Saturday, February 1, 2020

நெஞ்சை அள்ளும் நியூஸிலாந்து chapter 6

chapter 6

நெஞ்சை அள்ளும் நியூஸிலாந்து

அனைவருக்கும் "  கியோ ஓரா ". "  கியோ ஓரா " என்றால் மௌரி மொழியில் வணக்கம் என்று  பொருள்  . எனது பயணக்கட்டுரை வரிசையில் தற்போது  நான் எழுத விருப்பது  நியூஸிலாந்து நாட்டு பயணக்கட்டுரை.   பின்லாந்தில் வசித்த எனது மூன்றாவது புதல்வர் ராம்நாத் கண்ணன்  நியூஸிலாந்திற்கு மாற்றலாகி , தற்போது அங்கு வசித்து வருகிறார். 

நானும் என் கணவரும் 2017 டிசம்பர் மாதம் நியூஸிலாந்து சென்றோம் . மூன்று மாதங்கள் நாங்கள் அங்கே தங்கி இருந்த போது , அவ்வப்போது  அலுவலகத்திற்கு லீவு போட்டு  மெனக்கெட்டு  அங்கு சுற்றியுள்ள பல பகுதி களையும்  கண்ணன் சுற்றி காண்பித்தது  சிறப்பம்சம் .உலகிலேயே தூய்மையான பின்லாந்துக்கு பின் , சற்றும் தூய்மையில் குறைவில்லாத, சில்லென்ற காற்றுக்குப்  பஞ்சமில்லாத , நியூஸிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக, என் மகன் கண்ணன் குடும்பத்துடன் வசிக்கிறார் . அங்கே நான் பார்த்த இடங்களை பற்றியும்,  சந்தித்த, பழகிய, மறக்க முடியாத நபர்களை பற்றியும் எழுதுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் .


நியூஸிலாந்து பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சுமார் 4.5 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு சிறிய  தீவு நாடு . வடக்கு தீவுகள், தெற்கு தீவுகள்
(North island and south  island ) என்று இந்த நாட்டை இரு பாகமாக குறிப்பிடு கிறார்கள் . வெல்லிங்டன் இதன் தலை நகரம் ஆகும்.  நியூஸிலாந்து அதன் பூர்வீகம், மௌரி கலாசாரம், மற்றும் மிக அழகிய நிலப்பரப்பு ஆகியவற்றிற்குப்  பிரபலமானது  

நானும் என் கணவரும் , சென்னையிலிருந்து சிங்கப்பூர் , சிங்கப்பூரிலிருந்து  ஆக்லாண்ட் , அதன் பின் அங்கிருந்து  வெல்லிங்டன் (நியூஸிலாந்து ) என்று மூன்று விமானத்தில் பயணித்து  வெல் லிங்டன்  போய் சேர்ந்தோம் .சிங்கப்பூர் விமான நிலையத்தில் அடியெடுத்து வைத்ததுமே பிரமித்துப்  போனேன் .9 வயது  சிறுமியாக இருந்த பொது  50 ஆண்டு களுக்கு முன் பார்த்த அதே சிங்கப்பூர் விமான நிலையத்தையே  இப்போதும் பார்க்க போகிறோம் என்று  எண்ணிக்கொண்டிருந்த பொழுது , அங்கு தற்போது ஏற்பட்டுள்ள வானளாவிய மாற்றம் என்னை பிரம்மிக்க வைத்தது .இரத்தினக்கம்பளம் விரிக்க பட்ட மிக மிக விசாலமான இடப்பரப்புள்ள  மிக அழகிய சிங்கப்பூர் விமான நிலையத்தைப்  பார்த்து நான் அசந்து போனேன் .குறிப்பிட்டுச்  சொல்ல வேண்டுமென்றால் விமான நிலையத்தில் பாத்ரூம் மிகவும் தூய்மையாக இருந்தது . அந்த, அந்த பாத்ரூம் , தூய்மைப்  படுத்தும் துப்புரவு பணியாளர் புகைப்படம்  அங்கு மாட்டி வைத்து , பெயரும் கூட எழுதி வைக்கப்பட்டிருந்தது .மேலும் rate your bathroom  என்றும் குறிப்பிடப்  பட்டிருந்தது . என்னைப் போல் "Excellent " என்று தான்  எல்லோரும் கிளிக் செய்திருப்பார்கள் . விமான நிலையத்தில் மிக அழகாக அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த  நிஜப்பூச்செடிகள் , நிஜப் பூக்கள் போலவே தோற்றமளித்த வெவ்வேறு  வண்ணக் காகிதப் பூக்கள் , பிளாஸ்டிக் பூக்கள் ,மற்றும் பளிச் பளிச் சென்று ஒளிவிடும் வெண்மை நிற விளக்குகள் , வண்ண வண்ண விளக்குகள் ,ஆக  சிங்கப்பூர் விமான நிலையம் ஆளையே கிறங்க அடித்து விடுகிறது. .அசல் தேவலோகம் போல் தோன்றுகிறது ! .ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்  என்பதைப்  போல், விமான நிலையமே இப்படி என்றால் ஊர் எப்படி இருக்கும் ? சொல்லவா வேண்டும் ?  சில மணி நேரம் அடுத்த flight  க்கு காத்திருக்கும்  போது சிங்கப்பூர் விமான நிலையம் முழுவதும் பொறுமையாக சுற்றிப்  பார்த்தோம் .வேண்டியதை வாங்கி சாப்பிட்டோம். சிங்கப்பூரை சுற்றிப்  பார்க்கவில்லையே என்ற எனது ஏக்கம்  , மூன்று  மாதங்கள் கழித்து  திரும்பி தாயகம் வரும் வழியில் நிறைவேறியது .



                                                                                    சிங்கப்பூர் விமான நிலையத்தில் நான் ..

              நியூஸிலாந்து சுற்றிலும் கடலாலும் மலைகளாலும் சூழப்பட்ட நாடு .காரில் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு  வரும் போதே சுற்றிலும் அந்தக் கடலையும் மலையையும் பார்த்து ரசித்து க்கொண்டேதான் வந்தோம் . அந்தக் கடலும் மலையும் ஒரு சேர வரவேற்பது மிகவும் ரம்யமான நிகழ்வு. அந்த கடல் நீர் ஊதா நிறத்தில் ஆர்ப்பரிப்பு ஏதுமின்றி அமைதியாக உள்ளது .மலைகளில் பலர் பல பகுதிகளில் சின்ன சின்ன அழகான வீடுகளைக் கட்டிக்கொண்டு ,கடற் காற்றை முழுக்க முழுக்க அனுபவித்துக் கொண்டு,அந்தக் கடலையும்  பார்த்து ரசித்துக் கொண்டு சிறகு விரித்து பறந்து திரிந்து கொண்டிருக்கும் பறவை இனங்களையும் (Sea gulls ) பார்த்து ரசித்துக்கொண்டு , வாழ்க்கையை முழுமையாக , நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .மலைப்பாங்கில் கட்டியுள்ள வீடுகளில் சிலவற்றில் கார் பார்க்கிங் இல்லாத தால்  வீட்டிற்கு அருகிலேயே அவர்களுக்கென்று வரிசை யாக ஒதுக்கப் பட்டுள்ள இடங்களில் கார்களை நிறுத்தி யுள்ளனர் .அவர்களைக்  கேட்டல் மலை பகுதியில் வீடு கட்டி வாழ்வது பத்திரமானது என கூறுகின்றனர்.. நிலநடுக்கம் ஏற்பட்டால், மலைகளில் உள்ள              வீ டுகளுக்கு  அவ்வளவு பாதிப்பு ஏற்படாது என்பது இவர்கள் கூற்று .நியூஸிலாந்து அவ்வப்போது சிறு சிறு, நிலநடுக்கம் ஏற்படக்கூடிய நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று .வெல்லிங்டன் நகரில் upper hut  மற்றும் Lower Hut என்று இரு பகுதிகள் உள்ளன.எங்கள் மகன் கண்ணன் வசிக்கும் பகுதி lower Hut . வீட்டு உரிமையாளர் ஒரு குஜராத்திக்  காரர் ."I  come  from  land  of  Gandhi  and  also  நரேந்திர  மோடி "என்று அவர் பெருமிதத் தோடு கூறியபோது, கேட்ட நமக்கும் பெருமையாகவே இருந்தது. இன்னொன்றையும் இங்கு குறிப்பிட நினைக்கிறேன் .வெல்லிங்டன் ரயில் நிலயத்திற்கு முன்னால்,  நின்ற நிலையில் நம் தேசப்பிதா காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது மிகவும் பெருமைக்குரிய விஷயம் . மஹாத்மா வின் அந்த சிலைக்கு முன்னால்  எழுதப்பட்டிருக்கும் வாசகம் ,"Pride of India, a man of truth and non violence, a freedom fighter for India".  அந்த மாமனிதனின் சிலையை வணங்கி விட்டு வந்தோம் .வெலிங்டனில் நம் மகாத்மாவை என்றென்றும் நின்வுகூறும் நம் இந்திய நண்பர்களுக்கும் ,சிலை வைக்க அனுமதி வழங்கிய அந்நாட்டு அரசாங்கத்திற்கும்  நாம் நெஞ்சார்ந்த நன்றியை செலுத்துவோம் .

நம் ஊர் காய்கறி சந்தை போலவே, லோவர் ஹட் டில் ஒவ்வொரு சனிக்கிழமை காலை 8 மணி முதல், மதியம் ஒரு மணி வரை திறந்த வெளி மார்க்கெட் கூடுகிறது. அனைத்து காய்கறி களும் , பழங்களும், பெரிது பெரிதாக, fresh ஆக, விற்கப்படுகின்றன . விலை சற்றே கூடுதல் எனினும் , அன்றே பறித்த, மிகத்  தரமான  காய்கறிகளும் , பழங்களும்  கிடைப்பதால் , அனைவருமே விரும்பி வாங்குகின்றனர் . இதில் நான் வியப்படைந்த விஷயம் யாதெனில், என் மகன் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டுக்காரர் , சுமார் 80 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவரும், அவராகவே  தன் காரை ஓட்டிக்  கொண்டு வந்து , ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றது தான் .

இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களை எழுதுகிறேன். மேரி என்ற  80 வயதுக்கு மேற்பட்ட
அம்மையார் ஒருவர், இங்கு, அருகிலேயே , தனியாக வசித்து வருகிறார் .பிள்ளைகள் எல்லாம் வார இறுதி நாட்களில் வந்து பார்ப்பார்கள் எனவும், பிள்ளைகள் அவரவர் வேலை நிமித்தம், வெவ்வேறு ஊர்களில் வசிப்பதாகவும் கூறினார்.அவர் கூறிய மற்றுமொரு சுவையான செய்தி யாதெனில், "  My mother is from Assam " என்று கூறியதுதான் . தனக்கு அசாம் மொழி தெரியாது எனவும் , ஆனால் இந்திய நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் , அவர்களில்  மாலா , ராதா, மல்லிகா  குறிப்பிட தக்கவர்கள் என்றும், அவர்களுடன் இப்போதும் தொடர்பு உண்டு என்றும் மகிழ்ச்சி யோடு கூறினார் .நாங்கள் தாயகம் திரும்பும் போது , மறக்காமல், அந்த  பாட்டியிடம் நான் நேரில் சென்று சொல்லிக் கொண்டு வந்தேன்; சிலநாள் பழகியதற்கே, அன்று அவர்களின் கண்கள் பனித்தது , மிக நெகிழ்வான விஷயம் .

Saturday  open  மார்க்கெட்டில் , காய்கறிகள், எல்லாம் சொன்னால் சொன்ன விலை தான் .பெரிய பெரிய van களில்  கொண்டுவந்து, மேடை பரப்பி விற்கிறார்கள். பேரம் பேச முடியாது .அங்கே நம் வட இந்தியர்கள், சிலர்,அவர்கள் பங்குக்கு, stall  போட்டு, சமோசா , பூரி, side dish  உடன் விற்கிறார்கள் . நாங்கள் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்த போது , ஒரு சுடிதார் போட்ட , வட இந்தியப் பெண்மணி  ஒருத்தி , இந்தியில் பேசிக்கொண்டே , என் கையை பிடித்து கூட்டி போய் ,அவர்கள் போட்டிருத்த stall ஐக்  காட்டினார் . அங்கு நான் சற்றும் எதிர்பாராத வண்ணம் , வெவ்வேறு நிறத்தில் , சுடிதார், மற்றும் ஜரிகை வேலைப்  பாடு செய்த  fancy சேலைகள் அழகாக மடிப்பு கலையாமல், அடுக்கி வைக்கப்பட்டிருந்தன . விலை 25 டாலார் முதல் 30 டாலர் வரை விற்கப்படுகின்றன. நியூஸிலாந்தில் காய்கறி மார்க்கெட்டில் , நம் நாட்டுச்  சேலையை பார்த்ததும், எனக்கு இன்ப அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இருப்பினும்  நான் எதுவும் வாங்க வில்லை .திருச்சி சாரதாஸில் இல்லாத சேலையா ?.
இன்னும் ஒரு கடையில்  பளிங்கு plate , பளிங்கு பொம்மைகள் , கப் அண்ட் சாசர் , கண்ணாடி டம்ளர் , விதம் விதமான அலங்காரத்தில் , சின்ன சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி, போட்டோ பிரேம் , என்று இது போன்ற  பல்வேறு சாமான்கள் ,விற்கப்  படுகின்றன. . நான் ஒவ்வொன்றையும்,  அமைதியாகப்  பார்த்து ரசித்தேன்.  அந்த நேர்த்தியான அழகு , "A thing of beauty is a joy for ever" என்ற  ஆங்கில கவிஞரின்  வரிகளை நினைவூட்டியது .

எங்கள் மகன் வீட்டு மாடியிலிருந்து  பார்த்த  போது , சற்று தூரத்தில் மிகப்  பெரிய  , அடர்ந்த பச்சை பசேலேன்ற  மரங்கள் சூழ்ந்த  மலைகள்  பளிச்சென்று தெரிகின்றன .அந்த மலைகளின் மேல் அடுத்தடுத்து , சிறிதும் பெரிதுமாய் வீடுகள் கட்டப் பெற்றிருக்கின்றது.. இரவு நேரங்களில் பார்க்கும் போது, அந்த மலை வீடுகளிலிருந்து மஞ்சள் விளக்குகள் ஒளிர்கின்றன .ஏகப்பட்ட விளக்குகள்; கண்கொள்ளா காட்சி. ஆகா, "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா ...!" - என்ற  பாரதி பாடலை, மனதில் நினைத்துக்  கொண்டேன் .

