chapter 6
நெஞ்சை அள்ளும் நியூஸிலாந்து
அனைவருக்கும் " கியோ ஓரா ". " கியோ ஓரா " என்றால் மௌரி மொழியில் வணக்கம் என்று பொருள் . எனது பயணக்கட்டுரை வரிசையில் தற்போது நான் எழுத விருப்பது நியூஸிலாந்து நாட்டு பயணக்கட்டுரை. பின்லாந்தில் வசித்த எனது மூன்றாவது புதல்வர் ராம்நாத் கண்ணன் நியூஸிலாந்திற்கு மாற்றலாகி , தற்போது அங்கு வசித்து வருகிறார்.
நானும் என் கணவரும் 2017 டிசம்பர் மாதம் நியூஸிலாந்து சென்றோம் . மூன்று மாதங்கள் நாங்கள் அங்கே தங்கி இருந்த போது , அவ்வப்போது அலுவலகத்திற்கு லீவு போட்டு மெனக்கெட்டு அங்கு சுற்றியுள்ள பல பகுதி களையும் கண்ணன் சுற்றி காண்பித்தது சிறப்பம்சம் .உலகிலேயே தூய்மையான பின்லாந்துக்கு பின் , சற்றும் தூய்மையில் குறைவில்லாத, சில்லென்ற காற்றுக்குப் பஞ்சமில்லாத , நியூஸிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக, என் மகன் கண்ணன் குடும்பத்துடன் வசிக்கிறார் . அங்கே நான் பார்த்த இடங்களை பற்றியும், சந்தித்த, பழகிய, மறக்க முடியாத நபர்களை பற்றியும் எழுதுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் .
நியூஸிலாந்து பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சுமார் 4.5 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு சிறிய தீவு நாடு . வடக்கு தீவுகள், தெற்கு தீவுகள் (North island and south island ) என்று இந்த நாட்டை இரு பாகமாக குறிப்பிடு கிறார்கள் . வெல்லிங்டன் இதன் தலை நகரம் ஆகும். நியூஸிலாந்து அதன் பூர்வீகம், மௌரி கலாசாரம், மற்றும் மிக அழகிய நிலப்பரப்பு ஆகியவற்றிற்குப் பிரபலமானது
நானும் என் கணவரும் , சென்னையிலிருந்து சிங்கப்பூர் , சிங்கப்பூரிலிருந்து ஆக்லாண்ட் , அதன் பின் அங்கிருந்து வெல்லிங்டன் (நியூஸிலாந்து ) என்று மூன்று விமானத்தில் பயணித்து வெல் லிங்டன் போய் சேர்ந்தோம் .சிங்கப்பூர் விமான நிலையத்தில் அடியெடுத்து வைத்ததுமே பிரமித்துப் போனேன் .9 வயது சிறுமியாக இருந்த பொது 50 ஆண்டு களுக்கு முன் பார்த்த அதே சிங்கப்பூர் விமான நிலையத்தையே இப்போதும் பார்க்க போகிறோம் என்று எண்ணிக்கொண்டிருந்த பொழுது , அங்கு தற்போது ஏற்பட்டுள்ள வானளாவிய மாற்றம் என்னை பிரம்மிக்க வைத்தது .இரத்தினக்கம்பளம் விரிக்க பட்ட மிக மிக விசாலமான இடப்பரப்புள்ள மிக அழகிய சிங்கப்பூர் விமான நிலையத்தைப் பார்த்து நான் அசந்து போனேன் .குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் விமான நிலையத்தில் பாத்ரூம் மிகவும் தூய்மையாக இருந்தது . அந்த, அந்த பாத்ரூம் , தூய்மைப் படுத்தும் துப்புரவு பணியாளர் புகைப்படம் அங்கு மாட்டி வைத்து , பெயரும் கூட எழுதி வைக்கப்பட்டிருந்தது .மேலும் rate your bathroom என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது . என்னைப் போல் "Excellent " என்று தான் எல்லோரும் கிளிக் செய்திருப்பார்கள் . விமான நிலையத்தில் மிக அழகாக அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த நிஜப்பூச்செடிகள் , நிஜப் பூக்கள் போலவே தோற்றமளித்த வெவ்வேறு வண்ணக் காகிதப் பூக்கள் , பிளாஸ்டிக் பூக்கள் ,மற்றும் பளிச் பளிச் சென்று ஒளிவிடும் வெண்மை நிற விளக்குகள் , வண்ண வண்ண விளக்குகள் ,ஆக சிங்கப்பூர் விமான நிலையம் ஆளையே கிறங்க அடித்து விடுகிறது. .அசல் தேவலோகம் போல் தோன்றுகிறது ! .ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல், விமான நிலையமே இப்படி என்றால் ஊர் எப்படி இருக்கும் ? சொல்லவா வேண்டும் ? சில மணி நேரம் அடுத்த flight க்கு காத்திருக்கும் போது சிங்கப்பூர் விமான நிலையம் முழுவதும் பொறுமையாக சுற்றிப் பார்த்தோம் .வேண்டியதை வாங்கி சாப்பிட்டோம். சிங்கப்பூரை சுற்றிப் பார்க்கவில்லையே என்ற எனது ஏக்கம் , மூன்று மாதங்கள் கழித்து திரும்பி தாயகம் வரும் வழியில் நிறைவேறியது .
சிங்கப்பூர் விமான நிலையத்தில் நான் ..
நியூஸிலாந்து சுற்றிலும் கடலாலும் மலைகளாலும் சூழப்பட்ட நாடு .காரில் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு வரும் போதே சுற்றிலும் அந்தக் கடலையும் மலையையும் பார்த்து ரசித்து க்கொண்டேதான் வந்தோம் . அந்தக் கடலும் மலையும் ஒரு சேர வரவேற்பது மிகவும் ரம்யமான நிகழ்வு. அந்த கடல் நீர் ஊதா நிறத்தில் ஆர்ப்பரிப்பு ஏதுமின்றி அமைதியாக உள்ளது .மலைகளில் பலர் பல பகுதிகளில் சின்ன சின்ன அழகான வீடுகளைக் கட்டிக்கொண்டு ,கடற் காற்றை முழுக்க முழுக்க அனுபவித்துக் கொண்டு,அந்தக் கடலையும் பார்த்து ரசித்துக் கொண்டு சிறகு விரித்து பறந்து திரிந்து கொண்டிருக்கும் பறவை இனங்களையும் (Sea gulls ) பார்த்து ரசித்துக்கொண்டு , வாழ்க்கையை முழுமையாக , நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .மலைப்பாங்கில் கட்டியுள்ள வீடுகளில் சிலவற்றில் கார் பார்க்கிங் இல்லாத தால் வீட்டிற்கு அருகிலேயே அவர்களுக்கென்று வரிசை யாக ஒதுக்கப் பட்டுள்ள இடங்களில் கார்களை நிறுத்தி யுள்ளனர் .அவர்களைக் கேட்டல் மலை பகுதியில் வீடு கட்டி வாழ்வது பத்திரமானது என கூறுகின்றனர்.. நிலநடுக்கம் ஏற்பட்டால், மலைகளில் உள்ள வீ டுகளுக்கு அவ்வளவு பாதிப்பு ஏற்படாது என்பது இவர்கள் கூற்று .நியூஸிலாந்து அவ்வப்போது சிறு சிறு, நிலநடுக்கம் ஏற்படக்கூடிய நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று .வெல்லிங்டன் நகரில் upper hut மற்றும் Lower Hut என்று இரு பகுதிகள் உள்ளன.எங்கள் மகன் கண்ணன் வசிக்கும் பகுதி lower Hut . வீட்டு உரிமையாளர் ஒரு குஜராத்திக் காரர் ."I come from land of Gandhi and also நரேந்திர மோடி "என்று அவர் பெருமிதத் தோடு கூறியபோது, கேட்ட நமக்கும் பெருமையாகவே இருந்தது. இன்னொன்றையும் இங்கு குறிப்பிட நினைக்கிறேன் .வெல்லிங்டன் ரயில் நிலயத்திற்கு முன்னால், நின்ற நிலையில் நம் தேசப்பிதா காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது மிகவும் பெருமைக்குரிய விஷயம் . மஹாத்மா வின் அந்த சிலைக்கு முன்னால் எழுதப்பட்டிருக்கும் வாசகம் ,"Pride of India, a man of truth and non violence, a freedom fighter for India". அந்த மாமனிதனின் சிலையை வணங்கி விட்டு வந்தோம் .வெலிங்டனில் நம் மகாத்மாவை என்றென்றும் நின்வுகூறும் நம் இந்திய நண்பர்களுக்கும் ,சிலை வைக்க அனுமதி வழங்கிய அந்நாட்டு அரசாங்கத்திற்கும் நாம் நெஞ்சார்ந்த நன்றியை செலுத்துவோம் .
நம் ஊர் காய்கறி சந்தை போலவே, லோவர் ஹட் டில் ஒவ்வொரு சனிக்கிழமை காலை 8 மணி முதல், மதியம் ஒரு மணி வரை திறந்த வெளி மார்க்கெட் கூடுகிறது. அனைத்து காய்கறி களும் , பழங்களும், பெரிது பெரிதாக, fresh ஆக, விற்கப்படுகின்றன . விலை சற்றே கூடுதல் எனினும் , அன்றே பறித்த, மிகத் தரமான காய்கறிகளும் , பழங்களும் கிடைப்பதால் , அனைவருமே விரும்பி வாங்குகின்றனர் . இதில் நான் வியப்படைந்த விஷயம் யாதெனில், என் மகன் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டுக்காரர் , சுமார் 80 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவரும், அவராகவே தன் காரை ஓட்டிக் கொண்டு வந்து , ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றது தான் .
இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களை எழுதுகிறேன். மேரி என்ற 80 வயதுக்கு மேற்பட்ட
அம்மையார் ஒருவர், இங்கு, அருகிலேயே , தனியாக வசித்து வருகிறார் .பிள்ளைகள் எல்லாம் வார இறுதி நாட்களில் வந்து பார்ப்பார்கள் எனவும், பிள்ளைகள் அவரவர் வேலை நிமித்தம், வெவ்வேறு ஊர்களில் வசிப்பதாகவும் கூறினார்.அவர் கூறிய மற்றுமொரு சுவையான செய்தி யாதெனில், " My mother is from Assam " என்று கூறியதுதான் . தனக்கு அசாம் மொழி தெரியாது எனவும் , ஆனால் இந்திய நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் , அவர்களில் மாலா , ராதா, மல்லிகா குறிப்பிட தக்கவர்கள் என்றும், அவர்களுடன் இப்போதும் தொடர்பு உண்டு என்றும் மகிழ்ச்சி யோடு கூறினார் .நாங்கள் தாயகம் திரும்பும் போது , மறக்காமல், அந்த பாட்டியிடம் நான் நேரில் சென்று சொல்லிக் கொண்டு வந்தேன்; சிலநாள் பழகியதற்கே, அன்று அவர்களின் கண்கள் பனித்தது , மிக நெகிழ்வான விஷயம் .
Saturday open மார்க்கெட்டில் , காய்கறிகள், எல்லாம் சொன்னால் சொன்ன விலை தான் .பெரிய பெரிய van களில் கொண்டுவந்து, மேடை பரப்பி விற்கிறார்கள். பேரம் பேச முடியாது .அங்கே நம் வட இந்தியர்கள், சிலர்,அவர்கள் பங்குக்கு, stall போட்டு, சமோசா , பூரி, side dish உடன் விற்கிறார்கள் . நாங்கள் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்த போது , ஒரு சுடிதார் போட்ட , வட இந்தியப் பெண்மணி ஒருத்தி , இந்தியில் பேசிக்கொண்டே , என் கையை பிடித்து கூட்டி போய் ,அவர்கள் போட்டிருத்த stall ஐக் காட்டினார் . அங்கு நான் சற்றும் எதிர்பாராத வண்ணம் , வெவ்வேறு நிறத்தில் , சுடிதார், மற்றும் ஜரிகை வேலைப் பாடு செய்த fancy சேலைகள் அழகாக மடிப்பு கலையாமல், அடுக்கி வைக்கப்பட்டிருந்தன . விலை 25 டாலார் முதல் 30 டாலர் வரை விற்கப்படுகின்றன. நியூஸிலாந்தில் காய்கறி மார்க்கெட்டில் , நம் நாட்டுச் சேலையை பார்த்ததும், எனக்கு இன்ப அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இருப்பினும் நான் எதுவும் வாங்க வில்லை .திருச்சி சாரதாஸில் இல்லாத சேலையா ?.
இன்னும் ஒரு கடையில் பளிங்கு plate , பளிங்கு பொம்மைகள் , கப் அண்ட் சாசர் , கண்ணாடி டம்ளர் , விதம் விதமான அலங்காரத்தில் , சின்ன சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி, போட்டோ பிரேம் , என்று இது போன்ற பல்வேறு சாமான்கள் ,விற்கப் படுகின்றன. . நான் ஒவ்வொன்றையும், அமைதியாகப் பார்த்து ரசித்தேன். அந்த நேர்த்தியான அழகு , "A thing of beauty is a joy for ever" என்ற ஆங்கில கவிஞரின் வரிகளை நினைவூட்டியது .
எங்கள் மகன் வீட்டு மாடியிலிருந்து பார்த்த போது , சற்று தூரத்தில் மிகப் பெரிய , அடர்ந்த பச்சை பசேலேன்ற மரங்கள் சூழ்ந்த மலைகள் பளிச்சென்று தெரிகின்றன .அந்த மலைகளின் மேல் அடுத்தடுத்து , சிறிதும் பெரிதுமாய் வீடுகள் கட்டப் பெற்றிருக்கின்றது.. இரவு நேரங்களில் பார்க்கும் போது, அந்த மலை வீடுகளிலிருந்து மஞ்சள் விளக்குகள் ஒளிர்கின்றன .ஏகப்பட்ட விளக்குகள்; கண்கொள்ளா காட்சி. ஆகா, "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா ...!" - என்ற பாரதி பாடலை, மனதில் நினைத்துக் கொண்டேன் .
நியூஸிலாந்து பூமியின் தென்துருவத்திற்கு அருகில் அமைந்திருப்பதால் , இங்கு டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நல்ல வெயில் காலம். ஆனால் ,பின்லாந்து பூமியின் வட துருவத்திற்கு அருகில் இருப்பதால், இதே சமயம் அங்கு நல்ல பனிக்காலம் . நியூஸிலாந்து வெயில் காலமாக இருந்தாலும் ஊட்டி கொடைக்கானல் மாதிரி தான் இருந்தது. கடல் சூழ்ந்த மலை நிறைந்த நாடானதால் காற்றுக்குப் பஞ்சமில்லை .சில நாள் வெயில் குறைவாகவே இருக்கும்; சிற்சில நாட்களில் வெயில் அதிகம் இருந்தாலும், மாலை நேரம், ஜிலு ஜிலு வென்று குளிர்ந்த காற்று ,வீசி நம்மை மகிழ்விக்கும். சில நேரங்களில் காற்று மிக அதிகமாக வீசி , நம் குடையைக் கூட பிய்த்து கொண்டு போகும். சம்மர் முழுக்க வீதி எங்கும் பூக்காடாகவே காணப்பட்டது . காற்று அதிகம் இருப்பதால் "Windy wellington" என்று பெருமையுடன் அழைக்கின்றனர் . Wellington என்ற வார்த்தையில் W எழுத்தை சிறகு விரித்து பறப்பது போன்று வடிவமைத்து எல்லா இடங்களிலும் , குறிப்பாக மலை சார்ந்த இடங்களில் எல்லாம் எழுதி வைத்துள்ளார்கள் .
உலகிலேயே மிகவும் காற்றோட்டமான நகரம் வெல்லிங்டன் ஆகும். சராசரியாக மணிக்கு 29.6 கீ . மீ . காற்று வீசுகிறது. வெல்லிங்டன் நியூசிலாந்தின் தெற்கு மற்றும் வடக்கு தீவுகளுக்கு இடையில் ஒரு காற்று நடைபாதை என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது.
எல்லா வீடுகளிலும், பின்லாந்து போலவே, வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன .ரோஜா பூ , ஒவ்வொன்றும் அவ்வளவு பெரிய பெரிய சைஸ் . எங்கள் மகன் வீட்டுக்கு அருகிலேயே , மிக பெரிய "Lucy Cole Rose Garden "என்ற பெரிய ரோஜா தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு 30, 35 வகை ரோஜாச் செடிகள் எங்கு பார்த்தாலும் பூத்துக் குலுங்கி நம் கண்களை கவர்ந்து இழுக்கின்றன .. ரோஸ் கார்டனில் நான் பார்த்த ரோஜா பூ வகைகளின் பெயர்களை இங்கே குறிப்பிடாவிடில் என் மனம் நிறைவடையாது !
1) sexy rose ; 2) Eden rose 3) Golden wing, 4) Lasting love, 5) Midnight blue, 6) Ebb tide, 7) Flory funda, 8)Fairy queen 9) Butterflies 10) stead sea fome 11) star ship 12) Agnes 13) thames castle 14) Ellen 15) Grace 16) Othello 17) Hot lips 18)Georgious girl, 19) Lemon Honey 20) Mento 21) glass act 22) crystal fairy 23) Dimples 24) Trekulla sun rise, 25) star ship
நான் பார்த்து மகிழ்ந்த பல ரோஜாக்களில் 25 ன் பெயரை மட்டுமே குறித்து வைத்திருந்தேன் !. இந்த ரோஜாச் செடிகள் அந்த ஊர் climate ற்கு தானாகவே செழிப்பாக வளர்கின்றன. இருப்பினும், அவற்றை பராமரித்து , தண்ணீர் ஊற்றி , ஒழுங்காக வெட்டி விட்டு , உரம் போட்டு அன்றாடம் கவனிப்பவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. வேறு யாரும் பூக்களைப் பறிப்பதில்லை . ஆனால் நான் மட்டும் தினம் இரண்டு பூ வாவது பறித்து, வீட்டுக்கு கொண்டு போய் , பூஜை அறையில் ,சாமிக்கு வைக்கத் தவறுவதில்லை.
நான் எங்கள் பேத்திகள் ஆர்த்தி பார்த்தியைக் கூட்டிக் கொண்டு, தினசரி இந்த தோட்டத்தின், நறுமணத்தை அனுபவித்துக் கொண்டே , walking செல்வதுண்டு . ரோஜாக்களை பார்த்ததுமே, நம் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு தனது கோட்டில் தினசரி ஒரு ரோஜா மலரை சூடிக்கொண்டது நினைவிற்கு வந்தது. இந்த தோட்டத்தில் செடிகள் மட்டுமல்லாது , அங்கங்கே பெரிய அழகிய மரங்களும் உள்ளன. இந்த இடத்தை பலர் பிக்னிக் spot போல பயன் படுத்து கின்றனர்.
வெல்லிங்டன், குறிஞ்சி குமரன் கோவில், ஒரு மலைப் பகுதியில் , சில ஆண்டு களுக்கு முன்னர், இங்கு வசிக்கும் தமிழர்களால் கட்டப்பெற்றது .ஈழத்தமிழர்கள் சிலரும் , பிராமணர்கள் சிலரும், ஏனையோரும் ,இந்தக் கோயிலுக்குத் தன்னார்வத் தொண்டர்களாக தினமும் பல மணி நேரம் ஒதுக்கி சேவை செய்கின்றனர் . அவர்களில், எனக்கு தெரிந்தவர்கள், என் மகனின் நண்பர் , ஸ்ரீனிவாஸ் மற்றும் அவர் துணைவி ஐஸ்வர்யா ஸ்ரீனிவாஸ் . ஸ்ரீனிவாஸ் இந்த கோவில் சேவைக்கு தன்னை முழுமையாக அர்பணித்துக்கொண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். அடுத்ததாக ,புதிதாக மணமான , அழகிய மாலை கட்டும் , அழகிய தெலுங்குப் பெண் லட்சுமி கண்ணன் ; மற்றும் , காயத்ரி தர்மா , இன்னும் பலரைச் சொல்லலாம் . அதில் ஐஸ்வர்யா ஸ்ரீனிவாஸ் அவர்களும், காயத்ரி தர்மா அவர்களும், நல்ல குரல் வளம் மிக்கவர்கள் . அவர்கள் இருவரும் சேர்ந்து ,மிக இனிமையாக குறிஞ்சி குமரன் மீது பல பக்தி பாடல்களைத் தங்கள் தேனினும் இனிய குரலில் பாடக்கேட்டேன் .நாங்கள் போயிருந்த சமயம் அந்த கோவிலில் , கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் பிரம்மோட்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .அவ்வமயம் , மிருதங்கம், நாதஸ்வரம் வாசிக்க , ஆஸ்திரேலியாவிலிருந்து கைதேர்ந்த கலைஞர்கள் வரவழைக்கப் பட்டிருந்தனர் . அதி அற்புதமாக வாசித்தனர் .
