Sunday, February 16, 2020

பீமரத சாந்தி விழாவில், பேரன் பேத்திகள், வாசித்தளித்த வாழ்த்து மடல் .

பீமரத சாந்தி விழாவில், பேரன் பேத்திகள்,  வாசித்தளித்த  வாழ்த்து மடல் .



இராமநாதன் செட்டியார்  :::   கலைச்செல்வி ஆச்சி 



ஏற்றமிகு  எழுபது காணும் ஐயாவே   - உம்மைப் 
போற்ற  மொழியேது ,   எங்களிடம் ?!  - நீவீர் 
காணாத நாடில்லை ; படிக்காத செய்தியில்லை
சீரான  எண்ணம் கொண்டோய் !
நேரான பார்வை  கொண்டோய் !! -நீவீர் 
நித்தமும் வாகை சூடும் , பங்கு சந்தையின்
சிந்தனை மாறாச் செயல் வீரர் அன்றோ ?!  
 ஐயா ......
சற்றும் தளரா,   இளமையின் ரகசியம் என்ன ??
சற்றே, எம்  காதோரம் கூறுங்களேன் !!

எங்கள் அப்பத்தா அனுசரிப்பா?  STOCK MARKET பரபரப்பா ??,
 நீவீர் வளர்க்கும் , பிஞ்சுக் கிளிகளின் கொஞ்சு மொழியா ?? 
ஐயா ......
 சற்றும் தளரா,   இளமையின் ரகசியம் என்ன ??
சற்றே, எம்  காதோரம் கூறுங்களேன் !!


வயலூர் முருகன் திருவருளா? -மலைக்கோட்டை மாநகரின் 
காவிரி நீர் மகிமையா ? ; "கல்கத்தா  சோமையா " மரபணுவா ??
 ஐயா .....
 சற்றும் தளரா,   இளமையின் ரகசியம் என்ன ??
 சற்றே, எம்  காதோரம் கூறுங்களேன் !!

பட்டியாயா   சௌந்தரத்தின்    உறுதியோடும் 
பாட்டையா   திருநாவுக்கரசரின் பண்போடும் ;             
பார்புகழக்  கோலோச்சும், பாசமிகு ஐயாவே ,
உந்தன் ,
சற்றும் தளரா,   இளமையின் ரகசியம் என்ன ??
சற்றே, எம்  காதோரம் கூறுங்களேன் !!


கலைமகளாம்  அப்பத்தா  கலைச்செல்வி 
எங்கள் ஐயாவின்  வாழ்க்கையிலே
அன்பை  அறமாக்கி ,அரசாட்சி செய்யவந்தோய் 
தும்பைப் பூப்போன்ற தூயமனம் கொண்டவளே,
"தடித்ததோர் சொல்லைத் தனை மறந்தேனும் கூறா"  
"தமிழ் சான்றோர் -அரசு" பெற்ற திருமகளே,  அழகுருவே,  குலமகளே !     
 கன்னித் தமிழில் உந்தன் கடைவாய் அமுதூற  
தமிழண்ணல்  உந்தனுக்குத் தாலாட்டுப் பாட்டியற்ற 
பொய் சொல்லா  மெய்யப்பர் சீராட்ட , சிங்கப்பூர் பாராட்ட ,
தலைமகளாய்ப்   பிறந்தவளே   - எங்கள்  அப்பத்தா கலைச்செல்வி
  
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் ..?  உந்தன்
 பண்பிற்கும்  உண்டோ  பாசத்தின் எல்லை ??
 புன்சிரிப்பின்றி,   வேறேதும் காணத்தான் முடியுமோ, உன் முகத்தில் ?   
 கலைமகளாம்  அப்பத்தா  கலைச்செல்வி 
 சிடு சிடுப்பாய் இருக்க தெரியாதவர் - ஆனாலும்  ;     
 கருமத்தில் கண்ணனவர் ;- அப்பத்தா  கலைச்செல்வி 

படிக்காத புத்தகமுண்டா?     பழகாத மனிதருண்டா ?
எழுதாத மலர்தான் உண்டா? - உந்தன்
அமெரிக்க சுற்றுலா நினைவலைகள் என்ன ?
பின்னி இழுக்கும் பின்லாந்து கட்டுரை என்ன ?  
நெஞ்சை அள்ளும் நியூஸிலாந்து அனுபவங்கள் என்ன ?   
கலைமகளாம்  அப்பத்தா  கலைச்செல்வி 

பார்முழுக்கப் "பெயர்" எடுக்கும் பண்புமிகு அப்பாக்கள் 

நீ பெற்ற முத்துக்கள் ; தமிழ்ப்  பண்பு மறவாமல்
கடல் கடந்து வாழ்ந்தபோதும்,  - நீ   
சீராட்டி பாராட்டி வளர்த்த கதை  மறக்கவில்லை
        
ஐயா அப்பத்தா இன்னும் பல்லாண்டு அரசாள ,
பேரன் பேத்தியருடன்  "கலைஸ் வில்லா " மகிழ்ந்திருக்க 
வம்சம் வளர்ந்து  வாழ்வாங்கு வாழ்வதற்கு
 நல் தெய்வம் துணை நிற்கும் !!  

                அன்புடன், பேரன் பேத்திகள்                           
 வினீத், சிந்து, சூரியா, ஆர்த்தி, பார்த்தி, ஹரிஷ்.

          

            
     
           


           
              



             





             



               

No comments:

Post a Comment