நியூஸிலாந்து பூமியின் தென்துருவத்திற்கு  அருகில்  அமைந்திருப்பதால் , இங்கு டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நல்ல வெயில் காலம்.  ஆனால் ,பின்லாந்து  பூமியின் வட துருவத்திற்கு  அருகில்  இருப்பதால்,   இதே சமயம்  அங்கு நல்ல  பனிக்காலம் . நியூஸிலாந்து வெயில் காலமாக இருந்தாலும் ஊட்டி கொடைக்கானல் மாதிரி தான் இருந்தது. கடல் சூழ்ந்த மலை நிறைந்த நாடானதால்  காற்றுக்குப்  பஞ்சமில்லை .சில நாள் வெயில் குறைவாகவே இருக்கும்; சிற்சில நாட்களில் வெயில் அதிகம் இருந்தாலும், மாலை நேரம், ஜிலு ஜிலு வென்று  குளிர்ந்த காற்று ,வீசி நம்மை மகிழ்விக்கும். சில நேரங்களில் காற்று மிக அதிகமாக வீசி , நம் குடையைக் கூட பிய்த்து கொண்டு போகும். சம்மர் முழுக்க வீதி எங்கும் பூக்காடாகவே காணப்பட்டது . காற்று அதிகம் இருப்பதால் "Windy wellington" என்று பெருமையுடன் அழைக்கின்றனர் . Wellington  என்ற வார்த்தையில் W எழுத்தை சிறகு விரித்து பறப்பது போன்று வடிவமைத்து எல்லா இடங்களிலும் , குறிப்பாக மலை சார்ந்த இடங்களில் எல்லாம் எழுதி வைத்துள்ளார்கள் .
உலகிலேயே மிகவும் காற்றோட்டமான  நகரம் வெல்லிங்டன் ஆகும்.  சராசரியாக மணிக்கு 29.6 கீ . மீ . காற்று வீசுகிறது.  வெல்லிங்டன் நியூசிலாந்தின் தெற்கு மற்றும் வடக்கு தீவுகளுக்கு இடையில் ஒரு காற்று நடைபாதை என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது.

எல்லா வீடுகளிலும், பின்லாந்து போலவே, வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன .ரோஜா பூ , ஒவ்வொன்றும் அவ்வளவு பெரிய பெரிய  சைஸ் . எங்கள் மகன் வீட்டுக்கு அருகிலேயே , மிக பெரிய  "Lucy Cole Rose Garden "என்ற பெரிய ரோஜா தோட்டம் ஒன்று உள்ளது.  அங்கு 30, 35 வகை  ரோஜாச் செடிகள் எங்கு பார்த்தாலும் பூத்துக் குலுங்கி நம் கண்களை கவர்ந்து இழுக்கின்றன .. ரோஸ் கார்டனில் நான் பார்த்த ரோஜா பூ வகைகளின் பெயர்களை இங்கே குறிப்பிடாவிடில்  என் மனம் நிறைவடையாது !


1) sexy  rose ; 2) Eden rose 3) Golden wing, 4) Lasting love, 5) Midnight blue,  6) Ebb tide,  7) Flory funda, 8)Fairy queen  9) Butterflies   10) stead sea fome  11) star ship  12) Agnes  13) thames castle  14) Ellen  15) Grace 16) Othello 17) Hot lips   18)Georgious girl, 19) Lemon Honey  20) Mento  21) glass act 22) crystal  fairy 23) Dimples 24) Trekulla sun rise, 25) star ship


நான் பார்த்து மகிழ்ந்த பல ரோஜாக்களில்  25 ன் பெயரை மட்டுமே குறித்து வைத்திருந்தேன் !. இந்த ரோஜாச்  செடிகள் அந்த ஊர் climate ற்கு   தானாகவே செழிப்பாக வளர்கின்றன. இருப்பினும், அவற்றை பராமரித்து , தண்ணீர் ஊற்றி , ஒழுங்காக வெட்டி விட்டு , உரம் போட்டு அன்றாடம் கவனிப்பவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. வேறு யாரும் பூக்களைப் பறிப்பதில்லை . ஆனால் நான் மட்டும் தினம் இரண்டு பூ வாவது பறித்து,  வீட்டுக்கு கொண்டு போய் ,  பூஜை அறையில் ,சாமிக்கு வைக்கத்  தவறுவதில்லை.

நான் எங்கள் பேத்திகள் ஆர்த்தி பார்த்தியைக் கூட்டிக் கொண்டு, தினசரி இந்த தோட்டத்தின், நறுமணத்தை அனுபவித்துக் கொண்டே , walking  செல்வதுண்டு . ரோஜாக்களை பார்த்ததுமே, நம் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு தனது கோட்டில் தினசரி ஒரு ரோஜா மலரை சூடிக்கொண்டது நினைவிற்கு  வந்தது. இந்த தோட்டத்தில் செடிகள் மட்டுமல்லாது , அங்கங்கே பெரிய அழகிய மரங்களும் உள்ளன.  இந்த இடத்தை பலர் பிக்னிக் spot  போல பயன் படுத்து கின்றனர். 

வெல்லிங்டன், குறிஞ்சி குமரன் கோவில், ஒரு மலைப் பகுதியில் , சில ஆண்டு களுக்கு முன்னர், இங்கு வசிக்கும் தமிழர்களால் கட்டப்பெற்றது .ஈழத்தமிழர்கள் சிலரும் , பிராமணர்கள் சிலரும், ஏனையோரும் ,இந்தக் கோயிலுக்குத் தன்னார்வத் தொண்டர்களாக தினமும் பல மணி நேரம் ஒதுக்கி  சேவை  செய்கின்றனர் . அவர்களில், எனக்கு தெரிந்தவர்கள், என் மகனின் நண்பர் ,  ஸ்ரீனிவாஸ் மற்றும் அவர் துணைவி ஐஸ்வர்யா  ஸ்ரீனிவாஸ்  . ஸ்ரீனிவாஸ் இந்த கோவில் சேவைக்கு தன்னை முழுமையாக அர்பணித்துக்கொண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். அடுத்ததாக  ,புதிதாக மணமான , அழகிய மாலை கட்டும் , அழகிய தெலுங்குப் பெண் லட்சுமி கண்ணன் ; மற்றும் , காயத்ரி தர்மா ,  இன்னும் பலரைச் சொல்லலாம் . அதில் ஐஸ்வர்யா ஸ்ரீனிவாஸ் அவர்களும், காயத்ரி தர்மா அவர்களும், நல்ல குரல் வளம் மிக்கவர்கள் .  அவர்கள் இருவரும் சேர்ந்து ,மிக இனிமையாக குறிஞ்சி குமரன் மீது பல பக்தி பாடல்களைத்  தங்கள் தேனினும் இனிய குரலில் பாடக்கேட்டேன் .நாங்கள் போயிருந்த சமயம் அந்த கோவிலில் , கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள்  பிரம்மோட்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .அவ்வமயம் , மிருதங்கம், நாதஸ்வரம் வாசிக்க , ஆஸ்திரேலியாவிலிருந்து  கைதேர்ந்த கலைஞர்கள் வரவழைக்கப் பட்டிருந்தனர் . அதி அற்புதமாக வாசித்தனர் .

இந்த கோவிலின் மூலவர் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளி யுள்ளார் . கூடவே, விநாயகர், சிவன்  அம்பாள் ,மாரியம்மன் , பைரவர், நவகிரகங்கள், நாடு நாயகமாக ஸ்ரீ சுவாமி ஐயப்பன்  தனி த்தனி  சன்னிதி யில் , வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர் .சிவன் சந்நிதிக்கு முன்,  வெண்கல நந்தீஸ்வரர், மிகச் சிறியதாக , மிகுந்த அழகுடன்  வீற்றிருக்கிறார் .இந்தக் கோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம் உற்சவம்,நவராத்திரி , பிரதோஷம், மாதக்  கார்த்திகை , திருக்கார்த்திகை எல்லாமே, சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது .பக்தர்கள் விழாக்  காலங்களில், ஒவ்வொரு வரும் போட்டி போட்டுக் கொண்டு, அவரவர் வீட்டிலிருந்து சுண்டல் கேசரி, அவல் பாயசம், புட்டு, இடியப்பம், இட்லி சட்னி,  மாம்பழ பாயசம் என்று வெரைட்டியாக , பல உணவுகளைக்  கொண்டுவந்து, அனைவருக்கும் பிரசாதமாக இன்முகத்துடன் வழங்குகின்றனர்.


இந்த கோவிலில் , ஒருமுறை ஒரு சின்னஞ் சிறிய பெண் குழந்தை அழகாக பட்டுப் பாவாடை சோளி அணிந்து வித வித மான அணிகலங்களுடன் ,குஞ்சம் வைத்த பின்னலுடன் , பூவும் வைத்துக் கொண்டு  நல்ல பாவனையுடன் பாடியது  எங்கள் மனம் கவர்ந்த சிறப்பம்சம் ஆகும்.

இங்கு வெலிங்டனில் பிரதி ஞாயிறு தோறும் பத்து , பதினைந்து வீடுகளில் ,மாறி மாறி, பஜனை நடத்துகிறார்கள் . இதனை சத்சங் என்று குறிப்பிடு கிறார்கள் .ஞானானந்த ஸ்வாமிகளை குருவாக வைத்து இந்த கூட்டு வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இதில் எங்கள் மகன் வீடு உட்பட , தமிழ் , தெலுங்கு, வட இந்தியர்கள், உறுப்பினர்களாக இருக்கின்றனர் . கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நியூஸிலாந்து லேயே வசித்து வரும் , திருமதி பிரபா ரவி என்பவர் ,இதனை முன்னின்று நடத்துகிறார் . இவர் நட்ராஜ் நாட்டியாலயா  என்ற நடனப்  பயிற்சிப்  பள்ளியும்  நடத்தி , பல இளம் பெண்களுக்குப்  பாரத நாட்டியம் கற்றுத் தருகிறார். என் பேத்திகள் ஆர்த்தி, பார்த்தி, இருவரும், திருமதி பிரபா ரவி அவர்களிடம், பரதமும்,சிரத்தையுடன் பாட்டுச்  சொல்லிக் கொடுக்கும்,ஜெயஸ்ரீ என்பவரிடம் முறையாக வாய்ப்பட்டும் கற்று வருகின்றனர். 2018 பிப்ரவரி 28ம் நாள் , நட்ராஜ் நாடியாலயா குழுவினரால் பெரிய கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது . அதில் எங்கள் பேத்தி களும் பங்கேற்று நடனமாடினார் .




                                                                                         கலை நிகழ்ச்சிக்கு சென்ற போது .......

வெல்லிங்டனில் மிக அழகாக மிக பிரம்மாண்டமான  பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது .எந்த ஒரு பெரிய நில அதிர்வு ஏற்பட்டாலும்  தாங்கி கொள்ளும் படியான , சில பல, யுக்திகளைக் கையாண்டு அடித்தளத்தை மிக சிரத்தையுடன் அமைத்துள்ளனர் 


1989ம்  ஆண்டில் , நியூஸிலாந்து அரசு பாராளுமன்ற கட்டிடத்தை வலுப்படுத்தவும் புதுப்பிக்கவும் முடிவெடுத்தது. பாராளுமன்ற வளாகத்தையும் பாராளுமன்ற நூலகத்தையும் அவற்றின் அசல் அஸ்திவாரங்களிலிருந்து பிரித்து அவற்றை முன்னணி-ரப்பர் தாங்கு உருளைகளில் வைக்க அடிப்படை தனிமைப்படுத்தும் முறை வகுக்கப்பட்டது.அதன்படி 417 அடிப்படை தனிமைப்படுத்தப்பட்ட தாங்கு உருளைகள் வைக்கப்பட்டன . இவற்றை நேரில் பார்த்து பிரமித்துப் போனோம். நாடாளுமன்றம், நடைபெறும் போதே, பாஸ் வாங்கி ஒரு நாள் முழுக்க நாடாளுமன்றத்தில் சுற்றி பார்த்தோம். இவ்வளவு செம்மையாக நேர்த்தியாக பாராளுமன்ற கட்டிடம் கட்டியுள்ளது உலக அதிசயம் என்றே எனக்கு எண்ண த் தோன்றுகிறது .பூமி நகரக்கூடும் ; அனால் பாராளுமன்றம் அசையாமல் நிற்கும்."The earth may move, but Parliament stays put." பார்லிமென்ட் முன்னாள் எழுதிவைக்கப்பட்டுள்ள வாசகம் : "Hard hat; Hi -vis; and safty boots" பார்லிமென்ட்க்கு முன்னால் ஒரு அழகான கட்டிடம் . அதன் பெயர் "TEMPUS FUGATIVE " அந்த அழகிய கட்டிடத்திற்கு மேலே ஒரு தங்க சிங்கப் பொம்மை சூரிய ஒளியில் ஜொலிக்கிறது. அந்த சிங்கத்தின் மேலே, இரண்டு பளிங்கு குதிரைகள் அழகோ அழகுடன் உள்ளது.

வெல்லிங்டனில் முக்கியமாக ரசித்து பார்த்த இன்னுமொரு இடம் என்னவென்றால் , அது ஒரு காய்கறி தோட்டம். பல ஏக்கர் நிலப்பரப்பை க் கொண்ட மிகப் பெரிய தோட்டம் .இது பார்க்க மட்டுமல்ல , fresh ஆக வேண்டிய காய்கறிகளை நாமே நம் கைகளால் பறித்து விலைக்கு வாங்கி கொள்ளலாம் . "சில்லி பிக்கிங் " என்று அழைக்கிறார்கள் . பல விதமான மிளகாய்கள் மற்றும் எல்லா விதமான காய்கறிகள் செக்ஷன் செக்ஷன் ஆக பயிரிட்டுள்ளார்கள் . நமக்கு வேண்டியவற்றை பறித்து எடுத்துக் கொண்டு வந்து கவுண்டெரில் பில் போட்டு வாங்கிக் கொள்ளலாம் .

நிச்சயமாக அவ்வளவு பெரிய காய்கறி தோட்டத்தை நான் வாழ்நாளில் பார்த்தது கிடையாது.







காய்கறி தோட்டத்தில்




சுற்றிப் பார்த்து காய்களை பறிப்பதற்கே 3 மணி நேரம் ஆகிவிட்டது. அங்கே  விளையும், குண்டு குண்டு தக்காளி ,ஸ்ட்ராபெரி பழங்கள் , பல்வேறு வகையான மிளகாய் குடை மிளகாய் , மஞ்சள் பஜ்ஜி மிளகாய் , பெரிய பெரிய காலிப்ளவர் , காரட் , பீட்ரூட் முட்டைக்கோசு (இரண்டு கையாலும் சேர்த்துக்கூட என்னால் தூக்க முடியவில்லை !) அவ்வளவு பெரியது . பச்சை மிளகாயை  ஒரு வருஷத்திற்கு பிரீஸரில் வாங்கி வைத்து பயன் படுத்துகிறார்கள் .நாங்கள் எங்களுக்கு வேண்டிய மட்டும் காய்கறி வாங்கி வந்தோம்.

ஒரு வாரக்கடைசியில் , லோவ்ர் ஹட் லிருந்து 2 மணி நேரம் டிரைவ் செய்து  "Grey  Town " என்ற ஒர்  அழகான சின்ன ஊருக்குச் சென்றோம்.அந்த ஊரில் வீதி எங்கும் ஒரே பூ மயம் .






                                                                                                                  Grey  டவுன் வீதி .....