இந்த கோவிலின் மூலவர் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளி யுள்ளார் . கூடவே, விநாயகர், சிவன் அம்பாள் ,மாரியம்மன் , பைரவர், நவகிரகங்கள், நாடு நாயகமாக ஸ்ரீ சுவாமி ஐயப்பன் தனி த்தனி சன்னிதி யில் , வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர் .சிவன் சந்நிதிக்கு முன், வெண்கல நந்தீஸ்வரர், மிகச் சிறியதாக , மிகுந்த அழகுடன் வீற்றிருக்கிறார் .இந்தக் கோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம் உற்சவம்,நவராத்திரி , பிரதோஷம், மாதக் கார்த்திகை , திருக்கார்த்திகை எல்லாமே, சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது .பக்தர்கள் விழாக் காலங்களில், ஒவ்வொரு வரும் போட்டி போட்டுக் கொண்டு, அவரவர் வீட்டிலிருந்து சுண்டல் கேசரி, அவல் பாயசம், புட்டு, இடியப்பம், இட்லி சட்னி, மாம்பழ பாயசம் என்று வெரைட்டியாக , பல உணவுகளைக் கொண்டுவந்து, அனைவருக்கும் பிரசாதமாக இன்முகத்துடன் வழங்குகின்றனர்.
இந்த கோவிலில் , ஒருமுறை ஒரு சின்னஞ் சிறிய பெண் குழந்தை அழகாக பட்டுப் பாவாடை சோளி அணிந்து வித வித மான அணிகலங்களுடன் ,குஞ்சம் வைத்த பின்னலுடன் , பூவும் வைத்துக் கொண்டு நல்ல பாவனையுடன் பாடியது எங்கள் மனம் கவர்ந்த சிறப்பம்சம் ஆகும்.
இங்கு வெலிங்டனில் பிரதி ஞாயிறு தோறும் பத்து , பதினைந்து வீடுகளில் ,மாறி மாறி, பஜனை நடத்துகிறார்கள் . இதனை சத்சங் என்று குறிப்பிடு கிறார்கள் .ஞானானந்த ஸ்வாமிகளை குருவாக வைத்து இந்த கூட்டு வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இதில் எங்கள் மகன் வீடு உட்பட , தமிழ் , தெலுங்கு, வட இந்தியர்கள், உறுப்பினர்களாக இருக்கின்றனர் . கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நியூஸிலாந்து லேயே வசித்து வரும் , திருமதி பிரபா ரவி என்பவர் ,இதனை முன்னின்று நடத்துகிறார் . இவர் நட்ராஜ் நாட்டியாலயா என்ற நடனப் பயிற்சிப் பள்ளியும் நடத்தி , பல இளம் பெண்களுக்குப் பாரத நாட்டியம் கற்றுத் தருகிறார். என் பேத்திகள் ஆர்த்தி, பார்த்தி, இருவரும், திருமதி பிரபா ரவி அவர்களிடம், பரதமும்,சிரத்தையுடன் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும்,ஜெயஸ்ரீ என்பவரிடம் முறையாக வாய்ப்பட்டும் கற்று வருகின்றனர். 2018 பிப்ரவரி 28ம் நாள் , நட்ராஜ் நாடியாலயா குழுவினரால் பெரிய கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது . அதில் எங்கள் பேத்தி களும் பங்கேற்று நடனமாடினார் .
கலை நிகழ்ச்சிக்கு சென்ற போது .......
வெல்லிங்டனில் மிக அழகாக மிக பிரம்மாண்டமான பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது .எந்த ஒரு பெரிய நில அதிர்வு ஏற்பட்டாலும் தாங்கி கொள்ளும் படியான , சில பல, யுக்திகளைக் கையாண்டு அடித்தளத்தை மிக சிரத்தையுடன் அமைத்துள்ளனர்
1989ம் ஆண்டில் , நியூஸிலாந்து அரசு பாராளுமன்ற கட்டிடத்தை வலுப்படுத்தவும் புதுப்பிக்கவும் முடிவெடுத்தது. பாராளுமன்ற வளாகத்தையும் பாராளுமன்ற நூலகத்தையும் அவற்றின் அசல் அஸ்திவாரங்களிலிருந்து பிரித்து அவற்றை முன்னணி-ரப்பர் தாங்கு உருளைகளில் வைக்க அடிப்படை தனிமைப்படுத்தும் முறை வகுக்கப்பட்டது.அதன்படி 417 அடிப்படை தனிமைப்படுத்தப்பட்ட தாங்கு உருளைகள் வைக்கப்பட்டன . இவற்றை நேரில் பார்த்து பிரமித்துப் போனோம். நாடாளுமன்றம், நடைபெறும் போதே, பாஸ் வாங்கி ஒரு நாள் முழுக்க நாடாளுமன்றத்தில் சுற்றி பார்த்தோம். இவ்வளவு செம்மையாக நேர்த்தியாக பாராளுமன்ற கட்டிடம் கட்டியுள்ளது உலக அதிசயம் என்றே எனக்கு எண்ண த் தோன்றுகிறது .பூமி நகரக்கூடும் ; அனால் பாராளுமன்றம் அசையாமல் நிற்கும்."The earth may move, but Parliament stays put." பார்லிமென்ட் முன்னாள் எழுதிவைக்கப்பட்டுள்ள வாசகம் : "Hard hat; Hi -vis; and safty boots" பார்லிமென்ட்க்கு முன்னால் ஒரு அழகான கட்டிடம் . அதன் பெயர் "TEMPUS FUGATIVE " அந்த அழகிய கட்டிடத்திற்கு மேலே ஒரு தங்க சிங்கப் பொம்மை சூரிய ஒளியில் ஜொலிக்கிறது. அந்த சிங்கத்தின் மேலே, இரண்டு பளிங்கு குதிரைகள் அழகோ அழகுடன் உள்ளது.
வெல்லிங்டனில் முக்கியமாக ரசித்து பார்த்த இன்னுமொரு இடம் என்னவென்றால் , அது ஒரு காய்கறி தோட்டம். பல ஏக்கர் நிலப்பரப்பை க் கொண்ட மிகப் பெரிய தோட்டம் .இது பார்க்க மட்டுமல்ல , fresh ஆக வேண்டிய காய்கறிகளை நாமே நம் கைகளால் பறித்து விலைக்கு வாங்கி கொள்ளலாம் . "சில்லி பிக்கிங் " என்று அழைக்கிறார்கள் . பல விதமான மிளகாய்கள் மற்றும் எல்லா விதமான காய்கறிகள் செக்ஷன் செக்ஷன் ஆக பயிரிட்டுள்ளார்கள் . நமக்கு வேண்டியவற்றை பறித்து எடுத்துக் கொண்டு வந்து கவுண்டெரில் பில் போட்டு வாங்கிக் கொள்ளலாம் .
நிச்சயமாக அவ்வளவு பெரிய காய்கறி தோட்டத்தை நான் வாழ்நாளில் பார்த்தது கிடையாது.
சுற்றிப் பார்த்து காய்களை பறிப்பதற்கே 3 மணி நேரம் ஆகிவிட்டது. அங்கே விளையும், குண்டு குண்டு தக்காளி ,ஸ்ட்ராபெரி பழங்கள் , பல்வேறு வகையான மிளகாய் குடை மிளகாய் , மஞ்சள் பஜ்ஜி மிளகாய் , பெரிய பெரிய காலிப்ளவர் , காரட் , பீட்ரூட் முட்டைக்கோசு (இரண்டு கையாலும் சேர்த்துக்கூட என்னால் தூக்க முடியவில்லை !) அவ்வளவு பெரியது . பச்சை மிளகாயை ஒரு வருஷத்திற்கு பிரீஸரில் வாங்கி வைத்து பயன் படுத்துகிறார்கள் .நாங்கள் எங்களுக்கு வேண்டிய மட்டும் காய்கறி வாங்கி வந்தோம்.
ஒரு வாரக்கடைசியில் , லோவ்ர் ஹட் லிருந்து 2 மணி நேரம் டிரைவ் செய்து "Grey Town " என்ற ஒர் அழகான சின்ன ஊருக்குச் சென்றோம்.அந்த ஊரில் வீதி எங்கும் ஒரே பூ மயம் .
Grey டவுன் வீதி .....
Grey town ல் உள்ள கடைகளில் எல்லாம் , சொல்லி வைத்தாற்போல், ஒரு வட்டமான தொங்கு கூடையில் , நிஜப் பூக்களை வைத்து சங்கிலி யால் தொங்க விடப் பட்டுள்ளது .அது பார்ப்போரை எல்லாம் கவர்ந்து இழுக்கிறது . பூக்கள் நிறைந்த grey town ல் ஒரு லெவெண்டர் கார்டன் உள்ளது. அங்கே லெவெண்டர் பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன . நான் நினைத்து போல் , முன்னே சொன்ன காய்கறி தோட்டம் போல் விஸ்தீரணமான தோட்ட மல்ல. சற்றே சிறிய தோட்டம் தான் . ஆனால் நாம் செடிகளின் அருகே நடந்து செல்லும் போது பூக்களின் வாசம், லெவெண்டரின் மெல்லிய நறுமணம் நம்மை உற்சாக மாக்குகிறது. முன்னால் கவுண்டரில் விற்பனைக்கு கொத்து கொத்தாக, லைட் வயல்ட் நிற, லெவெண்டர் பூக்கள் வைக்கப் பட்டுள்ளன .இந்த லெவண்டெர் பூக்களிலிருந்து தான் , லெவெண்டர் பவுடர் ,சென்ட் , மற்றும் , சில மருந்துகளும் தயாரிக்கப் படுகின்றன .
