Saturday, February 29, 2020

வாழ்த்துரை

    
           முனைவர். சரசுவதி இராமநாதன் 


                                                   வாழ்த்துரை.

                           மெய்வழி மெய்யப்ப ஐயாவையும் , அவர் மகன்களான மெ.திரு. அரசு ஐயா, Dr .மெ. சுந்தரம்  ஐயா , எல்லோரையும் நான் நன்கு அறிவேன். மெ.திரு. அரசு ஐயா, சிங்கப்பூரில் தமிழ் அறிந்த நல்லவர். அங்கு நான் சொற்பொழிவு ஆற்றிய போது பாராட்டி ,வீட்டிற்கு அழைத்து விருந்து தந்தார். அவரது அன்பு மகள் , கலைச்செல்வியும், மருமகன் நெற்குப்பை இராமநாதனும் என்னிடம் மதிப்பும், பாசமும், கொண்ட இணையர். அண்மையில் இராமநாதனின் 70 ஆவது  பிறந்தநாள் மங்கலத்திலும் வாழ்த்துரை வழங்கினேன்.

                           பயணம் சிலருக்கு ஒத்து வராது . சிலருக்குப்  பிடிக்காது. பயணம் சென்றாலும் அங்கு நாலு இடங்களைப் பார்த்து இரசிக்கத் தெரியாது. அப்படி இடங்களைக் கண்டு மகிழ்ந்தாலும், நினைவில் நிற்கும்படி ,சுவைபட  வர்ணித்து எழுதத் தெரியாது. 


                              கலைச்செல்வி தமிழறிவும்,எழுத்தறிவும் , மிக்க தங்கை. பல இதழ்களில் கட்டுரைகள் தந்தவர். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?.  அற்புதமான நடையில் , அழகான பயண நூல் தந்துள்ளார். இவர்களின் மகன்கள்  அமெரிக்கா, நியூஸிலாந்து என வெளிநாடுகளில் வசிப்பதால் , நமக்கு அவற்றைப்  பற்றிய, நல்ல பயண இலக்கியம் கிடைத்தது.  வாழ்க! 


                              பின்லாந்து பனி மிகுந்த இடம் ; அங்கு பின்னிஷ் மொழி தான் தாய் மொழி ; அதிகம் ஆங்கிலம் தெரியாதவர்கள் என்று கூறும் நூலாசிரியை, " சிறு புன்னகை , கை குலுக்கல்,ஓரிரு ஆங்கில வார்த்தைகளில்  அன்பைப் பரிமாறிக்கொள்வோம் " என்கிறார்!. உண்மைதான் . பனிப்பொம்மை  செய்து படமும் போட்டுள்ளார் .காரட்டை வெட்டி மூக்கும் , திராட்சையால் கண்களும் செய்தாராம் .  "தூய்மையான காற்றைச் சுவாசிக்க வருக!"  என அறிவுப்புத் தந்துள்ளார்களாம். இன்றைய  நமது நாகரிக உலகில் , தூயநீர் , இயற்கைக் காற்று  எங்கே கிடைக்கிறது? 

                            
                              எனக்கு ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து , பிடித்த நாடுகள். மக்கள் தொகை குறைவு ; இயற்கை எழில் அதிகம்!. வடக்கு தெற்கு , தீவுகளை விவரித்து , சிங்கப்பூர் விமான நிலையத்தின் அழகையும் எடுத்துரைக்கிறர். கடலும், மலையும், காய்கனிக் கூட்டமும், பால் வளமும், நிறை  நியூசீலாந்தை  நம் கண் முன் கொணர்ந்து விடுகிறார். ரோஜக் கூட்டம் , நமது  "ரோஜாவின் ராஜா " நேரு மாமாவை  நினைவூட்டியதாம்.  குறிஞ்சி குமரன் கோவில் , வெலிங்டன் தாவரவியல் பூங்கா, என அனைத்தும் படங்கள் போட்டுச் சொற்சித்திரமாகவே  தருகிறர். ஆக்லாந்தில்  எரிமலை வெடித்த இடம்  குறித்தும்  மறவாமல் குறிப்பிடுகிறார். மௌரி மக்கள்  வேத காலத்து இந்தியர் போல்,  இயற்கையை வழிபடுகின்றனராம் .


                             மொத்தத்தில் , சுவையான பயண இலக்கியம்  தந்துள்ள கலைச்செல்வி,  " உலகம்  சுற்றும் தமிழச்சி"-  யாக , வலம் வருக!  இதுபோல் நூல்கள் பல தருக!   - வாழ்க!!.




No comments:

Post a Comment