Grey town  ல் உள்ள கடைகளில் எல்லாம் , சொல்லி வைத்தாற்போல், ஒரு வட்டமான தொங்கு கூடையில் , நிஜப் பூக்களை வைத்து சங்கிலி யால்  தொங்க விடப் பட்டுள்ளது .அது பார்ப்போரை எல்லாம் கவர்ந்து இழுக்கிறது . பூக்கள் நிறைந்த grey  town ல் ஒரு லெவெண்டர்  கார்டன்  உள்ளது.  அங்கே லெவெண்டர்  பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன .  நான் நினைத்து  போல் , முன்னே சொன்ன காய்கறி தோட்டம் போல் விஸ்தீரணமான தோட்ட மல்ல. சற்றே சிறிய தோட்டம் தான் . ஆனால்  நாம்  செடிகளின் அருகே நடந்து செல்லும் போது  பூக்களின் வாசம், லெவெண்டரின்  மெல்லிய நறுமணம் நம்மை உற்சாக மாக்குகிறது.  முன்னால்  கவுண்டரில் விற்பனைக்கு கொத்து கொத்தாக, லைட் வயல்ட் நிற, லெவெண்டர்  பூக்கள் வைக்கப் பட்டுள்ளன .இந்த லெவண்டெர்  பூக்களிலிருந்து தான் , லெவெண்டர் பவுடர் ,சென்ட் , மற்றும் , சில மருந்துகளும்  தயாரிக்கப் படுகின்றன .





                                                                          லெவண்டெர்  கார்டனில் ......

லெவெண்டர் கார்டன் பார்த்த பின்னல், நாங்கள் அனைவரும், ஒரு மலை சார்ந்த இடத்திற்கு  காரிலேயே பயணித்தோம் . அந்த மலை சார்ந்த இடத்திற்கு பெயர் "காரோராங் "என்பதாகும். 
இரண்டு மலைப் பாங்கான இடத்தின் நடுவில் ஓரிடத்தில் கீழே சின்ன ஆறு ஒன்று   சல சல வென்று ஓடுகிறது . அந்த ஆற்றின் மேலே , நாம் நடந்து போவதற்கு ஏதுவாக ஒரு தொங்கு பாலம் உள்ளது. அதன் இரண்டு பக்கங்களிலும் உறுதியான , நீளமான, கை பிடிகள் உள்ளன . ஒரு பக்கத்திலிருந்து , இன்னுமொரு பக்கத்திற்கு , நாங்கள் இந்த பாலத்தில், நடந்து சென்று , மிக அடர்த்தியான மரங்களையும் , காடுகளையும் கண்டு வியந்தோம்.  பாலம் உறுதியாக இருந்த தால் பயமின்றி, தயக்கமின்றி அனைவரும் , பாலத்தின் மீது நடந்து சென்றோம் . பாலத்தின் கீழே இரு பக்கங்களிலும் சல சல வென்று தெளிந்த நீரோடை ஓடுவது, பார்ப்பதற்கு, நமக்கு  பெரும் மன  உற்சாகத்தை தருகிறது . அந்த நீரில் சிறு சிறு கற்கள் எல்லாம் கூட , பளிச் பளிச் சென்று  சூரிய ஒளி பட்டு கண்ணாடி போல் மின்னுகின்றன . காற்று  ஜில் என்று  சுகமாக வீசுகிறது ."சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக்காட்டினிலே ... " என்று  T .R  மஹாலிங்கம் கம்பீரமான குரலில் பாடிய பழைய பாடலும், அந்த சுகமான காற்றை அனுபவிக்கும் போது , இசையரசி M S  அவர்களின் , "காற்றினிலே  வரும் கீதம்,...." என்ற பாடலும்  நினைவுக்கு வந்து மதி மயங்கச் செய்தன . குயிலின் சத்தமும் கேட்டது . அன்று Jan 21, எங்கள் 48 வது திருமண நாள் . எங்களுடன் வந்த அரவிந்தன் பெற்றோர்களின் ஆசியை பெற்றுக் கொண்டோம். அவர்கள் பேத்தி ஆர்த்தியும் , எங்கள் பேத்தி ஆர்த்தி பார்த்தி யுடன் சேர்ந்து, surprise performance  செய்து, எங்கள் திருமண நாளுக்காக ஹாப்பி அனிவேர்சரி  பாட்டுப் பாடியும், டான்ஸ் ஆடியும் , அனைவரையும் மகிழ்வில் ஆழ்த்தினர் .பிரதிபா , அரவிந்தன் அவர்களின் துணைவியார் என் கைகளைப் பற்றிக் கொண்டே கூட்டிக் கொண்டுபோய், அங்கிருந்த நீரோடை, அருகில் இருந்த மரம் செடி கொடிகள் , எல்லாவற்ரையும் பார்க்க உதவினார். அனைத்து இயற்கை காட்சி களையும் ஒன்று விடாமல் ரசித்துப்  பார்த்த பின்னர், நாங்கள் அனைவரும் வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த புளியோதரை , லெமன் ரைஸ் , தக்காளிச்  சாதம், தயிர்ச்  சாதம் , உருளைக்  கிழங்கு சிப்ஸ் ,உண்டு மகிழ்ந்தோம் .


வெல்லிங்டனில்  பெரிய பொட்டானிக்கல் கார்டன் ஒன்று உள்ளது. மிக அழகிய தோட்டம் அது. பல் வேறு வகையான  மரங்களும் மலர் செடிகளும், மலர்களின், மயக்கும் நறுமணமும், நம்மை வேறு உலகத்திற்கே கொண்டு செல்கின்றன.  அந்த இடத்தை விட்டு வரவே மனம் இல்லாமல், :இன்னும் கொஞ்சம் நேரம் இந்த மலர் களின் சுகந்தத்தை அனுபவித்து இருக்கலாமே " என்ற எண்ணத்துடனேயே திரும்பி வந்தோம் .அடுத்து, கேத்தரின் மேன்ஸ் பீல்டு  என்ற பெண் எழுத்தாளர் வாழ்ந்த இடத்தைப் பார்க்கச்  சென்றோம், 1888ல்  அவர் வாழ்ந்த வீடு, அந்த தோட்டம்  புனரமைக்கப்பட்டு அற்புதமான மியூஸியம் ஆக உள்ளது .எல்லா எழுத்தாளர்களுக்கும், இந்த இடம், ரெம்பப்  பிடிக்கும்!.

கிறிஸ்த்மஸ் , புத்தாண்டு விடுமுறையில் , நாங்கள் நியூஸிலாந்து க்குப்  போயிருந்த அதே சமயம், எங்கள் இரண்டாம் மகன் செந்திலும்,  குடும்பத்துடன், அமெரிக்காவிலிருந்து , நியூஸிலாந்திற்கு  வந்திருந்தார் .எனவே எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .எல்லோரும் சேர்ந்து ஊர் சுற்றி பார்ப்பதில் அலாதி மகிழ்ச்சி என்பதைச் சொல்லவும் வேண்டுமா?  அனைவரும் வெல்லிங்டனனில் அனைத்து இடமும் பார்த்த பின்னர் , வேன்  ஏற்பாடு செய்து கொண்டு, ஆக்லாண்ட்  tour க்கு பயணமானோம் . வேன் என் மகனே ஒட்டிக் கொண்டு வந்தான். புதிய வேன்; மிக சௌகரியமாக இருந்தது . நியூஸிலாந்தில் southern island tour , Northern  island  tour , இரண்டு பகுதியாக tour செல்வார்கள் . நாங்கள் சென்றது வடக்கு தீவு களுக்கான tour . அதில் தான் ஆக்லாந்து அடங்கும் .

செல்லும் வழியில்  " Radio  New Zealand " என்ற கட்டிடம் தெரிந்தது. உடனே எனக்கு "Radio  Singapore " பழைய ஞாபகங்கள் நினைவலைகளாய் என் கண் முன்னே தோன்றி மறைந்தன. ஆக்லாந்து சென்றடைய 9 மணி நேரம் ஆயிற்று . பிள்ளைகளுக்கும் , என் கணவருக்கும், அலுப்பு தட்டவில்லை . ஆனால் எனக்கு 9 மணி நேர பயணம் சற்று அலுப்பாகத்தான் இருந்தது.
ஆக்லாந்தில் , "WAR  Memorial  Museum " ( போர் நினைவு அருங்காட்சியகம் ) உள்ளது.  இங்கு உலகப் போரில் போரிட்ட  வீரர்களின் நினைவாக  பல பெரிய பெரிய , போர்வீரர் உருவங்களை  சிலை யாக செதுக்கி வைத்துள்ளார்கள் .அவர்கள் பயன் படுத்திய போர் கருவிகள் இங்கு பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன .ஆங்காங்கே ,அவர்கள் போரில் எவ்வளவு கஷ்டப் பட்டார்கள் , எப்படி எல்லாம் மீண்டு வந்தார்கள் ;என்பதை எல்லாம் எழுதி வைத்துள்ளார்கள் . அவர்கள் உபயோகித்த மிகப் பெரிய படகு ஒன்றும் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.  மிகப் பெரிய, ராட்சஷ பறவை ஒன்றின் எலும்புக்கூடு  வைக்கப் பட்டிருந்தது. .மிக உருக்கமான வாசகம் எழுதப்பட்டிருந்தது . " WE ARE STANDING ON THE SHOULDERS OF THOSE, WHO ARE LAYING BELOW US"  என்பது அந்த வாக்கியம் .


ஆக்லாந்தில்  16 ஆவது மாடியில் Hotel  Quest ல்  தங்கி இருந்தோம். ஹோட்டல் அறையிலிருந்து கீழே பார்த்தால் , கண்ணுக்கு எட்டிய தூரம் வரை , உயர உயர மான எண்ணற்ற கட்டிடங்கள் , அவை அனைத்தும் இரவு நேரத்தில் ஒரே ஒளி வெள்ளம் . நீண்ட நேரம் ரசித்தேன் .

HOBBITON  Movie  set  க்கு சென்று பார்த்தோம்.  உலகின் பிரம்மாண்ட மான திரைப்படங்கள் எல்லாவற்றையும்  கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் (கணணி வரைகலை ) மூலம்   தந்திரக் காட்சிகள் அமைப்பது  அங்குதான் நிபுணத்துவம் பெற்றது .எந்திரன், பாகுபலி எல்லாம் இந்த ஹாபிட்டன்  மூவி செட் டில் செய்யப்பட்ட கைவண்ணம் அடங்கிய படங்கள் தான் . திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் lab  கருவிகளின் மாதிரி, மற்றும்  ஏற்கனவே நடித்த பொம்மைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன . அந்த film  city இல்  இரண்டு பெரிய மண் குரங்கு பொம்மைகள் உள்ளன . அவை அவதார்  படத்தில் நடித்தனவாம் ! ஹாபிட்டன் மூவி  செட்டில்  நிறைய சின்ன சின்ன Miniature  பொம்மைகள் , மான்கள், மயில்கள் , குதிரைகள், நாய்க்குட்டிகள் , பூனைக்குட்டிகள் , மற்றும் அழகான பல்வேறு விதமான  பார்பி பொம்மைகள் , இருந்தன. இம்மாதிரி மினியேச்சர் பொம்மைகளை முதலில் செய்து ,அதை வேண்டிய அளவு zoom  செய்து ஆட வைத்து பாட வைத்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் திரையில் பிரம்மாண்டமாக தோன்றத் செய்வதே இந்த lab ல் நடக்கும் வேலை . வியப்பாக இருக்கிறதல்லவா? 

அடுத்ததாக , ஆக்லாந்தில் உள்ள  "வாக்காரே வா " என்னும் சிறிய கிராமத்தை சுற்றி பார்த்தோம்.இதன் முக்கியத்துவம் யாதெனில், இது எரிமலை வெடித்த இடம் , மற்றும் மௌரி மொழி பேசும் பழங்குடி மக்கள் இன்னும் மாறாமல் வசிக்கும் இடம் . எரிமலை வெடித்ததன் அடையாளம் இன்னும் தெரிகிறது .எரிமலைத் குழம்பு (தண்ணீர் போல்)  பல வண்ணங்களில் இருக்கின்றன . பூமி அடியில் உள்ள தாதுப் பொருட்களே அப்படி பல வண்ணங்களாய் தெரிகிறது .சல்பர் போன்ற ஒருவகை துர் நாற்றம்  எப்போதும் உள்ளது .எரிமலை வெடித்து சிதறும்போது பூமியின் அடியில் உள்ள கனிமங்கள் பல பூமிக்கு மேலே வருவதால், ஒரு வகையில் எரிமலை வெடிப்பு  நன்மை பயப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .

ஆதி காலத்தில் "மௌரி" இன பழங்குடி மக்களுக்கு சொந்தமாக இருந்த சிறிய தேசம் தான் தற்போதைய நியூஸிலாந்து  ஆகும் . பின்னர் வைட்டாங்கி ஒப்பந்தம் ( The Treaty of Waitangi) என்பது 1840 பிப்ரவரி 6 ஆம் தேதி நியூசிலாந்தின் வடக்கு தீவில் இருந்து பிரிட்டிஷ் மகுடம் மற்றும் மௌரி தலைவர்களின் பிரதிநிதிகளால் முதலில் கையெழுத்திடப்பட்ட ஒர் ஒப்பந்தமாகும். இது வரலாற்றிற்கும், நியூசிலாந்தின் அரசியலமைப்பிற்கும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாக மாறியுள்ளதுடன், நியூசிலாந்தின் அரசாங்கத்திற்கும் மௌரி மக்களுக்கும் இடையிலான அரசியல் உறவுகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது, இந்த ஒப்பந்தத்தின் உடனடி விளைவு என்னவென்றால், விக்டோரியா மகாராணியின் அரசாங்கம் நியூஸிலாந்து முழுமையிலும் நிலம் வாங்குவதற்கான முழு உரிமையையும் பெற்றது. இப்படி ஆட்சியைப் பிடித்த ஆங்கிலேயர்கள், மௌரி மக்களுக்குச் சிறு சிறு சலுகைகளை அவ்வப்போது வழங்கி அவர்களை சமரசம் செய்து கொண்டனர் .நியூஸிலாந்தில் நிறைய தெருக்களுக்கும் , இடங்களுக்கும் மௌரி பெயர்கள் உள்ளன . அதே சமயம் பெரிய பெரிய பதவிகளை, ஆங்கிலேயர்களே வகிக்கின்றனர் . நம் நாடுபோல் இட ஒதுக்கீடு அங்கே இல்லை . அதிகார வர்க்கத்தில் உள்ள ஆங்கிலேயர்கள் மௌரி இனத்தை தம்மை விட சற்றே கீழ் நிலையில் தான் வைத்துள்ளனர் .இருப்பினும் மௌரி, ஆங்கிலேயர் கலப்பு திருமணம் நடை பெற்று ஒற்றுமையாய் வாழ்வதும் காணமுடிகிறது .