லெவண்டெர் கார்டனில் ......
லெவெண்டர் கார்டன் பார்த்த பின்னல், நாங்கள் அனைவரும், ஒரு மலை சார்ந்த இடத்திற்கு காரிலேயே பயணித்தோம் . அந்த மலை சார்ந்த இடத்திற்கு பெயர் "காரோராங் "என்பதாகும்.
இரண்டு மலைப் பாங்கான இடத்தின் நடுவில் ஓரிடத்தில் கீழே சின்ன ஆறு ஒன்று சல சல வென்று ஓடுகிறது . அந்த ஆற்றின் மேலே , நாம் நடந்து போவதற்கு ஏதுவாக ஒரு தொங்கு பாலம் உள்ளது. அதன் இரண்டு பக்கங்களிலும் உறுதியான , நீளமான, கை பிடிகள் உள்ளன . ஒரு பக்கத்திலிருந்து , இன்னுமொரு பக்கத்திற்கு , நாங்கள் இந்த பாலத்தில், நடந்து சென்று , மிக அடர்த்தியான மரங்களையும் , காடுகளையும் கண்டு வியந்தோம். பாலம் உறுதியாக இருந்த தால் பயமின்றி, தயக்கமின்றி அனைவரும் , பாலத்தின் மீது நடந்து சென்றோம் . பாலத்தின் கீழே இரு பக்கங்களிலும் சல சல வென்று தெளிந்த நீரோடை ஓடுவது, பார்ப்பதற்கு, நமக்கு பெரும் மன உற்சாகத்தை தருகிறது . அந்த நீரில் சிறு சிறு கற்கள் எல்லாம் கூட , பளிச் பளிச் சென்று சூரிய ஒளி பட்டு கண்ணாடி போல் மின்னுகின்றன . காற்று ஜில் என்று சுகமாக வீசுகிறது ."சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக்காட்டினிலே ... " என்று T .R மஹாலிங்கம் கம்பீரமான குரலில் பாடிய பழைய பாடலும், அந்த சுகமான காற்றை அனுபவிக்கும் போது , இசையரசி M S அவர்களின் , "காற்றினிலே வரும் கீதம்,...." என்ற பாடலும் நினைவுக்கு வந்து மதி மயங்கச் செய்தன . குயிலின் சத்தமும் கேட்டது . அன்று Jan 21, எங்கள் 48 வது திருமண நாள் . எங்களுடன் வந்த அரவிந்தன் பெற்றோர்களின் ஆசியை பெற்றுக் கொண்டோம். அவர்கள் பேத்தி ஆர்த்தியும் , எங்கள் பேத்தி ஆர்த்தி பார்த்தி யுடன் சேர்ந்து, surprise performance செய்து, எங்கள் திருமண நாளுக்காக ஹாப்பி அனிவேர்சரி பாட்டுப் பாடியும், டான்ஸ் ஆடியும் , அனைவரையும் மகிழ்வில் ஆழ்த்தினர் .பிரதிபா , அரவிந்தன் அவர்களின் துணைவியார் என் கைகளைப் பற்றிக் கொண்டே கூட்டிக் கொண்டுபோய், அங்கிருந்த நீரோடை, அருகில் இருந்த மரம் செடி கொடிகள் , எல்லாவற்ரையும் பார்க்க உதவினார். அனைத்து இயற்கை காட்சி களையும் ஒன்று விடாமல் ரசித்துப் பார்த்த பின்னர், நாங்கள் அனைவரும் வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த புளியோதரை , லெமன் ரைஸ் , தக்காளிச் சாதம், தயிர்ச் சாதம் , உருளைக் கிழங்கு சிப்ஸ் ,உண்டு மகிழ்ந்தோம் .
வெல்லிங்டனில் பெரிய பொட்டானிக்கல் கார்டன் ஒன்று உள்ளது. மிக அழகிய தோட்டம் அது. பல் வேறு வகையான மரங்களும் மலர் செடிகளும், மலர்களின், மயக்கும் நறுமணமும், நம்மை வேறு உலகத்திற்கே கொண்டு செல்கின்றன. அந்த இடத்தை விட்டு வரவே மனம் இல்லாமல், :இன்னும் கொஞ்சம் நேரம் இந்த மலர் களின் சுகந்தத்தை அனுபவித்து இருக்கலாமே " என்ற எண்ணத்துடனேயே திரும்பி வந்தோம் .அடுத்து, கேத்தரின் மேன்ஸ் பீல்டு என்ற பெண் எழுத்தாளர் வாழ்ந்த இடத்தைப் பார்க்கச் சென்றோம், 1888ல் அவர் வாழ்ந்த வீடு, அந்த தோட்டம் புனரமைக்கப்பட்டு அற்புதமான மியூஸியம் ஆக உள்ளது .எல்லா எழுத்தாளர்களுக்கும், இந்த இடம், ரெம்பப் பிடிக்கும்!.
கிறிஸ்த்மஸ் , புத்தாண்டு விடுமுறையில் , நாங்கள் நியூஸிலாந்து க்குப் போயிருந்த அதே சமயம், எங்கள் இரண்டாம் மகன் செந்திலும், குடும்பத்துடன், அமெரிக்காவிலிருந்து , நியூஸிலாந்திற்கு வந்திருந்தார் .எனவே எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .எல்லோரும் சேர்ந்து ஊர் சுற்றி பார்ப்பதில் அலாதி மகிழ்ச்சி என்பதைச் சொல்லவும் வேண்டுமா? அனைவரும் வெல்லிங்டனனில் அனைத்து இடமும் பார்த்த பின்னர் , வேன் ஏற்பாடு செய்து கொண்டு, ஆக்லாண்ட் tour க்கு பயணமானோம் . வேன் என் மகனே ஒட்டிக் கொண்டு வந்தான். புதிய வேன்; மிக சௌகரியமாக இருந்தது . நியூஸிலாந்தில் southern island tour , Northern island tour , இரண்டு பகுதியாக tour செல்வார்கள் . நாங்கள் சென்றது வடக்கு தீவு களுக்கான tour . அதில் தான் ஆக்லாந்து அடங்கும் .
செல்லும் வழியில் " Radio New Zealand " என்ற கட்டிடம் தெரிந்தது. உடனே எனக்கு "Radio Singapore " பழைய ஞாபகங்கள் நினைவலைகளாய் என் கண் முன்னே தோன்றி மறைந்தன. ஆக்லாந்து சென்றடைய 9 மணி நேரம் ஆயிற்று . பிள்ளைகளுக்கும் , என் கணவருக்கும், அலுப்பு தட்டவில்லை . ஆனால் எனக்கு 9 மணி நேர பயணம் சற்று அலுப்பாகத்தான் இருந்தது.
ஆக்லாந்தில் , "WAR Memorial Museum " ( போர் நினைவு அருங்காட்சியகம் ) உள்ளது. இங்கு உலகப் போரில் போரிட்ட வீரர்களின் நினைவாக பல பெரிய பெரிய , போர்வீரர் உருவங்களை சிலை யாக செதுக்கி வைத்துள்ளார்கள் .அவர்கள் பயன் படுத்திய போர் கருவிகள் இங்கு பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன .ஆங்காங்கே ,அவர்கள் போரில் எவ்வளவு கஷ்டப் பட்டார்கள் , எப்படி எல்லாம் மீண்டு வந்தார்கள் ;என்பதை எல்லாம் எழுதி வைத்துள்ளார்கள் . அவர்கள் உபயோகித்த மிகப் பெரிய படகு ஒன்றும் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. மிகப் பெரிய, ராட்சஷ பறவை ஒன்றின் எலும்புக்கூடு வைக்கப் பட்டிருந்தது. .மிக உருக்கமான வாசகம் எழுதப்பட்டிருந்தது . " WE ARE STANDING ON THE SHOULDERS OF THOSE, WHO ARE LAYING BELOW US" என்பது அந்த வாக்கியம் .
ஆக்லாந்தில் 16 ஆவது மாடியில் Hotel Quest ல் தங்கி இருந்தோம். ஹோட்டல் அறையிலிருந்து கீழே பார்த்தால் , கண்ணுக்கு எட்டிய தூரம் வரை , உயர உயர மான எண்ணற்ற கட்டிடங்கள் , அவை அனைத்தும் இரவு நேரத்தில் ஒரே ஒளி வெள்ளம் . நீண்ட நேரம் ரசித்தேன் .
HOBBITON Movie set க்கு சென்று பார்த்தோம். உலகின் பிரம்மாண்ட மான திரைப்படங்கள் எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் (கணணி வரைகலை ) மூலம் தந்திரக் காட்சிகள் அமைப்பது அங்குதான் நிபுணத்துவம் பெற்றது .எந்திரன், பாகுபலி எல்லாம் இந்த ஹாபிட்டன் மூவி செட் டில் செய்யப்பட்ட கைவண்ணம் அடங்கிய படங்கள் தான் . திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் lab கருவிகளின் மாதிரி, மற்றும் ஏற்கனவே நடித்த பொம்மைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன . அந்த film city இல் இரண்டு பெரிய மண் குரங்கு பொம்மைகள் உள்ளன . அவை அவதார் படத்தில் நடித்தனவாம் ! ஹாபிட்டன் மூவி செட்டில் நிறைய சின்ன சின்ன Miniature பொம்மைகள் , மான்கள், மயில்கள் , குதிரைகள், நாய்க்குட்டிகள் , பூனைக்குட்டிகள் , மற்றும் அழகான பல்வேறு விதமான பார்பி பொம்மைகள் , இருந்தன. இம்மாதிரி மினியேச்சர் பொம்மைகளை முதலில் செய்து ,அதை வேண்டிய அளவு zoom செய்து ஆட வைத்து பாட வைத்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் திரையில் பிரம்மாண்டமாக தோன்றத் செய்வதே இந்த lab ல் நடக்கும் வேலை . வியப்பாக இருக்கிறதல்லவா?
