தலையைச் சுற்றி வண்ண வண்ண மீன்கள், புது அனுபவம், இனிமையான அனுபவம். மூவாயிரம் கிலோ மீன்கள் மேலே உள்ளனவாம். அங்காங்கே  விவரம் எழுதப்பட்டிருக்கின்றன. மூவாயிரம் பவுண்டு எடையுள்ள Whale shark இன் உடலிலிருந்து வெளிச்சம் பரவுகிறது. தலை, காது, கண் எதுவுமே இல்லாத sea-animals!  இன்னும்  குடை வடிவத்தில் கூட உள்ளது! . இன்னும் பல்வேறு வடிவத்தில் மீன்கள்!!. இத்தனை இலட்சக்கணக்கான மீன்களுக்கும் எவ்வளவு பொறுப்பாக பணியாற்றுபவர் உணவளிக்கிறார். அவர்களை  நிச்சயம்  பாராட்டத்தான் வேண்டும்.


மீன் காட்சிச்சாலை பார்த்து, கொக்கோகோலா கம்பெனியும் பார்த்துப் பின்னர் நாங்கள் பார்த்த முக்கியமான நிறுவனம் உலகப்பிரசித்தி பெற்ற C.N.N. இந்த C.N.N. ஐ பற்றிக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. முதலில் பல்வேறு introductions அது, இது, இங்கே, இப்படி, அங்கே, அப்படி என guide விளக்கிக் கொண்டே வந்தார். பாதி புரிந்தது, பாதி புரியவில்லை. C.N.N என்பதன் விரிவு Cable Network News. இது உலகிலேயே மிகப்பெரிய தொலைக்காட்சி செய்தி நிறுவனம். ஆங்காங்கே உலகில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை அங்கே உயரத்தில் எழுதித் தொங்கவிட்டிருக்கின்றனர்.



                                                     (படங்கள் - அமெரிக்க பாராளுமன்றம் மற்றும் CNN  செய்தி வாசிக்குமிடம் )



உதாரணமாக
 1987 இல் லேடி டயனா இளவரசர் சார்லசை - மணந்தது.
1987. இல் Atlanta வில் Olympic Games நடைபெற்றது.
1997 இல் பிரிட்டன் 'ஹாங்காங்' நகரை சீனாவிற்கு திருப்பி ஒப்படைத்தல்.
2009-இல் Barrack Obama வை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது.
2001 Sept 11 - World Trade Centre  விமானத்தால் மோதி சேதமடைந்து


இது போன்ற பல புள்ளி விவரங்கள் அங்கே எழுதப்பட்டிருக்கின்றன. செய்திகள் வாசிக்கப்படும் அறையில் பலர் அமர்ந்து அவ்வப்போது செய்திகளை சிரத்தையுடன் வாசிக்கின்றனர். நாங்கள் மேலே நின்று கொண்டு கீழே அவர்கள் செய்தி வாசிக்கும் நேர்த்தியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கே செல்வதற்கு முன்னர் அந்த இளைஞன் African-American guide நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள், என்று பொதுவாகக் கேட்க பலரும் தங்கள் நாட்டையும், ஊரையும் சொல்ல, நான் 'We come from India' என்று கூறிய போது பெருமிதமாகவே இருந்தது. பல திவ்விய மகான்களையும், கங்கையையும், இமயமலையையும் கொண்ட புனித தேசமல்லவா நம் இந்திய தேசம். இதற்கு ஈடு இணை உண்டா ?


ஒரு Mexican பெண்ணை மாதிரிக்காக செய்திகளை வாசிக்கச் சொல்லிக் காட்டினார்கள். அந்தப் பெண்ணும் tourist தான். ஆனால் கொஞ்சம் கூட யோசிக்காது, இயல்பாக செய்திகள் வாசித்து எல்லாரின் கை தட்டலையும் பெற்றார்.

குறிப்பிட்ட நாளில் எங்கள் பேத்தி  சிந்துவின் அரங்கேற்றம் மிக விமரிசையாக  , வெற்றி கரமாக  நடந்தேறியது . அன்று  மேடை ஏறி அமெரிக்க மண்ணில் தமிழில் நன்றி உரை ஆற்றினேன் .