எங்கள் மகன் வீட்டுக்கு சற்று அருகில், ஒரு ஆங்கிலேய - மௌரி தம்பதியும் அவர்கள் இரண்டு பெண் குழந்தைகளும் வசித்தனர் . எங்கள் பேத்திகள் அந்த பெண்குழந்தை பள்ளி நண்பர்களானதால் , அங்கே அவர்கள் வீட்டுக்கு விளையாடச் செல்வதுண்டு . நானும் அவர்களுடன் ஒரு நாள் அங்கே சென்றேன். அவர்கள் வீட்டில் நடந்த விந்தையான நிகழ்வு.அவர்களுடைய செல்ல பூனைக்குட்டி என் பேத்தி களுடன் சகஜமாக வாஞ்சை யுடன் விளையாடியதைப் பார்த்து நானும் அதனை தடவிக் கொடுக்க எண்ணி பக்கத்தில் சென்றது தான் தாமதம், உடனே பூனை கத்திக்கொண்டே பயந்து ஓடியது. நான் அருகில் செல்லச் செல்ல , என்னை பார்த்து மருட்சியுடன் மெது மெது வாக,பின்வாங்கியது. அவர்கள் வீட்டு குட்டிப் பெண் , "Because , you are a stranger.." நீங்கள் வேற்று மனிதர் , அதனால் உங்களைப் பார்த்து பயப்படுகிறது . என்று விளக்கம் அளித்தார் . செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிடுவது என்னவோ ஒரு அலாதி இன்பம் தான். திருச்சியில் என் கணவர் நான்கு லவ் போர்ட்ஸ் வளர்கிறார்கள் .இன்பமான பொழுது போக்கு அது.




நாங்கள் வளர்க்கும் செல்லக் கிளி (லவ் போர்ட்ஸ்)



வாக்கரேவா வை எங்களுக்கு சுற்றிக் காட்டிய guide, சுமார் 25 வயது மதிக்கத் தக்க ஒரு மௌரி இன வாலிபர் ஆவார் . அவர், ""ரூவமாக்கோ" என்கிற கடவுள் மௌரி இனத்தவர் வணங்கும் கடவுள் என்றும் , அந்தக் கடவுளர் தான் எரிமலையை கொண்டுவந்தவர் என்று அம்மக்கள் நம்புவதாகவும் கூறினார் . Ruaumoko – god of volcanoes, நாம் மழைக்கு  வருண பகவான் , நெருப்புக்கு சூரிய பகவான், காற்றுக்கு வாயு பகவான் என்று இந்து மதத்தில் நம்புவது போலவே, மௌரி மக்கள் இயற்கையின் ஒவ்வொரு சக்திக்கும் ஒரு கடவுள் பெயரால் வழிபட்டு வந்தனர் . சுருங்கச் சொன்னால் நம்மைப் போலவே இயற்கையை வழிபட்டனர் எனலாம்.

டங்கரோவா என்பது கடலின் கடவுள் , தவ்ரி மெட்டியா  என்பது காற்று மற்றும் புயல்களின் கடவுள் ;மஹூயிகா நெருப்பு தெய்வம் ! சொல்லப் போனால் இவர்களுடைய தெய்வங்கள், நட்சத்திர தெய்வம், மீன்களின் தெய்வம், வானவில் தெய்வம், என்று எண்ணிலடங்கா தெய்வங்களும் தெய்வநம்பிக்கையும் கொண்டவர்கள் . ஆனால் எல்லா தெய்வங்களிலும் ரூவமாக்கோ விற்கு ரெம்பவே பயப்படுவார்கள் . ஏனென்றால் ரூவமாக்கோ கோபம் கொண்டால் எரிமலை வெடித்து பேரழிவு ஏற்படுமல்லவா? 

எங்கள் guide பையன் எங்களை அருமையாக வழிநடத்தி , ஆங்கிலத்தில் விவரித்து ,பொறுமையாக விளக்கம் கூறி எல்லா இடங்களுக்கும் கூட்டிப்போய் காண்பித்தார் . பல நாட்டவரும்  சுற்றிப் பார்க்க வந்திருந்ததால் , அனைவருக்கும், பல மொழிகளில் வணக்கம் கூறினான். நம்மை நமஸ்த்தே என்று வரவேற்றது மகிழ்ச்சி அளித்தது .

வாக்கரேவா, ஒரு மாடல் மௌரி மக்கள் வசிக்கும் கிராமத்தில், ஒரு நீரோடை (வாய்க்கால் ) அமைக்கப்பட்டிருந்தது மேலே உள்ள பாலம் வழியாக நடந்து சென்று பார்த்தபோது , வாய்க்காலில் இரண்டு தடிமனான  மௌரி பெண்கள் , மேலே இருந்து பார்வையாளர்கள் தூக்கி எறியும் காசுகளை தண்ணீரில் மூழ்கி எடுத்து அவர்கள் வாய் நிறைய அடைத்து வைத்துக்கொண்டனர். அந்த காட்சி வேடிக்கையாக இருந்தது.அவர்கள் வாயை திறந்தால் ஓர் உண்டியலே இருந்தது.  காசு போட்டவர்கள் பலர்; அந்த பெண்களை வேடிக்கை பார்த்தவர்கள் பலர். அவர்கள் தடிமனாக இருப்பதற்கு அவர்கள் உணவு முறை ஒரு காரணமாக இருக்கலாம் .


நம் ஊரில் தெருக்கூத்து நடப்பதைப்  போல் , அங்கு மௌரி நடுத்தர வயது ஆண் பெண்களின் நடன நிகழ்ச்சி ஓன்று , அங்கே உள்ள ஒரு திறந்த வெளி அரங்கத்தில் நடைபெற்றது  தமது பழங்கால மௌரி ஆடை அணிகலன்களை போட்டுக் கொண்டு 
அவர்கள் நடனமாடியது ரசிக்கும்படி இருந்தது. 


                           
             
                                                  மௌரி மக்களின் ஆடை அலங்காரம் 

நம்மூர் கோலாட்டம் போன்ற நடனம் ஒன்றும் , ஆடினார்கள் . அப்போது குச்சியை அவர்களுக்குளேயே லாவகமாக தூக்கி போடுவதும், இன்னொருவர், கோலாட்ட குச்சியை   லாவகமாக பிடித்துக்கொள்வதும்  சிறப்பாக இருந்தது . அந்த ஆடவர்களுக்கு பெண் மணிகளும்  மௌரி மொழில் பாட்டுக்களும் பாடினார்கள் . மொழி புரியாவிட்டாலும் பாடல்கள்  இதமாக இனிமையாக , மனதை தொடும்படி இருந்தது . ஒரு நடுத் தர வயது பெண் , காதல் பாட்டு ஒன்று பாடினாள். பொதுவாக மௌரி இனத்தவர் அனைவருமே சற்று  பருமனாக இருந்தாலும் 
இவள் என்ன இப்படி பருமனாக இருக்கிறாளே என்று கூட நினைத்தேன் .  ஆனால் அந்த பெண்  அவளது வலது கையை மென்மையாக , மேலே தூக்கி  அசைத்து அசைத்து  , கண்களில் ஒரு வித நெகிழ்வுடனும், உணர்ச்சி பொங்க, அந்தக் காதல் பாடலைப்  பாடத்துவங்கியபோது, நான் கலங்கிப் போய்விட்டேன். அவள்  குரல் வளம் மிக  நன்றாக இருந்தது . நம் ஊர் கிராமிய தெம்மாங்கு பாடலை கேட்பது போல் இருந்தது. இந்தப் பெண்ணுக்குள் இத்தனை திறமைகளா என்று வியந்தேன்!  கல்லும் கனியும் வண்ணம் பாடுகிறாளே  என்று திகைத்துப்  போனேன் . இசையை ரசிக்க மொழி தேவை இல்லை ; ரசனை உணர்வு ஒன்றே போதும் என்பதை அக்கணம் என்னால் உணரமுடிந்தது. "  இதயத்தின் மொழிகள் புரிந்துவிடும் ..." என்கின்ற பாடல் வரிகள் நினைவிற்கு வந்தன .

" உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 
அச்சாணி அன்னார் உடைத்து "       -   என்ற திருக்குறள்  ஞாபகத்திற்கு வந்தது .

உலகில் உள்ள ஒவ்வொருவரும், உருளும் பெரிய  தேருக்கு  அச்சிலிருந்து  தாங்கும் சிறிய ஆணியைப் போன்றவர்கள் ; அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது .
வள்ளுவனை விட சிறந்த அறிவுரை, இவ்வுலகில் யாரால் கூறமுடியும் ?



மௌரி நடனக் குழு தலைவியுடன் நானும் என் பேத்தியும் 

அங்கு நடனமாடிய மௌரி பெண்களின் தலைவி , என்னையும் மேடைக்கு அழைத்து , நாங்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் . அப்போது மலர்ந்த முகத்துடன்  "ஹாப்பி நியூ இயர் " என்று  நடனமாடிய அனைவருடனும், மேடையில்  சென்று  புத்தாண்டு வாழ்த்து பரிமாறிக்கொண்டதும்  எப்போதும் மறக்க இயலாத இனிமையான நினைவுகள் ஆகும் .
வாக்காரேவா  model  கிராமத்தில் பழங்குடி மௌரி மக்கள் , வாழ்ந்த வீடுகள் , ஓலை பாய்கள், உபயோகித்த பொருட்கள் , அடுப்பு மண் பாண்டம் உட்பட, மற்றும் உலோக ஆயுதங்கள், கத்தி , அவர்கள் அணிகலன்கள் , மர உரி  ஆடைகள் , எல்லாமே காட்சி படுத்தப்பட்டிருந்தன . அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்தேன் . 


நியூஸிலாந்தின் தனி தன்மை வாய்ந்த மரங்களுள் , போஹுதுகாவா,(PHOHUTUKAWA) எனும் கம்பீரமான அழகிய மரங்கள் குறிப்பிட தக்கவை .அதன் இலைகள் நெல்லி மரத்து இலைகள் போல் சிறியது , பூக்கள் சிவப்பு நிறத்திலும், ரோஸ் நிறத்திலும் ஊசி போல் அமைந்துள்ளது . வாக்கிங் போகும் போது பார்த்தால் ,கீழே கொட்டி கிடப்பது சிவப்பு கம்பளம் விரித்த மாதிரி அழகாய் இருக்கும் . ஆக்லாந்தில் TEARAROA என்னும் இடத்தில் , அடர்ந்த காட்டில் , 600 ஆண்டுகளுக்கு முன் பழமையான , போஹுதுகாவா மரம் இருப்பதைப் பார்த்தோம்.

ஆக்லாந்தில் 
sheep  farm  ஒன்றையும் கண்டு களித்தோம்.   நியூசிலாந்தில் செம்மறி ஆடு வளர்ப்பு ஒரு குறிப்பிடத்தக்க தொழில். 130 ஆண்டுகளாக, செம்மறி ஆடு வளர்ப்பு நாட்டின் மிக முக்கியமான விவசாயத் தொழிலாக இருந்தது, 1982 ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை 70 மில்லியனாக உயர்ந்தது, பின்னர் பால் மாடு வளர்ப்பு அதிகரித்ததும் , ஆடுகளின் எண்ணிக்கை சுமார் 27.6 மில்லியனாகக் குறைந்தது. Romney (ரோம்னே) என்ற செம்மறி ஆடு அதிக மாக வளர்க்கப் படுகிறது . இந்த ஆட்டின் ரோமம் அடர்த்தியாக, பார்க்க நல்ல புஸ் புஸ் என்று இருக்கும் பெரிய மலை களில் ஒவொரு மந்தையிலும் சுமார் 200/300 ஆடுகள் கூட்டமாக மேய்கின்றன மந்தையிலிருந்து ஆடுகள் பிரிந்து ரோட்டிற்கு .வந்துவிடாமல் இருக்க மலையை சுற்றிலும் வேலி போடப்பட்டுள்ளது . இந்த ஆட்டு மந்தைகளை மேய்ப்பது மனிதர்கள் அல்ல . என்ன வியப்பாக இருக்கிறதா? ஆம் ! நாய்கள் தான் மேய்க்கின்றன . ஹன்டவே என்ற ஜாதி நாய்கள் மிகவும் புத்திசாலி தனமாக தன் கனத்த குறைக்கும் குரலால் இந்த ஆடுகளை ஒன்று விடாமல் மலைகளிலிருந்து திரும்பி அழைத்து வந்து விடுகிறது. ஒரு ஆடு கூட miss ஆகாத வண்ணம் ஆடு மேய்ப்பது இந்த நாய் களுக்கு கை வந்த கலை .
ஆடுகளை ஓட்ட தங்கள் உரத்த,குரலில் குறைப்பதற்கென்றே, பயன்படுத்த ,அவை வளர்க்கப்பட்டன.

ரோபோக்களால் மனிதர்கள் வேலை இழக்க நேரிடும் என்று கேள்விப்பட்டுள்ளோம் ; ஆனால் நியூஸிலாந்தில் இந்த ஆடு மேய்க்கும் நாய்கள் வேலையை ரோபோக்கள் இப்போது செய்கின்றனவாம் .இந்த ரோபோ களுக்கு ட்ரான்ஸ் என்று பெயர் .
நாங்கள் சென்ற sheep farm ல் நாய்கள் ஆடு மேய்ப்பதை டெமோ செய்து காண்பித்தார்கள் . நேரில் கண்டு வியந்தோம். சலூனில் முடி வெட்டும் மெஷின் போல் கை மெஷின் வைத்துக்கொண்டு செம்மறி ஆடு ஒன்றின் முடியை வெட்டிக் காண்பித்தது மிகவும் வேடிக்கையாகவும் ,சுவாரஸ்யமாகவும் இருந்தது. என் பேத்தி மற்றும் சிறுவர்களை மேடைக்கு அழைத்து அவர்களையும் ஆட்டிற்கு முடி வெட்ட வாய்ப்பளித்தார்கள் .பிள்ளைகள் ஆசை ஆசை யாய் செம்மறி ஆட்டிற்கு முடி வெட்டினார்கள் . பின் குட்டி குட்டி ஆடுகள் வரவழைக்கப் பட்டன . அந்த ஆட்டுக்குட்டிகள் அழகை வருணிக்க வார்த்தைகள் இல்லை. கொள்ளை அழகாய் இருந்தன. தொட்டால் பஞ்சு மெத்தை போல் இருந்தது. ஆசையாய் மடியில் தூக்கி வைத்துக்கொண்டோம் . அந்த அமைப்பாளர் வந்து " Do you want to feed them milk ?" என்று கேட்டவாறே எங்களிடம் பீடிங் பாட்டில் நிறைய பால் கொண்டுவந்து கொடுத்தார் .நானும் அதனை வாங்கி , அளவில்லா ஆனந்தத்துடன் ஆட்டுக்குட்டிக்குப் பால் புகட்டினேன்.



ஷீப் பார்மில் செம்மறி ஆட்டிற்கு நான் பால் புகட்டும் போது .......