அடுத்ததாக , ஆக்லாந்தில் உள்ள "வாக்காரே வா " என்னும் சிறிய கிராமத்தை சுற்றி பார்த்தோம்.இதன் முக்கியத்துவம் யாதெனில், இது எரிமலை வெடித்த இடம் , மற்றும் மௌரி மொழி பேசும் பழங்குடி மக்கள் இன்னும் மாறாமல் வசிக்கும் இடம் . எரிமலை வெடித்ததன் அடையாளம் இன்னும் தெரிகிறது .எரிமலைத் குழம்பு (தண்ணீர் போல்) பல வண்ணங்களில் இருக்கின்றன . பூமி அடியில் உள்ள தாதுப் பொருட்களே அப்படி பல வண்ணங்களாய் தெரிகிறது .சல்பர் போன்ற ஒருவகை துர் நாற்றம் எப்போதும் உள்ளது .எரிமலை வெடித்து சிதறும்போது பூமியின் அடியில் உள்ள கனிமங்கள் பல பூமிக்கு மேலே வருவதால், ஒரு வகையில் எரிமலை வெடிப்பு நன்மை பயப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .
ஆதி காலத்தில் "மௌரி" இன பழங்குடி மக்களுக்கு சொந்தமாக இருந்த சிறிய தேசம் தான் தற்போதைய நியூஸிலாந்து ஆகும் . பின்னர் வைட்டாங்கி ஒப்பந்தம் ( The Treaty of Waitangi) என்பது 1840 பிப்ரவரி 6 ஆம் தேதி நியூசிலாந்தின் வடக்கு தீவில் இருந்து பிரிட்டிஷ் மகுடம் மற்றும் மௌரி தலைவர்களின் பிரதிநிதிகளால் முதலில் கையெழுத்திடப்பட்ட ஒர் ஒப்பந்தமாகும். இது வரலாற்றிற்கும், நியூசிலாந்தின் அரசியலமைப்பிற்கும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாக மாறியுள்ளதுடன், நியூசிலாந்தின் அரசாங்கத்திற்கும் மௌரி மக்களுக்கும் இடையிலான அரசியல் உறவுகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது, இந்த ஒப்பந்தத்தின் உடனடி விளைவு என்னவென்றால், விக்டோரியா மகாராணியின் அரசாங்கம் நியூஸிலாந்து முழுமையிலும் நிலம் வாங்குவதற்கான முழு உரிமையையும் பெற்றது. இப்படி ஆட்சியைப் பிடித்த ஆங்கிலேயர்கள், மௌரி மக்களுக்குச் சிறு சிறு சலுகைகளை அவ்வப்போது வழங்கி அவர்களை சமரசம் செய்து கொண்டனர் .நியூஸிலாந்தில் நிறைய தெருக்களுக்கும் , இடங்களுக்கும் மௌரி பெயர்கள் உள்ளன . அதே சமயம் பெரிய பெரிய பதவிகளை, ஆங்கிலேயர்களே வகிக்கின்றனர் . நம் நாடுபோல் இட ஒதுக்கீடு அங்கே இல்லை . அதிகார வர்க்கத்தில் உள்ள ஆங்கிலேயர்கள் மௌரி இனத்தை தம்மை விட சற்றே கீழ் நிலையில் தான் வைத்துள்ளனர் .இருப்பினும் மௌரி, ஆங்கிலேயர் கலப்பு திருமணம் நடை பெற்று ஒற்றுமையாய் வாழ்வதும் காணமுடிகிறது .
எங்கள் மகன் வீட்டுக்கு சற்று அருகில், ஒரு ஆங்கிலேய - மௌரி தம்பதியும் அவர்கள் இரண்டு பெண் குழந்தைகளும் வசித்தனர் . எங்கள் பேத்திகள் அந்த பெண்குழந்தை பள்ளி நண்பர்களானதால் , அங்கே அவர்கள் வீட்டுக்கு விளையாடச் செல்வதுண்டு . நானும் அவர்களுடன் ஒரு நாள் அங்கே சென்றேன். அவர்கள் வீட்டில் நடந்த விந்தையான நிகழ்வு.அவர்களுடைய செல்ல பூனைக்குட்டி என் பேத்தி களுடன் சகஜமாக வாஞ்சை யுடன் விளையாடியதைப் பார்த்து நானும் அதனை தடவிக் கொடுக்க எண்ணி பக்கத்தில் சென்றது தான் தாமதம், உடனே பூனை கத்திக்கொண்டே பயந்து ஓடியது. நான் அருகில் செல்லச் செல்ல , என்னை பார்த்து மருட்சியுடன் மெது மெது வாக,பின்வாங்கியது. அவர்கள் வீட்டு குட்டிப் பெண் , "Because , you are a stranger.." நீங்கள் வேற்று மனிதர் , அதனால் உங்களைப் பார்த்து பயப்படுகிறது . என்று விளக்கம் அளித்தார் . செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிடுவது என்னவோ ஒரு அலாதி இன்பம் தான். திருச்சியில் என் கணவர் நான்கு லவ் போர்ட்ஸ் வளர்கிறார்கள் .இன்பமான பொழுது போக்கு அது.
நாங்கள் வளர்க்கும் செல்லக் கிளி (லவ் போர்ட்ஸ்)
வாக்கரேவா வை எங்களுக்கு சுற்றிக் காட்டிய guide, சுமார் 25 வயது மதிக்கத் தக்க ஒரு மௌரி இன வாலிபர் ஆவார் . அவர், ""ரூவமாக்கோ" என்கிற கடவுள் மௌரி இனத்தவர் வணங்கும் கடவுள் என்றும் , அந்தக் கடவுளர் தான் எரிமலையை கொண்டுவந்தவர் என்று அம்மக்கள் நம்புவதாகவும் கூறினார் . Ruaumoko – god of volcanoes, நாம் மழைக்கு வருண பகவான் , நெருப்புக்கு சூரிய பகவான், காற்றுக்கு வாயு பகவான் என்று இந்து மதத்தில் நம்புவது போலவே, மௌரி மக்கள் இயற்கையின் ஒவ்வொரு சக்திக்கும் ஒரு கடவுள் பெயரால் வழிபட்டு வந்தனர் . சுருங்கச் சொன்னால் நம்மைப் போலவே இயற்கையை வழிபட்டனர் எனலாம்.
டங்கரோவா என்பது கடலின் கடவுள் , தவ்ரி மெட்டியா என்பது காற்று மற்றும் புயல்களின் கடவுள் ;மஹூயிகா நெருப்பு தெய்வம் ! சொல்லப் போனால் இவர்களுடைய தெய்வங்கள், நட்சத்திர தெய்வம், மீன்களின் தெய்வம், வானவில் தெய்வம், என்று எண்ணிலடங்கா தெய்வங்களும் தெய்வநம்பிக்கையும் கொண்டவர்கள் . ஆனால் எல்லா தெய்வங்களிலும் ரூவமாக்கோ விற்கு ரெம்பவே பயப்படுவார்கள் . ஏனென்றால் ரூவமாக்கோ கோபம் கொண்டால் எரிமலை வெடித்து பேரழிவு ஏற்படுமல்லவா?
எங்கள் guide பையன் எங்களை அருமையாக வழிநடத்தி , ஆங்கிலத்தில் விவரித்து ,பொறுமையாக விளக்கம் கூறி எல்லா இடங்களுக்கும் கூட்டிப்போய் காண்பித்தார் . பல நாட்டவரும் சுற்றிப் பார்க்க வந்திருந்ததால் , அனைவருக்கும், பல மொழிகளில் வணக்கம் கூறினான். நம்மை நமஸ்த்தே என்று வரவேற்றது மகிழ்ச்சி அளித்தது .
வாக்கரேவா, ஒரு மாடல் மௌரி மக்கள் வசிக்கும் கிராமத்தில், ஒரு நீரோடை (வாய்க்கால் ) அமைக்கப்பட்டிருந்தது மேலே உள்ள பாலம் வழியாக நடந்து சென்று பார்த்தபோது , வாய்க்காலில் இரண்டு தடிமனான மௌரி பெண்கள் , மேலே இருந்து பார்வையாளர்கள் தூக்கி எறியும் காசுகளை தண்ணீரில் மூழ்கி எடுத்து அவர்கள் வாய் நிறைய அடைத்து வைத்துக்கொண்டனர். அந்த காட்சி வேடிக்கையாக இருந்தது.அவர்கள் வாயை திறந்தால் ஓர் உண்டியலே இருந்தது. காசு போட்டவர்கள் பலர்; அந்த பெண்களை வேடிக்கை பார்த்தவர்கள் பலர். அவர்கள் தடிமனாக இருப்பதற்கு அவர்கள் உணவு முறை ஒரு காரணமாக இருக்கலாம் .
நம் ஊரில் தெருக்கூத்து நடப்பதைப் போல் , அங்கு மௌரி நடுத்தர வயது ஆண் பெண்களின் நடன நிகழ்ச்சி ஓன்று , அங்கே உள்ள ஒரு திறந்த வெளி அரங்கத்தில் நடைபெற்றது தமது பழங்கால மௌரி ஆடை அணிகலன்களை போட்டுக் கொண்டு
அவர்கள் நடனமாடியது ரசிக்கும்படி இருந்தது.