சிந்துவின்  நடன அரங்கேற்றம் 



 இங்கே வந்து நான் உருப்படியாக விரும்பிச் செய்த இரண்டு காரியங்கள், ஏற்கனவே பல முறை படித்த மகாகவி பாரதியின் கவிதைத் தொகுப்பையும், நம் கவியரசுவின் ஈடு இணையற்ற “அர்த்தமுள்ள இந்து மதம்" பத்து பாகங்களையும் மீண்டும் மனமொன்றிப் படித்தது தான். அர்த்தமுள்ள இந்து மதத்தின் ஐந்தாவது பாகத்தில் வரும்,  எனக்குப் பிடித்த  சில வரிகளையும் இங்கே  எழுதுவதில் , மகிழ்ச்சி கொள்கிறேன் .


"வேதம் அறிந்த பிராமணன், அதை நாலு பேருக்காவது சொல்லமற் போவது எவ்வளவு பாவமோ, அவ்வளவு பாவம் பிறருக்குத் தனது அனுபவங்களைச்
சொல்லாமல் இருப்பது."

--- என் அனுபவங்களை நான் பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை.

"கப்பல் தளத்தில் நின்று வானையும் கடலையும் நோக்கிய போது அந்தப் பிரம்மாண்ட சிருஷ்டி என்னை வியக்க வைத்தது."

பத்தாவது பாகத்தில் நம் கவிஞர் எழுதியது ...........-

"காலையில் இட்லி தோசை, மத்தியானம் சாப்பாடு, ராத்திரியில் மீண்டும் பலகாரம், இதற்காகவா நான் படைக்கப்பட்டேன்?............. ஒவ்வொரு ஜீவனும், ஒவ்வொரு லட்சியத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆன்மா ஒரு லட்சம் ஆன்மாக்களுக்கு வழிகாட்டுவதற்காகவே படைக்கப் பட்டிருக்கின்றது ."

"கையில் இருக்கும் பேனா நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். "

எங்கள் நெருங்கிய தோழி பிருந்தாவின் அண்ணன் பிரபுவின் வீட்டிற்குச் சென்று அவர்கள் HomeTheatre இல் Robo க்கள் சண்டைகள் நிரம்பிய திகில் படமான Transformer படத்தை என் பேரன் ஹரீஷீடன் பார்த்தது, பிரபுவுடன் தென்னிந்திய உணவகத்திற்குச் சென்று நம் இட்லி, வடை, தோசை சாப்பிட்டது எல்லாமே மறக்க இயலாத தருணங்கள்.

மகாகவி பாரதியின் வரிகளை நெஞ்சில் நிலைநிறுத்தி, தங்களுக்கு நினைவுபடுத்தி என் 'அமெரிக்காவைப் பார்' கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

"வலிமையுடையது தெய்வம், 
நம்மை வாழ்ந்திடச் செய்வது தெய்வம்
தெய்வ வலியுண்டு தீமையைப் போக்கும்"

எங்கள் பிள்ளைகள், பேரன்பேத்திகள் திருநாவு, மீனு, வினித், ஹரீஷ், செந்தில், லதா, சிந்து, சூர்யா கண்ண ன், மீனு (Finland), ஆர்த்தி , பாரதிக்கு வாழ்த்துக்கள், நெஞ்சார்ந்த நன்றிகள்.

என் கட்டுரையைப் பொறுமையாகப் படித்த அனைவருக்கும், நல்ல விதமாக வெளியிட்ட ஆசிரியருக்கும் நன்றி.

உலகம் சுற்றிய தமிழர் திரு.சோமலே, எங்கள் அப்பா தமிழ்ச்சான்றோர். மெ. திருநாவுக்கரசு அவர்களின் இனிய நண்பராவார். நெற்குப்பையில் எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டுக்காரரான எழுத்துலகில் முத்திரை பதித்த நண்பர் “திரு. சோமலே அவர்கள் பல ஆண்டுகட்கு முன்னர் எழுதிய அமெரிக்காவைப் பார்”

என்ற புத்தகத்தின் தலைப்பையே என் இந்தக் கட்டுரைக்கும் இப்போது தலைப்பாகக் கொடுத்துள்ளன்.

பயணக் கட்டுரையின் முன்னோடியான தெய்வத்திரு சோம. லே - அவர்களுக்கு நன்றி.

No comments:

Post a Comment