நியூஸிலாந்திற்கு ஆடுகள் ஒரு பொக்கிஷம் .ஆட்டு ரோமம் மற்றும் தோல் முதலியவற்றால் பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் , மற்றும் ஏற்றுமதி வணிகமும் நடைபெறுகின்றன. நியூஸிலாந்தில் ஒரு காலகட்டத்தில் ஒரு மனிதருக்கு 30 ஆடுகள் வீதம் இருந்தன . இப்போது ஒரு மனிதருக்கு 7 ஆடுகள் என்ற விகிதத்தில் இருக்கின்றன

புத்தாண்டு அன்று காலை எழுந்ததுமே , கோவிலுக்கு போகவேண்டும் என்று தோன்றியது. திருச்சியிலிருந்தால் நிச்சயம் ஐயப்பன் கோவிலுக்குச் சென்றிருப்போம் . டூர் பிளானில் , கோவில் ஏதும் போட வில்லை. இங்கே போய் கோவிலை எங்கு தேடுவது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன் . ஹோட்டலில் மற்றவர்கள் குளித்து ரெடி ஆகுமுன் , நானும் என் கணவரும் முதலில் ரெடி ஆகிவிட்டோம். சரி , சற்று வெளியில் வாக்கிங் போகலாமே என்று ஹோட்டலுக்கு வெளியில் வந்து காலார சுமார் 100 மீட்டர் நடந்து சென்றோம். அங்கே நாங்கள் எதிர் பார்க்காத வண்ணம் வட இந்தியர்கள் குஜராத்தி காரர்கள் காரில் குடும்பம் குடும்பமாக வந்து இறங்கி ஒரு கட்டிடத்திற்குள் சென்றனர் . நாங்களும் சுவாரஸ்யமாக அவர்களை பின் தொடர்ந்தோம். அந்த கட்டிடம் உள்ளே full air conditioned hall சுத்தமான வெள்ளை பளிங்கு கற்களால் ஆனது , நடுவில் அழகிய ராதா கிருஷ்ணா சிலை பூஜை நடந்து கொண்டிருந்தது . அதன் பெயர் "சுவாமி நாராயணன் கோவில் " வட இந்தியர்களால் கட்டப் பெற்ற, சிறிய, மிக அழகான, கோவில். எப்படி சுவாமி ஐயப்பன் எங்களுக்கு அன்று ,தரிசிக்க வழி வகுத்தார் என்று நினைக்கும்போது, உடம்பெல்லாம் புல்லரித்து . புது வருடம் , கோவிலுக்கு போக வேண்டுமே என்று காலையில் நினைத்தது நிறைவேறியது. எண்ணங்கள் தூய்மையாய் இருந்தால் , நாம் நினைத்தது நடக்கும் தானே ? அங்கு சிறிது நேரம் அமர்ந்து வட இந்தியர்களின் பஜனையைக் கேட்டு மகிழ்ந்தோம் . தீப ஆராதனை தரிசனம் செய்தோம். இனிப்பு அவல் பிரசாதத்தை உண்டு மகிழ்ந்தோம். இதற்குள் என் மகன், மருமகள், எல்லாம் எங்களை தேட ஆரம்பித்து விட்டார்கள் . பின், ஒரு வழியாக அவர்களையும் கோவிலுக்கு வரச்செய்து, எல்லோரும் புத்தாண்டில் பெருமாள் அருள் பெற்றோம் .

நியூசிலாந்தில் 200க்கு மேற்பட்ட பூர்வீக பறவை இனங்கள் உள்ளன . அவற்றில் பல உலகில் வேறெங்கும் காணப்படவில்லை .நியூஸிலாந்தின் தனித்துவமான பறவைகளில் , மாவோ, கீவீ , மற்றும் ஜெயண்ட் வீட்டா என்பதாகும் .கீவீ என்ற பெயரில் மனித இனத்தவரும் இங்கு நியூஸிலாந்தில் வசிக்கின்றனர் . நாங்கள் அங்கே சீனர்கள் தங்களது 175 ஆவது ஆண்டு நிறைவு நியூஸிலாந்து வாழ்க்கையை கொண்டாடியதைக் கண்டோம் . பல இடங்களில் பேனர் வைத்து "Chinese celebrating -175th year of stay in New Zealand " என்று எழுதப்பட்டிருந்தது . நியூஸிலாந்தில் சொத்து விலை, மிக அதிகமாக ஏறுவதற்குப் பணக்கார சீனர்கள் அதிகம் இருப்பதே காரணம் என்று நான் நினைக்கிறேன். வீடுக்கள் Hot cake ஆக ஏலம் போட்டு, போட்டி போட்டுக்கொண்டு விலை போவதை அங்கு நான் நேரில் பார்த்தேன். என் மகனுக்காக ஒரு வீடு வாங்க ஏலத்திற்கு சென்றோம் . நங்கள் 1மில்லியன் (10 லட்சம்) டாலர் வரை ஏலம் கேட்டோம்.அதற்கு மேல் விலை கேட்க வேண்டாமென்று என் மகனை , என் கணவர் தடுத்துவிட்டார் . அதனால் நாங்கள் அதற்கு மேல் ஏலம் கேட்கவில்லை . எங்களுக்கு போட்டியாக வந்து ஏலம் கேட்ட சீன தம்பதியினர் 10,20,000 டாலருக்கு அந்த வீட்டை ஏலத்தில் வாங்கிக்கொண்டனர் .அந்த மாதத்திலேயே நியூஸிலாந்து குடியுரிமை பெறாத அயல் நாட்டினர் பழைய வீடுகளை (Existing Homes ) வாங்க அரசாங்கம் தடை விதித்தது . எனவே என் மகன் பின்லாந்து குடியுரிமை பெற்றிருப்பதால், வேறு வழியின்றி , தனியாக இடம் வாங்கி புதிதாக வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் . நியூஸிலாந்தில் சராசரி சுமாரான வீடு வாங்குவதற்கு 5 to 5.5 மில்லியன் டாலர் ஆகும் .வெலிங்டன் , ஆக்கலன்ட் போன்ற பெரு நகரங்களில் 9 to 9.5 மில்லியன் டாலர் ஆகும் .உலகின் பல மில்லியனர், மற்றும் பில்லியனர்கள் நியூஸிலாந்தில் தம் இரண்டாவது வீட்டைக் கொண்டுள்ளனர் .ஏனெனில் இது உலகளாவிய ஆபத்து மண்டலங்களிருந்து விலகி ,உலக மோதல்களில் அதிகம் ஈடுபடாத அமைதியான நாடு .

இன்னுமொரு காரணம், இங்கு பருவகாலம் தலைகீழாக உள்ளது. நான் ஏற்கனவே சொன்னது போல் அமெரிக்க, ஐரோப்பா, கனடா, நாடுகளில் கடும் குளிர் காலமாக இருக்கும் போது நியூஸிலாந்தில் கோடை காலம் . தெற்கு அரைக்கோளத்தின் சூடான வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் ஒரு அழகான நேரத்தை செலவிட நியூசிலாந்தில் இரண்டாவது வீடு இருக்க பலர் விரும்புகிறார்கள் நியூஸிலாந்தில், வாழ்க்கை செலவு, கணவன் மனைவி இரண்டு பேர் மட்டு முள்ள குடும்பத்திற்கு மாதம் குறைந்தது 3500 to 5000 டாலர் செலவு ஆகும் . சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா போல நியூஸிலாந்தும் வந்தாரை வாழவைக்கும் பூமி .

பொதுவாக அமெரிக்காவில் ஹௌசிங் மார்க்கெட் , டல் ஆக இருக்கும். Existing Home நல்ல வீடு விற்பனைக்குப் போட்டால் கூட ,வாங்க ஆள் இருக்காது . ஆனால் நியூஸிலாந்தில் நல்ல வீடுகள் ஏலம் போட்டு சொன்ன தேதியில் எதிர்பார்த்த விலைக்கு மேலே விற்கலாம் . அவ்வளவு டிமாண்ட் இருக்கிறது .

இனி அங்கு நாங்கள் சந்தித்த , பழகிய அன்பு உள்ளங்களை , மனிதர்களை பற்றி சில தகவல்கள் எழுத ஆசைப் படுகிறேன் . புதுவயல் ராமையா அவர் மனைவி டாக்டர் . சித்ரா ,அவர்கள் பிள்ளைகள் மீனு, ஆதித்யா இவர்கள் வீட்டில் அறுசுவை விருந்து உண்டோம் . ஆதித்யா நன்றாகத் தமிழ் பேசுவான்; பாசமுடன் பழகுவான்;.


அதே புதுவயலை சேர்ந்த மீனா, முத்து , குடும்பம், அவர்கள் பிள்ளைகள் ஐஸ்வர்யா , விஷ்வா .
திருமதி .மீனா முத்து மிகவும் பொறுமையாக அருமையாக எங்கள் பேத்திகள் ஆர்த்தி பாரதிக்கு , தமிழ் எழுதவும் படிக்கவும் கற்பிக்கிறார்கள்

பலவாங்குடியைச் சேர்ந்த திரு. லட்சுமணன் செட்டியார் அவர் மனைவி டாக்டர் ,மணிமேகலை ஆச்சி. upper hutt ல் , (என் மகன் வீட்டுக்கு சற்று தொலைவில்) வசிக்கிறார்கள் .


ஆக்லாந்தில் பல ஆண்டுகளாக இருக்கும், Dr .சொக்கலிங்கம் நாராயணன் ,சிறந்த மருத்துவராக பணிபுரிவதுடன் ,தமிழில் சிறப்பாக எழுதும் புலமை உடையவர். ஆண்டு தோறும் தாயகத்திலிருந்து சிறந்த பேச்சாளர் ஓரிருவரை , ஆக்லாந்திற்கு வரவழைத்து , பேசச்செய்து , நம் கவியரசு கண்ணதாசனுக்கு சிறப்பாக விழா எடுத்து வருகிறார்.

வலையபட்டியை சேர்ந்த திருமதி அபிராமி ஆச்சி (பிள்ளையார் நோன்பு அவர்கள் வீட்டில் கொண்டாடினோம்) பிள்ளையார் நோன்பன்று என் கணவரின் பிறந்தநாளை அவர்கள் வீட்டிலேயே கொண்டாட நேர்ந்தது என்றும் என் நினைவில் இருக்கும். வடை பணியாரம், இட்லி சாம்பார், சட்னி எல்லாம் சில்வர் வாளியில் வைத்து பரிமாறினார்கள்.நியூஸிலாந்தில் அவர்கள் வீட்டில் சுவையான செட்டிநாட்டு பலகாரங்கள் சாப்பிட்டோம் .

ஐஸ்வர்யா- ஸ்ரீனிவாஸ்; அவர்கள் மகள் பிரகதி ; ஐஸ்வர்யா ஒரு .நல்ல பாடகி . sun tv பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் .குறிஞ்சி குமரன் கோவிலில் விழாக்களில் நன்றாகக் பாடுவார் . வீட்டிற்கே வந்து, எங்கள் ஆர்த்தி, பார்தி, மற்றும் அவர்கள் மகள் பிரகதி மூவரையும் அமரவைத்து , விடுமுறை காலத்தில் வாய்ப் பாட்டு கற்பிப்பார்.

வெற்றியூரைச் சேர்ந்த பஞ்சநாதன் அண்ணன் . அவர்கள் முதலில் வசித்தது மலேசியா வாகும் . மலேசியா வில் சீனப் பெண்ணை காதல் மணம் புரிந்தவர்கள் . மனைவி பெயர் பாஸ்வேன் (Fashwan). அவர்கள் நியூஸிலாந்தில், தன் மனைவி பாஸ்வேன் , பிள்ளைகள் யசோதா, அனந்தா,ஆகியோருடன் வசிக்கிறார்கள் .மனைவியை அனுராதா என்று பெயரிட்டு அழைக்கிறார்கள் .அவர்கள் வீட்டில் அறுசுவை விருந்து உண்டோம் .அனுராதா அவர்கள் சிரித்த முகத்துடன் தானே பரிமாறியது சிறப்பு அம்சம் .பஞ்சு அண்ணன் ஆண்டுதோறும் கோலாலம்பூர் சென்று தைப்பூசத்தன்று தொடர்ந்து காவடி எடுக்கிறார்கள் என்று அறிகிறேன் . அவர்கள் மனைவி அனுராதா என்ற பாஸ்வேன் ஆரம்பத்தில் சிங்கப்பூரில் வேலை பார்த்தார்களாம் .அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டடிருந்தபோது , சிங்கப்பூர் பிரதமர், லீ குவான் யூ , பற்றி சில சுவாரஸ்யமான செய்திகளைக் கூறினார்கள் .லீ குவான் யூ அவர்கள் ஆக்கலன்டில் உள்ள ரோட்டரூவா என்னும் ஊருக்கு வருடம் ஒரு முறையேனும் Mud bath (மணல் சேற்றை உடலில் பூசி குளிப்பது ) எடுக்க சிங்கப்பூரிலிருந்து இங்கு வருவார் என்று கூறினார்கள் லீ குவான் யூ 95 ஆண்டு நலமுடன் வாழ்வதற்கு இதுவும் ஒரு காரணமோ? . லீ குவான் யூ அவர்களை சரித்திரம் மறக்காது !

கடைசியாக நாங்கள் தாயகம் திரும்பு முன் , எங்கள் மகன் அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்க்கும் ஆங்கில நண்பர் ஒருவர் வீட்டிற்கு , விருந்திற்குச் சென்றோம்.அவர்கள் வீடு, சற்றே காடுகளுக்கிடையில் ஒரு சிறிய மலை மீது விஸ்தீரமான இடத்தில் தன்னந் தனியாகக் கட்டப்பட்ட வீடு .சுற்று முற்றும் கடை கண்ணி அக்கம் பக்கம் வீடு எதுவுமே இல்லை . Thomas Hardy யின் "Far from the madding crowd " என்ற தலைப்பு அந்த வீட்டின் அமைப்புக்கு சாலப் பொருந்தும் என நினைக்கிறேன் .அவர்கள் ஆசையாக வளர்ப்பது இரண்டு செம்மறி ஆடுகளை . ஒன்றின் பெயர் ராம்போ , மற்றொன்று யூஜினி .இன்னுமொரு குட்டி ஆடு நின்றது . அதற்க்கு பெயர் வைக்கவில்லை என்றார்கள். ஏன் என்று கேட்டதற்கு " we are soon going to put her in the freezer.." என்று கூறினார்கள் . அதாவது அதனை சீக்கிரமே உணவுக்கு பயன் படுத்தப் போவதால் அதற்கு பெயர் வைக்க வில்லையாம் . நான் சைவ உணவு சாப்பிடுபவள் , எனவே அந்த ஆட்டைப் பார்த்து இரக்கப் பட்டேன் . என்னால் வேறு என்ன செய்ய முடியும் ?