மௌரி மக்களின் ஆடை அலங்காரம்
நம்மூர் கோலாட்டம் போன்ற நடனம் ஒன்றும் , ஆடினார்கள் . அப்போது குச்சியை அவர்களுக்குளேயே லாவகமாக தூக்கி போடுவதும், இன்னொருவர், கோலாட்ட குச்சியை லாவகமாக பிடித்துக்கொள்வதும் சிறப்பாக இருந்தது . அந்த ஆடவர்களுக்கு பெண் மணிகளும் மௌரி மொழில் பாட்டுக்களும் பாடினார்கள் . மொழி புரியாவிட்டாலும் பாடல்கள் இதமாக இனிமையாக , மனதை தொடும்படி இருந்தது . ஒரு நடுத் தர வயது பெண் , காதல் பாட்டு ஒன்று பாடினாள். பொதுவாக மௌரி இனத்தவர் அனைவருமே சற்று பருமனாக இருந்தாலும்
இவள் என்ன இப்படி பருமனாக இருக்கிறாளே என்று கூட நினைத்தேன் . ஆனால் அந்த பெண் அவளது வலது கையை மென்மையாக , மேலே தூக்கி அசைத்து அசைத்து , கண்களில் ஒரு வித நெகிழ்வுடனும், உணர்ச்சி பொங்க, அந்தக் காதல் பாடலைப் பாடத்துவங்கியபோது, நான் கலங்கிப் போய்விட்டேன். அவள் குரல் வளம் மிக நன்றாக இருந்தது . நம் ஊர் கிராமிய தெம்மாங்கு பாடலை கேட்பது போல் இருந்தது. இந்தப் பெண்ணுக்குள் இத்தனை திறமைகளா என்று வியந்தேன்! கல்லும் கனியும் வண்ணம் பாடுகிறாளே என்று திகைத்துப் போனேன் . இசையை ரசிக்க மொழி தேவை இல்லை ; ரசனை உணர்வு ஒன்றே போதும் என்பதை அக்கணம் என்னால் உணரமுடிந்தது. " இதயத்தின் மொழிகள் புரிந்துவிடும் ..." என்கின்ற பாடல் வரிகள் நினைவிற்கு வந்தன .
" உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து " - என்ற திருக்குறள் ஞாபகத்திற்கு வந்தது .
உலகில் உள்ள ஒவ்வொருவரும், உருளும் பெரிய தேருக்கு அச்சிலிருந்து தாங்கும் சிறிய ஆணியைப் போன்றவர்கள் ; அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது .
வள்ளுவனை விட சிறந்த அறிவுரை, இவ்வுலகில் யாரால் கூறமுடியும் ?
அங்கு நடனமாடிய மௌரி பெண்களின் தலைவி , என்னையும் மேடைக்கு அழைத்து , நாங்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் . அப்போது மலர்ந்த முகத்துடன் "ஹாப்பி நியூ இயர் " என்று நடனமாடிய அனைவருடனும், மேடையில் சென்று புத்தாண்டு வாழ்த்து பரிமாறிக்கொண்டதும் எப்போதும் மறக்க இயலாத இனிமையான நினைவுகள் ஆகும் .
வாக்காரேவா model கிராமத்தில் பழங்குடி மௌரி மக்கள் , வாழ்ந்த வீடுகள் , ஓலை பாய்கள், உபயோகித்த பொருட்கள் , அடுப்பு மண் பாண்டம் உட்பட, மற்றும் உலோக ஆயுதங்கள், கத்தி , அவர்கள் அணிகலன்கள் , மர உரி ஆடைகள் , எல்லாமே காட்சி படுத்தப்பட்டிருந்தன . அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்தேன் .
நியூஸிலாந்தின் தனி தன்மை வாய்ந்த மரங்களுள் , போஹுதுகாவா,(PHOHUTUKAWA) எனும் கம்பீரமான அழகிய மரங்கள் குறிப்பிட தக்கவை .அதன் இலைகள் நெல்லி மரத்து இலைகள் போல் சிறியது , பூக்கள் சிவப்பு நிறத்திலும், ரோஸ் நிறத்திலும் ஊசி போல் அமைந்துள்ளது . வாக்கிங் போகும் போது பார்த்தால் ,கீழே கொட்டி கிடப்பது சிவப்பு கம்பளம் விரித்த மாதிரி அழகாய் இருக்கும் . ஆக்லாந்தில் TEARAROA என்னும் இடத்தில் , அடர்ந்த காட்டில் , 600 ஆண்டுகளுக்கு முன் பழமையான , போஹுதுகாவா மரம் இருப்பதைப் பார்த்தோம்.
ஆக்லாந்தில் sheep farm ஒன்றையும் கண்டு களித்தோம். நியூசிலாந்தில் செம்மறி ஆடு வளர்ப்பு ஒரு குறிப்பிடத்தக்க தொழில். 130 ஆண்டுகளாக, செம்மறி ஆடு வளர்ப்பு நாட்டின் மிக முக்கியமான விவசாயத் தொழிலாக இருந்தது, 1982 ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை 70 மில்லியனாக உயர்ந்தது, பின்னர் பால் மாடு வளர்ப்பு அதிகரித்ததும் , ஆடுகளின் எண்ணிக்கை சுமார் 27.6 மில்லியனாகக் குறைந்தது. Romney (ரோம்னே) என்ற செம்மறி ஆடு அதிக மாக வளர்க்கப் படுகிறது . இந்த ஆட்டின் ரோமம் அடர்த்தியாக, பார்க்க நல்ல புஸ் புஸ் என்று இருக்கும் பெரிய மலை களில் ஒவொரு மந்தையிலும் சுமார் 200/300 ஆடுகள் கூட்டமாக மேய்கின்றன மந்தையிலிருந்து ஆடுகள் பிரிந்து ரோட்டிற்கு .வந்துவிடாமல் இருக்க மலையை சுற்றிலும் வேலி போடப்பட்டுள்ளது . இந்த ஆட்டு மந்தைகளை மேய்ப்பது மனிதர்கள் அல்ல . என்ன வியப்பாக இருக்கிறதா? ஆம் ! நாய்கள் தான் மேய்க்கின்றன . ஹன்டவே என்ற ஜாதி நாய்கள் மிகவும் புத்திசாலி தனமாக தன் கனத்த குறைக்கும் குரலால் இந்த ஆடுகளை ஒன்று விடாமல் மலைகளிலிருந்து திரும்பி அழைத்து வந்து விடுகிறது. ஒரு ஆடு கூட miss ஆகாத வண்ணம் ஆடு மேய்ப்பது இந்த நாய் களுக்கு கை வந்த கலை . ஆடுகளை ஓட்ட தங்கள் உரத்த,குரலில் குறைப்பதற்கென்றே, பயன்படுத்த ,அவை வளர்க்கப்பட்டன.
ரோபோக்களால் மனிதர்கள் வேலை இழக்க நேரிடும் என்று கேள்விப்பட்டுள்ளோம் ; ஆனால் நியூஸிலாந்தில் இந்த ஆடு மேய்க்கும் நாய்கள் வேலையை ரோபோக்கள் இப்போது செய்கின்றனவாம் .இந்த ரோபோ களுக்கு ட்ரான்ஸ் என்று பெயர் .
நாங்கள் சென்ற sheep farm ல் நாய்கள் ஆடு மேய்ப்பதை டெமோ செய்து காண்பித்தார்கள் . நேரில் கண்டு வியந்தோம். சலூனில் முடி வெட்டும் மெஷின் போல் கை மெஷின் வைத்துக்கொண்டு செம்மறி ஆடு ஒன்றின் முடியை வெட்டிக் காண்பித்தது மிகவும் வேடிக்கையாகவும் ,சுவாரஸ்யமாகவும் இருந்தது. என் பேத்தி மற்றும் சிறுவர்களை மேடைக்கு அழைத்து அவர்களையும் ஆட்டிற்கு முடி வெட்ட வாய்ப்பளித்தார்கள் .பிள்ளைகள் ஆசை ஆசை யாய் செம்மறி ஆட்டிற்கு முடி வெட்டினார்கள் . பின் குட்டி குட்டி ஆடுகள் வரவழைக்கப் பட்டன . அந்த ஆட்டுக்குட்டிகள் அழகை வருணிக்க வார்த்தைகள் இல்லை. கொள்ளை அழகாய் இருந்தன. தொட்டால் பஞ்சு மெத்தை போல் இருந்தது. ஆசையாய் மடியில் தூக்கி வைத்துக்கொண்டோம் . அந்த அமைப்பாளர் வந்து " Do you want to feed them milk ?" என்று கேட்டவாறே எங்களிடம் பீடிங் பாட்டில் நிறைய பால் கொண்டுவந்து கொடுத்தார் .நானும் அதனை வாங்கி , அளவில்லா ஆனந்தத்துடன் ஆட்டுக்குட்டிக்குப் பால் புகட்டினேன்.
ஷீப் பார்மில் செம்மறி ஆட்டிற்கு நான் பால் புகட்டும் போது .......
நியூஸிலாந்திற்கு ஆடுகள் ஒரு பொக்கிஷம் .ஆட்டு ரோமம் மற்றும் தோல் முதலியவற்றால் பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் , மற்றும் ஏற்றுமதி வணிகமும் நடைபெறுகின்றன. நியூஸிலாந்தில் ஒரு காலகட்டத்தில் ஒரு மனிதருக்கு 30 ஆடுகள் வீதம் இருந்தன . இப்போது ஒரு மனிதருக்கு 7 ஆடுகள் என்ற விகிதத்தில் இருக்கின்றன
புத்தாண்டு அன்று காலை எழுந்ததுமே , கோவிலுக்கு போகவேண்டும் என்று தோன்றியது. திருச்சியிலிருந்தால் நிச்சயம் ஐயப்பன் கோவிலுக்குச் சென்றிருப்போம் . டூர் பிளானில் , கோவில் ஏதும் போட வில்லை. இங்கே போய் கோவிலை எங்கு தேடுவது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன் . ஹோட்டலில் மற்றவர்கள் குளித்து ரெடி ஆகுமுன் , நானும் என் கணவரும் முதலில் ரெடி ஆகிவிட்டோம். சரி , சற்று வெளியில் வாக்கிங் போகலாமே என்று ஹோட்டலுக்கு வெளியில் வந்து காலார சுமார் 100 மீட்டர் நடந்து சென்றோம். அங்கே நாங்கள் எதிர் பார்க்காத வண்ணம் வட இந்தியர்கள் குஜராத்தி காரர்கள் காரில் குடும்பம் குடும்பமாக வந்து இறங்கி ஒரு கட்டிடத்திற்குள் சென்றனர் . நாங்களும் சுவாரஸ்யமாக அவர்களை பின் தொடர்ந்தோம். அந்த கட்டிடம் உள்ளே full air conditioned hall சுத்தமான வெள்ளை பளிங்கு கற்களால் ஆனது , நடுவில் அழகிய ராதா கிருஷ்ணா சிலை பூஜை நடந்து கொண்டிருந்தது . அதன் பெயர் "சுவாமி நாராயணன் கோவில் " வட இந்தியர்களால் கட்டப் பெற்ற, சிறிய, மிக அழகான, கோவில். எப்படி சுவாமி ஐயப்பன் எங்களுக்கு அன்று ,தரிசிக்க வழி வகுத்தார் என்று நினைக்கும்போது, உடம்பெல்லாம் புல்லரித்து . புது வருடம் , கோவிலுக்கு போக வேண்டுமே என்று காலையில் நினைத்தது நிறைவேறியது. எண்ணங்கள் தூய்மையாய் இருந்தால் , நாம் நினைத்தது நடக்கும் தானே ? அங்கு சிறிது நேரம் அமர்ந்து வட இந்தியர்களின் பஜனையைக் கேட்டு மகிழ்ந்தோம் . தீப ஆராதனை தரிசனம் செய்தோம். இனிப்பு அவல் பிரசாதத்தை உண்டு மகிழ்ந்தோம். இதற்குள் என் மகன், மருமகள், எல்லாம் எங்களை தேட ஆரம்பித்து விட்டார்கள் . பின், ஒரு வழியாக அவர்களையும் கோவிலுக்கு வரச்செய்து, எல்லோரும் புத்தாண்டில் பெருமாள் அருள் பெற்றோம் .