தாயகம் திரும்புவதற்கு ஒருநாள் முன்னாள் , மதுரையைச் சேர்ந்த கிருத்திகா, சரவணன் என்ற இளம் தம்பதியர் வீட்டிற்க்கு, விருந்திற்குச் சென்றோம். தம்பதியர் இருவரும், பணி புரிகிறார்கள் . கிருத்திகா எங்கள் பேத்தி ஆர்த்திக்கு, நடனக் கலைவிழா விற்கு, அழகாக நேர்த்தியாக , ஒப்பனை செய்தவர். விரைவில் இந்த தம்பதியருக்கு மழலைச் செல்வம் கிடைக்கட்டும் என்று வாழ்த்தி விடைபெற்றோம்

ஒரு வழியாக தாயகம் திரும்பும் நேரம் வந்தது. பேத்தி களிடம் பிரியா விடை பெற்று விமானம் ஏறினோம் .சிங்கப்பூர் வந்து இறங்கியதும் அடுத்த கனக்ஷன் flight க்கு சரியாக 8.30 மணி நேரம் இடைவெளி இருந்தது.பகல் முழுவதும் சிங்கப்பூ சுற்றிப்பார்க்க ட்ரான்சிட் விசா என்ட்ரி பெர்மிட் அந்த நாட்டு அரசாங்கம் வழங்குவதால், அதனைப் பயன்படுத்தி சிங்கப்பூர் ஊருக்குள் சென்றோம் . 18 ஆண்டு களுக்கு முன்னால் எங்கள் மகன் கண்ணனுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த பாபு என்பவர் ஏர்போர்ட் வந்து எங்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் . சிங்கப்பூர் என்றாலே எனக்கு ஒரு மயக்கம் உண்டு . என் இளமைக் காலத்தில் 9 ஆண்டுகள் துள்ளலுடன், துடிப்புடன் , 1958 முதல் 1966 வரை , சந்தோசமாக கழித்த இன்ப பூமி அது . சில மணி நேரங்கள் காலை முதல் மாலை வரை சிங்கப்பூரில் இருக்கப் போகிறோம் என்ற நினைப்பே என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது .பாபுவின் வீடு , ஒரு அடுக்கு மாடி வீடு .மனைவி பபிதா ; ஒரே ஒரு செல்லப் பெண் 10 வயது ஜென்னி .பெங்களூர் சென்னை, ஜெர்மனி இல் வேலைபார்த்து விட்டு தற்சமயம் பாபு - பபிதா தம்பதிகள் , சிங்கப்பூரில் வசிக்கிறார்கள் . அளவான அழகான சிறிய குடும்பம் . சிங்கப்பூரில் எல்லா இடங்களும் சுற்றி பார்க்க நேரமில்லை என்றாலும் ஒரு சில இடங்கள பார்த்தோம்.சிங்கப்பூர் தெண்டாயுத பாணி கோவிலைப் போய் பார்த்தபோது, அவ்வளவு ஒரு மன நிறைவாக இருந்தது .50 ஆண்டுகளுக்கு முன்னர் , நானும் என் தோழி , முல்லை ராமையாவும் , ஒரே மாதிரி உடை அணிந்து பட்டுப் பாவாடை, பட்டுச் சொக்காய் , ஜிமிக்கி கம்மல் , ரிப்பன் வைத்து மடித்துக்கட்டிய ரெட்டை ஜடை போட்டு, தலை நிறைய பூ வைத்து கொண்டு, இந்த கோவிலில் , மேடைக் கச்சேரி செய்தது , எல்லோரும் எங்களை பாராட்டியது, பளிச் சென்று நினைவிற்கு வந்து, என்னை கடந்த காலத்திற்கு கூட்டிச்சென்றது .நாங்கள் கச்சேரி செய்த , அந்த மேடையைப் பார்த்தபோது , அந்த இளமைக் காலம் மீண்டும் வராத என்று தோன்றியது .அந்த மேடைக்கு பின்னல் மிகப்பெரிய நடராஜர் சிலை வைக்கப் பட்டுள்ளது .


..




சிங்கப்பூர் தெண்டாயுத பாணி கோவிலில் நான் இளமையில் கச்சேரி செய்த மேடை ; உடன் நிற்பது என் கணவரும், பாபு மனைவி பபிதா மற்றும் அவர்கள் மகள் ஜென்னி


கோவிலில் என்னைத் தெரிந்த ஆச்சிமார்கள் சிலர் " நீ கலையா ??!" என்று ஆச்சர்யத்துடன் வினவி நட்பு பாராட்டிப் பேசியது விந்தையிலும் விந்தையாகும். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நான் அங்கு வசித்த போது என்னை அறிந்தவர்கள் , (நான் அவர்களை நினைவில் நிறுத்தாத போதும் ) அவர்கள் , என்னை ஞாபகம் வைத்து விசாரித்தது அவர்களுடைய சிறப்பு என்றே சொல்லவேண்டும் .
பாபு வீட்டில் எங்களுக்காக
key board வசித்துக் காண்பித்தார் . சிரித்துப் பேசி மகிழ்ந்து , உணவருந்தி ,சரியான நேரத்திற்க்கு ஏர்போர்ட் வந்தோம். பாபு, பபிதா, ஜென்னி, எங்களை ஏர்போர்ட் வரை கூட்டிவந்து வழியனுப்பினார்கள் . சிங்கப்பூரை பிரிய மனமின்றியே விமானத்தில் ஏறிச் சென்னை வந்தடைந்தோம் .


kaykonara (கேகோனாறா ) ...!! மௌரி மொழியில், கேகோனாறா, என்றால் விடைபெறுகிறேன் என்று பொருள் . Bye Bye . வாழ்க வளமுடன் . வாழ்க வையகம். வளர்க நியூஸிலாந்து .!!
வணக்கம் .-




Tuesday, August 14, 2018

chapter 1எங்கள் அமெரிக்க சுற்றுலாவின் இனிய நினைவுகள் chapter 1


(2004 April நகரத்தார் மலரில் வெளிவந்த கட்டுரை)


சமீபத்தில் 2003ல்  நானும் என் துணைவரும் ஒரு சில மாதங்கள் எங்கள் பிள்ளைகள் செந்தில்குமார்,திருநாவு ஆகியோருடன் தங்கி, அமெரிக்காவில் சுற்றுலா சென்று வந்தோம். Almost whole of U.S.A, ஆங்காங்கே 'flight' இல் சென்று சுற்றிப் பார்த்து விட்டு வந்தோம், என்று கூறினால் மிகையாகாது. நாங்கள் பார்த்து ரசித்த ஊர்களையும், இடங்களையும் சொல்லப் போனால், அப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். எனினும் சில முக்கியமான இடங்களையும், சம்பவங்களையும் அவசியம் குறிப்பிட விரும்புகிறேன்.

Washington இல் Dollars print பண்ணுகிற இடத்தையும் மற்றும் NewYork இல் சின்னத்தீவில் உள்ள Statue of liberty, சுதந்திர தேவியின் சிலையையும் படகில் மிக அருகில் சென்று பார்த்ததும் பிரமித்துப் போனோம். "Washington Lincoln Memorial"-(முன்னாள் அமெரிக்க  அதிபர் ) அவர்களின் மிகப்பெரிய சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. அமெரிக்காவில் அப்போது நிலவிய அடிமைத்தளையை தகர்த்தெறிவதற்காக அரும்பாடு பட்டு கொடியவனின் குண்டுக்கு இரையானவர்  'லிங்கன்' என்ற அந்த  மாமனிதர். 'அமெரிக்காவின் காந்தி' என்றே கூறலாம் என்று எண்ணுகிறேன். அங்கே அவர் கூறிய வாசகங்கள் "Each and everybody has a right to live their own live independently, as long as they don't interfere  in the rights of others-life, liberty and pursuit of happiness should be equal to all" என்று பொறிக்கப்பட்டிருக்கின்றன. அந்த நெஞ்சைத் தொடும் வாசகத்தை பலமுறை படித்தேன். அந்த மாமனிதரின் உருவத்தை வணங்கி விட்டு வந்தேன்.

அதேபோன்று, தன் நாட்டு மக்களுக்காக தன் இன்னுயிரை நீத்து , கொடியவனின் குண்டுக்கு இரையான அமெரிக்க  அதிபர் John F. Kennedy யின் சமாதியை   Arlington என்ற ஊரில் பார்த்து, அங்கே 24 மணி நேரமும், நம் காந்தி சமாதியைப் போன்றே, எரியும் அந்த அணையா ஜோதியையும்  பார்த்து வணங்கினோம். அப்பொழுது , "Ask not what your country did for you, ask what you did for the country", என்று பல ஆண்டுக்கு முன்னர் கென்னடி தன் நாட்டு மக்களுக்கு கூறிய அறிவுரை, " நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று கேள்" என்பது எனக்கு நினைவிற்கு வந்தது. கென்னடி என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது அந்தப்  பொன்னான வரிகள் தானே. ஒவ்வொரு குடிமகனும் தன் பங்களிப்பை தன்னை ஈன்று வளர்த்த தன் தாய் நாட்டிற்காக அவசியம் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் அப்போது மேலோங்கியது.

மிக முக்கியமாக நாங்கள் பார்த்துப் பரவசமடைந்தது U.S.A. க்கும் Canadaவிற்கும் இடையே உள்ள border ல் அமைந்துள்ள உலகிலேயே மிகப் பெரிய நீர் வீழ்ச்சியான "Niagara Falls" தான். "Maid of the Mist", என்ற படகு மூலமும், "Cave of the Winds" எனும் டூரிலும் நீர் வீழ்ச்சியின் மிக அருகே செல்லும் போதும், அந்தச் சாரல் நம் மீது விழுவது பேரானந்தம் தரவல்லது. அது  ஒரு  , "நீர் வீழ்ச்சி" அல்ல; பொங்கி எழும் " நீர் எழுச்சி" என்றே எனக்குத்  தோன்றியது ..

பாற்கடல் வானத்திலிருந்து அப்படியே நுரை நுரையாய் பொங்கிக் கீழே வீழ்ந்து, திரும்ப அந்த சாரல் மேலே வெண்மேகங்களாகப் பறக்கிறது. ஒரு நாள் முழுவதும் அங்கே தங்கி, பல வண்ணப் படங்கள் எடுத்துக் கொண்டதெல்லாம் நினைக்க நினைக்க ஆனந்தம். Niagara Falls இல் எழுதப்பட்டிருப்பது "Once a life-time journey" என்று "Niagara"வில் என்னால் மறக்க முடியாத நிகழ்வு, பல அமெரிக்கப் பெண்மணிகள், "I like you, I like your outfit, You are looking pretty, You look like a typical Indian, Shall I take a photo with you", என்று என்னுடன் சேர்ந்து என்னை அணைத்துக் கொண்டு, பல வண்ணப் படங்கள், தத்தம் கேமராக்களில் எடுத்துக் கொண்டது. என் வாழ்வில் மறக்க முடியாத அநுபவம்தான். நான் அணிந்திருந்த புத்தம்புது காஞ்சிபுரம் பட்டுச் சேலைக்கு அங்கே அவ்வளவு ஈர்ப்புத் தன்மை இருந்தது என்னவோ உண்மைதான்.
(போட்டோ:  நயாக்ரா நதி அருகில் மூத்த மகன் திருநாவு வுடன் )


"Seratoga" (சேரடோகா) என்ற ஊரில் ஒரு சிறிய மலை மீது கட்டப்பட்டுள்ள என் அத்தை மகள் தமிழரசியின் எழில் மிகு வீட்டில் சில தினங்கள் தங்கியது இனிமையான அனுபவம். சுற்றிலும் செடி, கொடி, மரங்கள். ஆரஞ்சுப் பழ மரங்கள், பெரிய பெரிய கலர் கலர் ரோஜாப்பூச் செடிகளுடன் கூடிய இயற்கையுடன் அமைந்த சூழ்நிலை மனத்திற்கு மகிழ்வையும், அமைதியையும் தந்தது. அங்கே தமிழரசியின் சகோதரிகள், நாச்சம்மை, மற்றும்  Dr. தில்லைக்கரசி தத்தம் குடும்பத்தினருடனும்  5 மணி நேரங்கள் கார்  ஓட்டிக் கொண்டு மெனக்கெட்டு என்னைக் காண்பதற்காக,  வந்ததும், பத்தாண்டுகள் கழித்து அவர்கள் மூவரையும் சந்தித்து, இரவு 2 மணி வரை மலரும் நினைவுகளாக, பழைய கதைகளைப் பேசி மகிழ்ந்ததும், 8 ஆண்டுகள் கழித்து என் தங்கை நாச்சு நடராஜனை (பல ஆண்டுகளாக U.S.A யில் வசித்து வரும் பிரசிடென்ட் அண்ணாமலை செட்டியார்-நாச்சம்மை ஆச்சி அவர்களின் மருமகள்) Davis இல், பெரிய வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும் தோட்ட அமைப்புடன் கூடிய அவர்களின் எழில் மிகு இல்லத்தில் சந்தித்து, அவர்கள்  பிள்ளைகள் பாரதி, இளங்கோவுடன் விளையாடியதும், என் வாழ்வில் ஏற்பட்ட மிக மகிழ்வான அனுபவமன்றோ?

'Niagara' விற்கு அடுத்தபடியாக, நான் குறிப்பிட வேண்டியது, "Florida" மாகாணத்தில் உள்ள மிகப் பிரம்மாண்டமான "Walt Disney World" ஆகும். Disney World ஒரு தனி உலகம். அதை முழுவதும் சுற்றிப் பார்ப்பதென்றால், ஒரு வாரம் கூடப் போதாது. அந்ந கேளிக்கைகள் நிறைந்த இடம் மிக அதிசயமான, அற்புதமான உலகம். சிறுவர்களும் மற்றும் அனைத்து வயதினரும் பொழுதுபோக்குவதற்கு ஏற்ற மிக மகிழ்ச்சியான, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இடம். பல வண்ண வண்ண, கலை நயத்துடன் கூடிய பொம்மைகள், குதூகலிக்க வைக்கும் , மோர்ட்டோர் அணிவகுப்பு, பல நாட்டு பெவிலியன்கள் என்று, எதை எழுத, எதை விட?.   ஜப்பான் பெவிலியனில் நம் கண் முன்னரே சிப்பியை வெட்டி, அதன் வயிற்றைக் கீறி, முத்து எடுத்து தருகிறார்கள். அந்த முத்துவின் விலை 17 Dollar ( ஒரே ஒரு சிறிய முத்துவின் விலை கிட்டத்தட்ட 850 ரூபாய் ஆகிறது. இந்த முத்துக்களை பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.(Disney World வந்து சென்றதன் நினைவாக).

40 ஆண்டுகட்கு முன்னர், எங்கள் அன்பு அப்பா அமரர் (வேந்தன் பட்டி தமிழ் ச் சான்றோர்) மெ. திரு. அரசு அவர்கள், தொலைக்காட்சியின் நுட்பங்களைப் படிப்பதற்காக ஜப்பான் சென்று வந்த போது, String of pearls (Mikimato pearls) (முத்து மாலைகள்) வாங்கி வந்து, அதை சிங்கப்பூரில் தங்கத்தில் சேர்த்து முத்து மாலைகளாகக் கட்டி, நானும், என் தங்கையும் தற்போதும் அணிந்து வருவதையும் நினைத்த போது, கண்கள் பனித்தன. தற்போது அந்த ஒரு 'Mikimoto pearls' இன் விலை 100 U.S Dollars என்று அறிந்த போது கண்கள் வியப்பில் விரிந்தன.