நியூசிலாந்தில் 200க்கு மேற்பட்ட பூர்வீக பறவை இனங்கள் உள்ளன . அவற்றில் பல உலகில் வேறெங்கும் காணப்படவில்லை .நியூஸிலாந்தின் தனித்துவமான பறவைகளில் , மாவோ, கீவீ , மற்றும் ஜெயண்ட் வீட்டா என்பதாகும் .கீவீ என்ற பெயரில் மனித இனத்தவரும் இங்கு நியூஸிலாந்தில் வசிக்கின்றனர் . நாங்கள் அங்கே சீனர்கள் தங்களது 175 ஆவது ஆண்டு நிறைவு நியூஸிலாந்து வாழ்க்கையை கொண்டாடியதைக் கண்டோம் . பல இடங்களில் பேனர் வைத்து "Chinese celebrating -175th year of stay in New Zealand " என்று எழுதப்பட்டிருந்தது . நியூஸிலாந்தில் சொத்து விலை, மிக அதிகமாக ஏறுவதற்குப் பணக்கார சீனர்கள் அதிகம் இருப்பதே காரணம் என்று நான் நினைக்கிறேன். வீடுக்கள் Hot cake ஆக ஏலம் போட்டு, போட்டி போட்டுக்கொண்டு விலை போவதை அங்கு நான் நேரில் பார்த்தேன். என் மகனுக்காக ஒரு வீடு வாங்க ஏலத்திற்கு சென்றோம் . நங்கள் 1மில்லியன் (10 லட்சம்) டாலர் வரை ஏலம் கேட்டோம்.அதற்கு மேல் விலை கேட்க வேண்டாமென்று என் மகனை , என் கணவர் தடுத்துவிட்டார் . அதனால் நாங்கள் அதற்கு மேல் ஏலம் கேட்கவில்லை . எங்களுக்கு போட்டியாக வந்து ஏலம் கேட்ட சீன தம்பதியினர் 10,20,000 டாலருக்கு அந்த வீட்டை ஏலத்தில் வாங்கிக்கொண்டனர் .அந்த மாதத்திலேயே நியூஸிலாந்து குடியுரிமை பெறாத அயல் நாட்டினர் பழைய வீடுகளை (Existing Homes ) வாங்க அரசாங்கம் தடை விதித்தது . எனவே என் மகன் பின்லாந்து குடியுரிமை பெற்றிருப்பதால், வேறு வழியின்றி , தனியாக இடம் வாங்கி புதிதாக வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் . நியூஸிலாந்தில் சராசரி சுமாரான வீடு வாங்குவதற்கு 5 to 5.5 மில்லியன் டாலர் ஆகும் .வெலிங்டன் , ஆக்கலன்ட் போன்ற பெரு நகரங்களில் 9 to 9.5 மில்லியன் டாலர் ஆகும் .உலகின் பல மில்லியனர், மற்றும் பில்லியனர்கள் நியூஸிலாந்தில் தம் இரண்டாவது வீட்டைக் கொண்டுள்ளனர் .ஏனெனில் இது உலகளாவிய ஆபத்து மண்டலங்களிருந்து விலகி ,உலக மோதல்களில் அதிகம் ஈடுபடாத அமைதியான நாடு .
இன்னுமொரு காரணம், இங்கு பருவகாலம் தலைகீழாக உள்ளது. நான் ஏற்கனவே சொன்னது போல் அமெரிக்க, ஐரோப்பா, கனடா, நாடுகளில் கடும் குளிர் காலமாக இருக்கும் போது நியூஸிலாந்தில் கோடை காலம் . தெற்கு அரைக்கோளத்தின் சூடான வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் ஒரு அழகான நேரத்தை செலவிட நியூசிலாந்தில் இரண்டாவது வீடு இருக்க பலர் விரும்புகிறார்கள் நியூஸிலாந்தில், வாழ்க்கை செலவு, கணவன் மனைவி இரண்டு பேர் மட்டு முள்ள குடும்பத்திற்கு மாதம் குறைந்தது 3500 to 5000 டாலர் செலவு ஆகும் . சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா போல நியூஸிலாந்தும் வந்தாரை வாழவைக்கும் பூமி .
பொதுவாக அமெரிக்காவில் ஹௌசிங் மார்க்கெட் , டல் ஆக இருக்கும். Existing Home நல்ல வீடு விற்பனைக்குப் போட்டால் கூட ,வாங்க ஆள் இருக்காது . ஆனால் நியூஸிலாந்தில் நல்ல வீடுகள் ஏலம் போட்டு சொன்ன தேதியில் எதிர்பார்த்த விலைக்கு மேலே விற்கலாம் . அவ்வளவு டிமாண்ட் இருக்கிறது .
இனி அங்கு நாங்கள் சந்தித்த , பழகிய அன்பு உள்ளங்களை , மனிதர்களை பற்றி சில தகவல்கள் எழுத ஆசைப் படுகிறேன் . புதுவயல் ராமையா அவர் மனைவி டாக்டர் . சித்ரா ,அவர்கள் பிள்ளைகள் மீனு, ஆதித்யா இவர்கள் வீட்டில் அறுசுவை விருந்து உண்டோம் . ஆதித்யா நன்றாகத் தமிழ் பேசுவான்; பாசமுடன் பழகுவான்;.
அதே புதுவயலை சேர்ந்த மீனா, முத்து , குடும்பம், அவர்கள் பிள்ளைகள் ஐஸ்வர்யா , விஷ்வா .
திருமதி .மீனா முத்து மிகவும் பொறுமையாக அருமையாக எங்கள் பேத்திகள் ஆர்த்தி பாரதிக்கு , தமிழ் எழுதவும் படிக்கவும் கற்பிக்கிறார்கள்
பலவாங்குடியைச் சேர்ந்த திரு. லட்சுமணன் செட்டியார் அவர் மனைவி டாக்டர் ,மணிமேகலை ஆச்சி. upper hutt ல் , (என் மகன் வீட்டுக்கு சற்று தொலைவில்) வசிக்கிறார்கள் .
ஆக்லாந்தில் பல ஆண்டுகளாக இருக்கும், Dr .சொக்கலிங்கம் நாராயணன் ,சிறந்த மருத்துவராக பணிபுரிவதுடன் ,தமிழில் சிறப்பாக எழுதும் புலமை உடையவர். ஆண்டு தோறும் தாயகத்திலிருந்து சிறந்த பேச்சாளர் ஓரிருவரை , ஆக்லாந்திற்கு வரவழைத்து , பேசச்செய்து , நம் கவியரசு கண்ணதாசனுக்கு சிறப்பாக விழா எடுத்து வருகிறார்.
வலையபட்டியை சேர்ந்த திருமதி அபிராமி ஆச்சி (பிள்ளையார் நோன்பு அவர்கள் வீட்டில் கொண்டாடினோம்) பிள்ளையார் நோன்பன்று என் கணவரின் பிறந்தநாளை அவர்கள் வீட்டிலேயே கொண்டாட நேர்ந்தது என்றும் என் நினைவில் இருக்கும். வடை பணியாரம், இட்லி சாம்பார், சட்னி எல்லாம் சில்வர் வாளியில் வைத்து பரிமாறினார்கள்.நியூஸிலாந்தில் அவர்கள் வீட்டில் சுவையான செட்டிநாட்டு பலகாரங்கள் சாப்பிட்டோம் .
ஐஸ்வர்யா- ஸ்ரீனிவாஸ்; அவர்கள் மகள் பிரகதி ; ஐஸ்வர்யா ஒரு .நல்ல பாடகி . sun tv பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் .குறிஞ்சி குமரன் கோவிலில் விழாக்களில் நன்றாகக் பாடுவார் . வீட்டிற்கே வந்து, எங்கள் ஆர்த்தி, பார்தி, மற்றும் அவர்கள் மகள் பிரகதி மூவரையும் அமரவைத்து , விடுமுறை காலத்தில் வாய்ப் பாட்டு கற்பிப்பார்.