                             (Photo : Disney world ல், நானும்  என்  பேத்தி சிந்துவும் Mikimoto pearls மாலையுடன் )



Walt Disney Worldஇல் 4D film பார்த்த போது, அந்தத் திரையில் வரும் மிகப்பெரிய பாம்பு, நம்மை உண்மையிலேயே கடிக்க வருவது போன்ற காட்சி வந்த போது, பயத்தில் கண்களையும், கைகளையும் இறுக்க மூடிக் கொண்டேன் , என் 6 வயது செல்லப் பேரன், பேர்த்திகள் வினீத், சிந்து தைரியமாக அந்த நிகழ்ச்சியைப் பார்த்ததுடன்,"அப்பத்தா, பயப்படுறீங்க, ஐயா கையைப் பிடிச்சுகங்க", என்று என்னைப் பார்த்து கேலி செய்ததும் என்னால் எளிதில் மறக்க முடியுமா என்ன?

July 4th U.S, சுதந்திர தினத்தன்று, வெட்ட வெளியில் அமெரிக்கர்களுடன், ஒரு பெரிய திடலில் புல் வெளியில் அமர்ந்து, வானை வேடிக்கை பார்த்தது மன நிறைவாக இருந்தது.

Austinஇல் நடந்த தமிழ்ச்சங்கத்தில் ஒரு மீட்டிங்கில் பல ஆண்டுகள் கழித்து என் மிக நெருங்கிய தோழியான 'இன்னிசை அரசி', 'பட்டிமன்றப் பேச்சாளர்' திருமதி. சரஸ்வதி இராமனாதன் அவர்களைச் சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடியது நான் பெற்ற பேறாகும்.

அப்போது அவர்கள் "கம்பனும், கவியரசு கண்ணதாசனும்" என்ற தலைப்பில் சுவையாக உரையாடினார்கள். அந்த நிகழ்ச்சியின் போது, வளர்ந்து வரும் இளம் பின்னனி பாடகி மதுமிதா, மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் சாருலதா ஆகியோரின் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. அப்போது சாருலதா அவர்கள் மூதறிஞர் 'இராஜாஜி' அவர்களின் "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா", என்ற பாடலையும், ஊத்துக் காடு வேங்கட சுப்பையரின் "அலைபாயுதே கண்ணா" என்ற பாடலையும் உணர்ச்சி ததும்பப் பாடியது, இன்று நினைக்கும் போதும், உள்ளத்தை பரவசமாக்குகிறது. அன்று இவர்கள் மூவருடனும் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.

‘Detroit' இல் உள்ள என இன்னொரு தோழி திருமதி. உமையாள் முத்து அவர்களை நேரில் பார்க்க இயலாவிடினும், phone இல் அவர்களுடன் மணிக்கணக்காக உரையாடியது மகிழ்ச்சியைத் தந்தது மற்றொரு அநுபவம்.

அமெரிக்கர்களைப் பற்றிப் பொதுவாக "அமெரிக்காவில் "Divorce" என்பது சர்வ சகஜம். ஒருத்திக்கு ஒருத்தன் என்ற கட்டுப்பாடெல்லாம் கிடையாது. சட்டையைக் கழற்றி எறிவதைப் போல், தத்தம் கணவனை, மனைவியை Divorce பண்ணிவிட்டு இரண்டாவது, மூன்றாவது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? " என்று நாம் ஏளனமாகப் பேசுகிறோம். அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அது அவரவர்கள் மனநிலையைப் பொறுத்தது. கூடி வாழ்வதும், பிரிந்து வாழ்வதும் அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் ஒன்று நிச்சயம். அமெரிக்கர்கள் பண்புள்ளவர்கள். நாங்கள் walking செல்லும் போது கூட, பலரும் எங்களைப் பார்த்து, சிநேக பாவத்துடன், முகமலர்ச்சியுடன் நெடுநாள் பழகியவர்களைப் போன்று, கைகளை உயரே அசைத்து "Hai"என்றும் "Bye" என்றும், "Have a nice day" என்றும், "Have a good day" என்றும் இன்முகத்துடன் கூறியதும் என்னால் வாழ்வில் என்றைக்குமே மறக்க இயலாத இனிமையான, அற்புதமான அநுபவங்களாகும்.

"அன்புதனில் செழித்திடும் இவ்வையகம்",
என்று மகாகவி பாரதி அன்று பாடியது, அமெரிக்காவில் வாழும் மனிதர்களின் செயல்களை நடைமுறையில் இன்று பார்த்ததும் நினைவிற்கு வருகிறது. அமெரிக்கர்கள் எங்களிடம் முகமலர்ச்சியுடன் பேசும்போது
"சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவனிருக்கு
பின்னர் காசு பணம் என்னத்துக்கு" 
என்ற திரைப்படப் பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.

மிக முக்கியமாக அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, நம் பாரம்பரிய மிக்க இந்துக் கோயில்கள் தான். பல ஊர்களில் வட இந்திய அமைப்பில், பளிங்கினால் கட்டப்பட்ட பெருமாள் கோவில்களும் (அசல் திருப்பதி போன்றே) மேலும் Houstonஇல் உள்ள மீனாக்ஷி அம்மன் கோவிலும் என்னை மட்டுமல்ல, நம் இந்தியர்கள் அனைவரையுமே ஈர்க்கும் தன்மை வாய்ந்ததுதான். ஆங்கே நிலவிய அமைதியும், தூய்மையும், தெய்வீகமும் அளவிடற்கறியது. அதே மாதிரி சூழ்நிலை அமைந்த தெய்வீக ஸ்தலம், திருச்சியில் அமைந்துள்ள புத்தூர் கன்டோன்மென்ட், சுவாமி ஐயப்பன் கோவில் என்பது எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று.

நாங்கள்  அமெரிக்காவில் பல ஊர்களுக்குச் சென்றபோது நான்  சுத்த சைவமானதால், உணவுப் பிரச்சினை வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் எண்ணியதற்கு மாறாக, பல பெரிய நகரங்களில் கூட (even in New York) நம் தென்னிந்திய உணவு வகைகளான பொங்கல், இட்லி, வடை, மசால் தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதம் (ஊறுகாயுடன்) கிடைத்து, நான் விரும்பிச் சாப்பிட்டு  மகிழ்ந்தேன் .. அங்கே, New York இல் ஒரு பெரிய கடையில், "Save a cow, be a vegetarian", என்று ஒரு slideல் எழுதப்பட்டிருந்தது". அமெரிக்கர்கள் பலர் சைவ உணவின் மகத்துவத்தை உணர்ந்து (vegetarian diet is good for the body as well as the mind) என்பதை அறிந்து, தற்போது சைவ உணவிற்கு மாறி வருவது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

"கொல்லான் புலாலை மறுத்தானைக்
கை கூப்பி எல்லா உயிரும் தொழும்", 


என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வள்ளுவர் பாடிய குறள் தற்போது நினைவிற்கு வருகிறது.

அங்கே வேறு ஒரு slide இல், ""A women always gives sound advice, sound 99% and advice 1% என்று எழுதியிருந்ததைப் பார்த்துப் பலரும் சிரித்தனர்.

இடையே ஒரு வேதனையான காட்சியை  தங்களிடையே பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். நல்லதை மட்டுமே எழுதாமல் இதையும் எழுதுகிறேன். Washingtonஇல் Holocaust museum" என்ற ஒன்று உள்ளது. அங்கே ஜெர்மானிய அதிபர், கொடுங்கோலாட்சி அதிபர், மக்களை, ஒரு பெரிய ஹாலில் தள்ளி, கீழே gas chamber ஐத் திறந்து விட்டு, அத்தனை பேரையும் சாகடித்ததையெல்லாம், விளாவாரியாக பல சித்திரங்கள் மூலம் விவரித்திருக்கின்றனர். அப்போது T.V.Screen இல் ஒரு 80 வயது மூதாட்டி Hitler பிடியிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியவர் பேசியதைப் பார்வையாளர்களுக்குப் போட்டுக் காட்டினார்கள். "Have you heard any one punished for no reason? Yes. We were punished for no reason at all, just because we followed our own religion.
I will never forget and forgive", என்று  அந்தமூதாட்டி  கண்களில் நீர் மல்கக் கூறியதை, screenல் போட்டுக் காட்டியபோது, அதைப் பார்த்த அத்தனை பேர் கண்களும் குளமாகியது. அந்த மூதாட்டி பேசியதை இப்போது நினைத்தாலும் மனது உருகுகிறது. தற்போது உலகில்  இந்த மாதிரி நிலைமை எங்குமே இல்லை என நினைத்து  ஆறுதல் அடைவோம். எம்மதமும் சம்மதம், எந்த இனத்தவரும் நம் சகோதரர்", என்ற ஒற்றுமை உணர்வுடனே நாம் அனைவரும் மன நிறைவுடன் வாழ்ந்து வருகின்றோம்.

அமெரிக்கர்கள் பலர், தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டிருக்கின்றனர். அது அவர்கள் தேசப்பற்றை வெளிக் கொணர்கிறது.

'நாணல்' என்ற வழுவழுப்பான மாதப் பத்திரிக்கை நம் இனத்தோருக்காக வெளிவருவதும், பலர் அதை விரும்பிப் படிப்பதும், நம் பாரம்பரிய மிக்க "பிள்ளையார் நோன்பை மார்கழி மாதம் ஆண்டுதோறும் நம்மவர்கள் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து கொண்டாடி வருவதும் மனநிறைவான, மகிழ்வான விஷயங்கள். அமெரிக்காவில் பல ஆண்டுகளாக, பல இலட்சக்கணக்கான நம் இந்திய சகோதர சகோதரிகள் பல்வேறு உயர் பதவிகளை நேர்மையுடன் வகித்து, போராடி, புகழோடு, பங்களா, கார், வேன் என்று அனைத்து வசதிகளுடன் வாழ்ந்து வருவது உண்மையிலேயே போற்றுதலுக்குறிய, மகிழ்வான அம்சமாகும். அந்த  இந்தியர்கள் தாம் மட்டும் வசதியான வாழ்க்கை வாழாது, தம்மை ஈன்றெடுத்த தாய் வீடான தாயகத்தை, தமது பாரத தேசத்தை, மறவாது, இந்த மண்ணில் வசித்து வரும் நலிவு ற்றோர்க்குத் தயங்காமல், தங்களால் இயன்ற வரை நல்ல மனத்துடன் பொருளுதவி செய்து வருவதும், நெகிழ்வான, பாராட்டப்படட வேண்டிய விஷயங்கள் தான்.

அமெரிக்காவின் அதிசயங்களைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த மாதிரி ஒரு அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்ததற்கு, அந்தப் பரம்பொருளுக்கு நன்றி செலுத்துகிறேன்.

'Flight' இல் நாங்கள் தாயகம் திரும்பி வந்தபோது, எங்கிருந்தோ தென்றலில் தவழ்ந்து, தேனாய் ஒலித்து, எங்கள் உள்ளத்தை கிறக்கத்தில் ஆழ்த்திய பாடல்,

"ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்.
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்".


May God Bless America
May God Bless the whole Universe.

Wednesday, August 8, 2018

chapter 5ஓ இனிய ஃபின்லாந்த்தே ஃபின்லாந்த்தே

ஓ இனிய ஃபின்லாந்த்தே  ஃபின்லாந்த்தே  !
கலைச்செல்வி இராமனாதன்.T, திருச்சி


2013 December ல் நகரத்தார் மலரில் வெளிவந்த கட்டுரை 

நான் இரண்டு  முறை (2005, 2009)  பின்லாந்து சுற்றுப்பயணம்  மேற்கொண்டு,  ஃபின்லாந்தைப் பற்றி நீண்டதொரு தொடர்  பயணக் கட்டுரை  எழுதி,
 நகரத்தார் மலரில் வெளிவந்துள்ளது. இப்போது , மூன்றாவது முறையாக அண்மையில்(2013ல் ) அங்கு சென்று வந்தோம்.

இப்போது  ஒரு சில முக்கிய அனுபவங்களை மட்டும் தங்களுடன் மீண்டும்  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆமாம்,  "Finland has the lowest crime rates in the world” என்பாது சாதாரணமான விஷயமல்ல . "ஃபின்லாந்து உலகிலேயே மிகக் குறைவான தவறுகள் நடக்கும் தேசம்" என்பது மிகவும் உண்மை . அதுவும் நூற்றுக்கு நூறு உண்மை. . ஒரு சின்ன நிகழ்வை பகிர்கின்றேன் .

 எனக்கு எப்போதுமே என் மகன் கண்ணன் வீட்டிற்கு அருகிலிருக்கும் ரோஜாச் செடியிலிருந்து பூப்பறித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு. அதே போல் நான் நம் தாயகத்திற்குப் புறப்பட்டு வரும் நாளன்று - ஆகஸ்ட் 27, 2013 அன்று அதிகாலை மூன்று மணி இருக்கும், நான்
தனியாக எல்லா நகைகளும் போட்டபடி அமைதியாக அதே இடத்திற்கு நடந்து சென்று அதே செடியிலிருந்து அந்த ரோஜா மலரைப்பறித்துத் தலையில் சூட்டிக் கொண்ட போது, எனக்கு மனநிறைவு ஏற்பட்டது மட்டுமன்றி, நம் தேசப் பிதா காந்தியடிகள் கூறிய வாசகமும் நினைவிற்கு வந்தன.

எப்போது ஒரு பெண் தன்னந்தனியாக எல்லா நகைகளையும் போட்டுக் கொண்டு நடு இரவில் பயமின்றி நடந்து வர முடிகின்றதோ, அன்று தான் நம் நாடு சுதந்திரம் அடைந்த நாடாக நாம் கருத முடியும்” என்பதே, நம் நாடும் ஃபின்லாந்து தேசம் மாதிரி மாறாதா?"  என்று ஒரு சின்ன ஏக்கமும் என்னுள் தோன்றியது அப்போது.

அடுத்ததாக நம் கண்களுக்குக் குளிர்ச்சியூட்டும், ஒரு இளஞ்ஜோடிகளின் குறும்புத் தனத்தை, நான் ரசித்த காட்சியை எழுதட்டா? ஒரு அழகான ஃபின்னிஷ் பெண் (ஆம், பதின்மர் வயது - Teen age) அதே போல் ஒரு அழகா ஃபின்னிஷ் பதின்மர் வயதுப் பையன் (சுருட்டைத் தலையுடன் கூடிய Teen age பையன் ) இருவரும் ஒரு உணவகத்தில் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்,  என் மகன் வீட்டிற்கு அருகிலிருக்கும்  அந்த   உணவகத்திற்கு நானும், என் துணை வரும், எங்கள் மகன், மருமகளுடன், பேத்தி ஆர்த்தி, பாரதியுடன் ஏதாவது snacks சாப்பிடுவோமே என்று ஒரு மாலை நேரப் பொழுதில் சென்றிருந்தோம் .
அந்த உணவகத்திற்குச் சென்றால் பெரும்பாலும் நாங்கள் விரும்பி வாங்குவது உருளைக்கிழங்கு Finger chips தான். சின்னச் சின்னக் கப்புகளில் தக்காளி Sauce உடன் தருவார்கள். அதே போல் அன்றும் நாங்கள் Finger chips வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, என்ன நடந்தது என்றால்,  அந்த இளம் பெண் ஒவ்வொரு  Finger chips ஆக எடுத்து, சிரித்து சிரித்துக் கொண்டே ஏதேதோ அவர்கள் மொழியில் கலாய்த்துக் கொண்டு, அந்த இளம் பையனின் வாயில் தூக்கி தூக்கிப் போடுவதும், அந்தப் பதினெட்டு வயதுப் பையன் ஆ ஆ வென்று வாயைத் திறந்து Catch வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே கலாய்த்துக் கொண்டிருப்பதும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அப்படியே அந்தத் தட்டிலிருந்த அத்தனை Finger chips ஐயும் அந்தப் பையன் ஸ்வாஹா செய்தது வேடிக்கையான  காட்சியாக இருந்தது. அப்போது அந்த இளம்பெண் முகத்தில் தெரிந்த சிரிப்பு, அடேயப்பா, மறக்க முடியாது. வாழ்க அந்த இளம் ஜோடி..