வெற்றியூரைச் சேர்ந்த பஞ்சநாதன் அண்ணன் . அவர்கள் முதலில் வசித்தது மலேசியா வாகும் . மலேசியா வில் சீனப் பெண்ணை காதல் மணம் புரிந்தவர்கள் . மனைவி பெயர் பாஸ்வேன் (Fashwan). அவர்கள் நியூஸிலாந்தில், தன் மனைவி பாஸ்வேன் , பிள்ளைகள் யசோதா, அனந்தா,ஆகியோருடன் வசிக்கிறார்கள் .மனைவியை அனுராதா என்று பெயரிட்டு அழைக்கிறார்கள் .அவர்கள் வீட்டில் அறுசுவை விருந்து உண்டோம் .அனுராதா அவர்கள் சிரித்த முகத்துடன் தானே பரிமாறியது சிறப்பு அம்சம் .பஞ்சு அண்ணன் ஆண்டுதோறும் கோலாலம்பூர் சென்று தைப்பூசத்தன்று தொடர்ந்து காவடி எடுக்கிறார்கள் என்று அறிகிறேன் . அவர்கள் மனைவி அனுராதா என்ற பாஸ்வேன் ஆரம்பத்தில் சிங்கப்பூரில் வேலை பார்த்தார்களாம் .அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டடிருந்தபோது , சிங்கப்பூர் பிரதமர், லீ குவான் யூ , பற்றி சில சுவாரஸ்யமான செய்திகளைக் கூறினார்கள் .லீ குவான் யூ அவர்கள் ஆக்கலன்டில் உள்ள ரோட்டரூவா என்னும் ஊருக்கு வருடம் ஒரு முறையேனும் Mud bath (மணல் சேற்றை உடலில் பூசி குளிப்பது ) எடுக்க சிங்கப்பூரிலிருந்து இங்கு வருவார் என்று கூறினார்கள் லீ குவான் யூ 95 ஆண்டு நலமுடன் வாழ்வதற்கு இதுவும் ஒரு காரணமோ? . லீ குவான் யூ அவர்களை சரித்திரம் மறக்காது !
கடைசியாக நாங்கள் தாயகம் திரும்பு முன் , எங்கள் மகன் அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்க்கும் ஆங்கில நண்பர் ஒருவர் வீட்டிற்கு , விருந்திற்குச் சென்றோம்.அவர்கள் வீடு, சற்றே காடுகளுக்கிடையில் ஒரு சிறிய மலை மீது விஸ்தீரமான இடத்தில் தன்னந் தனியாகக் கட்டப்பட்ட வீடு .சுற்று முற்றும் கடை கண்ணி அக்கம் பக்கம் வீடு எதுவுமே இல்லை . Thomas Hardy யின் "Far from the madding crowd " என்ற தலைப்பு அந்த வீட்டின் அமைப்புக்கு சாலப் பொருந்தும் என நினைக்கிறேன் .அவர்கள் ஆசையாக வளர்ப்பது இரண்டு செம்மறி ஆடுகளை . ஒன்றின் பெயர் ராம்போ , மற்றொன்று யூஜினி .இன்னுமொரு குட்டி ஆடு நின்றது . அதற்க்கு பெயர் வைக்கவில்லை என்றார்கள். ஏன் என்று கேட்டதற்கு " we are soon going to put her in the freezer.." என்று கூறினார்கள் . அதாவது அதனை சீக்கிரமே உணவுக்கு பயன் படுத்தப் போவதால் அதற்கு பெயர் வைக்க வில்லையாம் . நான் சைவ உணவு சாப்பிடுபவள் , எனவே அந்த ஆட்டைப் பார்த்து இரக்கப் பட்டேன் . என்னால் வேறு என்ன செய்ய முடியும் ?
தாயகம் திரும்புவதற்கு ஒருநாள் முன்னாள் , மதுரையைச் சேர்ந்த கிருத்திகா, சரவணன் என்ற இளம் தம்பதியர் வீட்டிற்க்கு, விருந்திற்குச் சென்றோம். தம்பதியர் இருவரும், பணி புரிகிறார்கள் . கிருத்திகா எங்கள் பேத்தி ஆர்த்திக்கு, நடனக் கலைவிழா விற்கு, அழகாக நேர்த்தியாக , ஒப்பனை செய்தவர். விரைவில் இந்த தம்பதியருக்கு மழலைச் செல்வம் கிடைக்கட்டும் என்று வாழ்த்தி விடைபெற்றோம்
ஒரு வழியாக தாயகம் திரும்பும் நேரம் வந்தது. பேத்தி களிடம் பிரியா விடை பெற்று விமானம் ஏறினோம் .சிங்கப்பூர் வந்து இறங்கியதும் அடுத்த கனக்ஷன் flight க்கு சரியாக 8.30 மணி நேரம் இடைவெளி இருந்தது.பகல் முழுவதும் சிங்கப்பூ சுற்றிப்பார்க்க ட்ரான்சிட் விசா என்ட்ரி பெர்மிட் அந்த நாட்டு அரசாங்கம் வழங்குவதால், அதனைப் பயன்படுத்தி சிங்கப்பூர் ஊருக்குள் சென்றோம் . 18 ஆண்டு களுக்கு முன்னால் எங்கள் மகன் கண்ணனுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த பாபு என்பவர் ஏர்போர்ட் வந்து எங்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் . சிங்கப்பூர் என்றாலே எனக்கு ஒரு மயக்கம் உண்டு . என் இளமைக் காலத்தில் 9 ஆண்டுகள் துள்ளலுடன், துடிப்புடன் , 1958 முதல் 1966 வரை , சந்தோசமாக கழித்த இன்ப பூமி அது . சில மணி நேரங்கள் காலை முதல் மாலை வரை சிங்கப்பூரில் இருக்கப் போகிறோம் என்ற நினைப்பே என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது .பாபுவின் வீடு , ஒரு அடுக்கு மாடி வீடு .மனைவி பபிதா ; ஒரே ஒரு செல்லப் பெண் 10 வயது ஜென்னி .பெங்களூர் சென்னை, ஜெர்மனி இல் வேலைபார்த்து விட்டு தற்சமயம் பாபு - பபிதா தம்பதிகள் , சிங்கப்பூரில் வசிக்கிறார்கள் . அளவான அழகான சிறிய குடும்பம் . சிங்கப்பூரில் எல்லா இடங்களும் சுற்றி பார்க்க நேரமில்லை என்றாலும் ஒரு சில இடங்கள பார்த்தோம்.சிங்கப்பூர் தெண்டாயுத பாணி கோவிலைப் போய் பார்த்தபோது, அவ்வளவு ஒரு மன நிறைவாக இருந்தது .50 ஆண்டுகளுக்கு முன்னர் , நானும் என் தோழி , முல்லை ராமையாவும் , ஒரே மாதிரி உடை அணிந்து பட்டுப் பாவாடை, பட்டுச் சொக்காய் , ஜிமிக்கி கம்மல் , ரிப்பன் வைத்து மடித்துக்கட்டிய ரெட்டை ஜடை போட்டு, தலை நிறைய பூ வைத்து கொண்டு, இந்த கோவிலில் , மேடைக் கச்சேரி செய்தது , எல்லோரும் எங்களை பாராட்டியது, பளிச் சென்று நினைவிற்கு வந்து, என்னை கடந்த காலத்திற்கு கூட்டிச்சென்றது .நாங்கள் கச்சேரி செய்த , அந்த மேடையைப் பார்த்தபோது , அந்த இளமைக் காலம் மீண்டும் வராத என்று தோன்றியது .அந்த மேடைக்கு பின்னல் மிகப்பெரிய நடராஜர் சிலை வைக்கப் பட்டுள்ளது .
..
கோவிலில் என்னைத் தெரிந்த ஆச்சிமார்கள் சிலர் " நீ கலையா ??!" என்று ஆச்சர்யத்துடன் வினவி நட்பு பாராட்டிப் பேசியது விந்தையிலும் விந்தையாகும். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நான் அங்கு வசித்த போது என்னை அறிந்தவர்கள் , (நான் அவர்களை நினைவில் நிறுத்தாத போதும் ) அவர்கள் , என்னை ஞாபகம் வைத்து விசாரித்தது அவர்களுடைய சிறப்பு என்றே சொல்லவேண்டும் .
பாபு வீட்டில் எங்களுக்காக key board வசித்துக் காண்பித்தார் . சிரித்துப் பேசி மகிழ்ந்து , உணவருந்தி ,சரியான நேரத்திற்க்கு ஏர்போர்ட் வந்தோம். பாபு, பபிதா, ஜென்னி, எங்களை ஏர்போர்ட் வரை கூட்டிவந்து வழியனுப்பினார்கள் . சிங்கப்பூரை பிரிய மனமின்றியே விமானத்தில் ஏறிச் சென்னை வந்தடைந்தோம் .
kaykonara (கேகோனாறா ) ...!! மௌரி மொழியில், கேகோனாறா, என்றால் விடைபெறுகிறேன் என்று பொருள் . Bye Bye . வாழ்க வளமுடன் . வாழ்க வையகம். வளர்க நியூஸிலாந்து .!!
வணக்கம் .-

காய்கறி தோட்டத்தில்

மௌரி நடனக் குழு தலைவியுடன் நானும் என் பேத்தியும்

சிங்கப்பூர் தெண்டாயுத பாணி கோவிலில் நான் இளமையில் கச்சேரி செய்த மேடை ; உடன் நிற்பது என் கணவரும், பாபு மனைவி பபிதா மற்றும் அவர்கள் மகள் ஜென்னி
கோவிலில் என்னைத் தெரிந்த ஆச்சிமார்கள் சிலர் " நீ கலையா ??!" என்று ஆச்சர்யத்துடன் வினவி நட்பு பாராட்டிப் பேசியது விந்தையிலும் விந்தையாகும். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நான் அங்கு வசித்த போது என்னை அறிந்தவர்கள் , (நான் அவர்களை நினைவில் நிறுத்தாத போதும் ) அவர்கள் , என்னை ஞாபகம் வைத்து விசாரித்தது அவர்களுடைய சிறப்பு என்றே சொல்லவேண்டும் .
பாபு வீட்டில் எங்களுக்காக key board வசித்துக் காண்பித்தார் . சிரித்துப் பேசி மகிழ்ந்து , உணவருந்தி ,சரியான நேரத்திற்க்கு ஏர்போர்ட் வந்தோம். பாபு, பபிதா, ஜென்னி, எங்களை ஏர்போர்ட் வரை கூட்டிவந்து வழியனுப்பினார்கள் . சிங்கப்பூரை பிரிய மனமின்றியே விமானத்தில் ஏறிச் சென்னை வந்தடைந்தோம் .
kaykonara (கேகோனாறா ) ...!! மௌரி மொழியில், கேகோனாறா, என்றால் விடைபெறுகிறேன் என்று பொருள் . Bye Bye . வாழ்க வளமுடன் . வாழ்க வையகம். வளர்க நியூஸிலாந்து .!!
வணக்கம் .-

No comments:
Post a Comment