இன்னும் ஒரு சில மறக்க முடியாத நிகழ்வுகளுடன் இந்தச் சிறிய கட்டுரையை நிறைவு செய்கிறேன்.  ஃபின்லாந்தில் ஒரு தீவில் உள்ள மிகப் பெரிய மிருகக் காட்சி சாலைக்குச் சென்றிருந்தோம். இயற்கையான மிக மிக அடர்த்தி யான செடி கொடிகள் அடங்கிய சூழ்நிலையில் அமைக்கப்பட்ட மிருகக் காட்சி சாலை அது. அவ்வளவு பெரிய இடத்தில், நான் மட்டும் தனியாக விடப்பட்டு எப்படியோ, செரீனா என்ற நல்ல மனம் உடைய ஒரு ஆங்கிலப் பெண்ணின் உதவியால், நான் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன் என்பது ஒரு தனிக்கதை. குறிப்பாக இந்த சம்பவத்தை நான் ஏன் எழுத வருகிறேன் என்றால், தயவு செய்து இதைப் படிக்கும் அனைவரும், எங்கு சென்றாலும் தாங்கள் Cell - Phone Battery Full charge with contact numbers அவசியம் வைத்துக் கொள்ளுங்கள். Cell Phone ம் இல்லாமல், நான் அன்று மிகவும் பயந்து போய்விட்டேன். அதுவும் அந்நிய தேசத்தில். ஆகவே என்றும் Cell Phone சேவை அனைவர்க்கும் எக்கணமும் தேவை என்பதே என் அன்பான அறிவுரை.


நாங்கள் தாயகம் வருமுன் என் ஐந்து வயதுப் பேத்தி பாரதியிடம் ""Will you Come to India with us? ” என்று கேட்ட போது, அக்குட்டிப் பெண்,  சுட்டிப் பெண் கூறிய பதில், "Yes, I'II Come, but olivia also should come and also Choko too" என்றாளே பார்க்கலாம். Olivia - அவளுடன் படிக்கும் குட்டிப் பெண். (Choko - Olivia வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி ! போதுமா.?!

முன்பே ஒரு முறை எழுதியுள்ளேன். இங்குள்ளவர்கள் ஆசை ஆசையாய், அருமை அருமையாய் அப்படி அன்புடன் பாசத்துடன், தங்கள் நாய்க்குட்டி களை, பெற்ற, குழந்தைகளுக்கு மேல் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள் என்று
இந்த முறை பின்லாந்தில் இருக்கும் சமயம் ஜூலை 9 ,என் பிறந்த தினத்தை பெயர்த்தி களுடன் விமரிசையாகக் கொண்டாடினேன். பூத்துக் குலுங்கும் பின்லாந்து நாட்டை விட்டு பிரிந்து வர மனமின்றி , பிரியா விடை பெற்று தாயகம் வந்தடைந்தோம்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு 




- திருமூலர் திருமந்திரம்


வாழ்க வளர்க




நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் (chapter 2)


நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்
கலைச் செல்வி இராமநாதன் T .

(நகரத்தார் மலர்  ஜூலை 2009ல் வெளிவந்த கட்டுரை )


"ஞாபகம் வருதே,ஞாபகம் வருதே
பொக்கிஷமாக நெஞ்சு புதைந்த
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே..."

ஏற்கனவே எங்கள் அமெரிக்கா சுற்றுலாவின் இனிய நினைவுகளைத் தங்களுடன் சென்ற ஆண்டுகளில்  (2004) பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  அதன் தொடர்ச்சி யாக , மேலும் சில சுவாரஸ்யமான விஷயங்களையும் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

‘Florida ‘ வில் உள்ள " Walt Disney World " ஒரு மாபெரும் உலகம். அதை முழுவதும் கண்டுகளிக்க 10 நாட்கள் கூடப் போதாது. மனதிற்கு மகிழ்ச்சி தரும் பல பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பியது. அங்கே பல நாட்டு ‘pavilion ‘கள் உள்ளன.அமெரிக்க pavilion இல் ,” America /spread your wings and fly your wings of freedom “  அமெரிக்காவே ,நீ உன் தங்க இறக்கைகளை விரித்து,சுதந்திர வானத்தில் பறந்துதிரியவும்”, என்று எழுதப்பட்டிருந்த அந்த அதிஅற்புதமான வரிகள் மாதங்கள் பலவாகியும் என் நெஞ்சத்தை விட்டு இன்றும் அகலவில்லை. அமெரிக்கர்கள் தம் தாய் நாட்டை அதிக அளவு நேசிக்கின்றனர். பலர் தத்தம் இல்லங்களில், வாசற்கதவில் அல்லது தோட்டத்தில் அவர்கள் தேசிய கோடியை பறக்க விட்டிருக்கின்றனர்.

என் மகன் திருநாவு வீட்டிற்கு (Austin) அருகில் உள்ள வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெரிய cedar (சீடர் ) மரம் இருந்தது. அந்த மரத்துக் கிளைகளில் ஒரு சின்ன ஊஞ்சல் கட்டித் தொங்க விடப்பப்பட்டிருந்தது . அந்த ஊஞ்சல் சாதாரணமாகக் குழந்தைகள் விளையாடக் கூடிய ஊஞ்சல் அல்ல. அந்தச் சின்ன ஊஞ்சலில் நீல நிற frock போட்ட அழகான பொம்மை ஒன்று கைகளை விரித்து வைத்து கொண்டு அமர்ந்திருக்கும் வண்ணம், உட்கார வைக்கப்பட்டிருந்தது. காற்று வீசும் பொது அந்த மரக்கிளைகளும் சரி , அந்த ஊஞ்சலும் சரி , அந்த ரோஸ் நிற சின்ன பொம்மையும் சரி, தன்னாலேயே முன்னும் பின்னும் ஆட ஆரம்பிக்கும் விதமும் சரி,பார்ப்பதற்கு மனதிற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். அதைத் தினந்தோறும் நான் பார்த்து ரசிப்பதுண்டு. இப்போது நினைத்தாலும் அந்த இனிய காட்சி, மனதிற்கு மிகவும் மகிழ்வைத் தருகிறது.

இங்குள்ள அமெரிக்கர்கள் மற்றும் கறுப்பர்களில் ஒருசிலர் மிகமிகப் பெரிய உருவம் கொண்டவர்களாக மாமிச மலை போன்று தோற்றமளிக்கின்றனர். அவர்களுக்கென்றே பிரத்தியேகமாக ‘Extra large size ‘ கடைகள் உள்ளன.  அங்கே அவர்களுக்குத் தேவையான உடைகளை வாங்கி அணிந்து கொள்கின்றனர். இங்கு யாருமே தையற்காரரை நாடிப் போவதில்லை. யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் உடை அணிந்து கொள்கின்றனர்.

மற்றவர்கள் யாரும் ஒரு வார்த்தை கூட அவர்களைப் பற்றியோ அவர்கள் ஆடையை பற்றியோ ஏளனமாக விமர்சிப்பது என்பதெல்லாம் கிடையவே கிடையாது.அவரவர்களும், அவர்கள் காரியத்தில் தான் கண்ணாக இருக்கின்றனர்,செயல்படுகின்றனர்.

அதே போல், அங்கே இப்போது பெருகி வரும் நாகரீகம் அனைவரும் ‘Tatoos’ எனப்படும் சித்திரங்களை கைகளில், முகத்தில் முதுகில் எல்லாம் கூட வரைந்து கொள்கின்றனர். ஒரு அமெரிக்க ஆசிரியை முதுகில் தாமரை மலரையும், இன்னொரு ஆசிரியை முகத்தின் ஒரு பகுதியில் வண்ணத்துப் பூச்சியையும் ‘பச்சை’ குத்திக் கொண்டிருந்தனர் ஆனால் அவை பச்சை நிறத்தில் அல்லாது,வேறு வேறு வண்ணங்களில் இருந்தன.

United nation’s Building (ஐக்கிய நாடு சபை ) முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு வரும்போது நாங்கள் அனைவரும் ‘lift’ இல் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு அமெரிக்கப் பெண்மணி, ’Which country do you come from?’ எந்த நாட்டிலிருந்து நீங்கள் வருகிறீர்கள் ? என்று ஒவொருத்தரையும் பார்த்து வினவினார். ‘lift’ல் பலர் இருந்தோம். அப்போது ஒருவர் “We are from Italy”
நாங்கள் இத்தாலி நாட்டிலிருந்து வருகிறோம் என்றும், ஒருவர் ‘ஜப்பான்’ எனவும் ஒருவர் மலேஷியா என்றும், பலரும் தத்தம் தேசத்தைக் குறிப்பிட்டனர். அப்போது நான் மிகப்பெருமிதத்துடன், “We come from India, the Land of Gandhi who won freedom for India without bloodshed and war,” "நாங்கள் கத்தியின்றி. இரத்தமின்றி சுதந்திரம் வாங்கித் தந்த காந்தி அவதரித்த இந்தியாவிலிருந்து வருகிறோம்," என்று கூறினேன். அப்போது அந்தப் பெண்மணி மகிழ்ச்சியுடன் ,”So we are all United Nations” - ஆக , நாம் அனைவரும் ஐக்கிய நாட்டினர்..”  என்று கூறியபோது அந்த lift இல் இருந்த அனைவருமே மகிழ்ச்சியுடன் சிரித்தனர்.

‘Austin’ இல் மலையாளத் தம்பதிகள் நடத்தி வரும் இந்தியன் department store இல் ரெடிமேட்(half baked , அரை வேக்காடுடன் கூடிய) சப்பாத்தி கிடைக்கிறது. அதை வாங்கி வந்து வீட்டில் தோசைக் கல்லில் போட்டு எடுத்தால், சூடான சப்பாத்தி தயார், மாவு பிசைய வேண்டிய கட்டாயம் எல்லாம் இல்லை. அங்கே அரிசி, பருப்பு வகைகளும், சாம்பார்ப் பொடி, ரச பொடி, மசாலா பொடி மற்றும் நம் பிரிட்டானியா மேரி பிஸ்கட், கிராக் ஜாக்,மில்க் பீக்கீஸ் எல்லாமே கிடைக்கிறது.  விலை தான் நம் ஊர் விலையை ஒப்பிட்டு பார்க்கும் போது பல மடங்கு அதிகம். சொல்லப்போனால், ஒன்றிரண்டு கறிவேப்பிலைக் கொத்து ஒரு டாலர். எனினும் விலையைப் பொருட்படுத்தாது நம் இந்தியர்கள் வாங்கித்  தான் செல்கின்றனர்.

அதே கடையில் நான் கண்ட ஒரு சின்ன சுவாரஸ்யமான காட்சி. ஆம், அந்தக் கடையில், ஒரே ஒரு அழகான சின்ன அம்மியும், அதற்குத் தோதாக ஒரு சின்ன அம்மிக் குழவியும் இருந்தன. அமெரிக்கா வில் போய், நம் அம்மிக் குழவியைப் பார்த்ததும், எனக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. எந்த ஒரு சின்னப் பொருளுக்கோ, பெரிய பொருளுக்கோ, நம் ஊரில் கிடைக்காத மதிப்பு அயல் நாட்டிற்கு வந்தவுடன் கிடைத்து விடுகிறது என்பது வேடிக்கையான உண்மைதான். “அப்படியே ஆசைப்பட்டு, இந்த அம்மியை யாராவது வாங்கினாலும், உட்கார்ந்து பொறுமையாக அரைக்க வா போகிறார்கள்," என்று தான் சிந்தித்தேன். நம் ஊரிலேயே நாம் அம்மியைத் தூரப் போட்டு விட்டு மிக்ஸியில் தா னே அரைக்கிறோம்? அப்படியிருக்க அமெரிக்காவில் எப்படி?

ஆனால் நம் ஆச்சிமார்கள் சிலர் சிரமம் பாராது அம்மியில் தான் இன்னும் சட்னி, துவையல், பருப்பு எல்லாம் அரைக்கிறார்கள். அவர்கள் கூறும் காரணம், "அம்மியில் அரைத்தால் தான் ருசி," என்பதே. அமெரிக்காவில் அம்மியைப் பார்த்ததும், “அம்மி மிதித்து அருந்ததி பார்த்துத் திருமணம்," என்ற வரிகள் தாம் நினைவிற்கு வந்தன. நம் தாயகத்தில் தினம்தினம் அம்மியைப் பார்ப்பதால், அந்த வரிகள் இங்கிருக்கும் போது நினை விற்கு வரவில்லையோ?

அமெரிக்காவில் உள்ள அனைவரும் நன்றாகக் கார் ஓட்டுகின்றனர். ஓரொரு வீட்டிலும் இரண்டு, மூன்று கார்கள் உள்ளன. எல்லாருமே traffic rules ஐ வாகன சட்ட திட்டங்களை முழுமையாகக் கடைப்பிடிக்கின்றனர்.

நிற்க வேண்டிய இடங்களில் கண்டிப்பாக காரை நிறுத்தி விடுகின்றனர். மெதுவாக ஓட்ட வேண்டிய இடங்களில் காரை மெதுவாகவே ஓட்டிச் செல்கின்றனர். பாதசாரிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வாகன சட்ட திட்டங்களை' அவர்கள் பின்பற்றத் தவறினால், கடுமையான அபராதம் உண்டு. அங்கே பெற்றோர்கள் தம் பிள்ளைகளை அடிப்பது என்பதெல்லாம் கூடவே கூடாது.

அப்படிச் செய்தால் அதற்கும் கடுமையான தண்டனை உண்டு. ஆகவே பெற் றோர்கள் தம் பிள்ளைகளை அன்புடன், பண்புடன் தான் நடத்துகின்றனர். அமெரிக்காவிலும், நம் தேனினும் இனிய தமிழ் மொழியில் "தென்றல்” Internet radio தினந்தோறும் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி பயனுள்ள சேவையை அமெரிக்கா வாழ் தமிழர்களுக்காக தொடர்ந்து செய்து வரும் திருமதி. சிவகாமி சொக்கலிங்கம் அவர்கள் உண்மையிலேயே பாராட்டுக் குரியவர்கள்.

அமெரிக்காவில் தற்போது நம் நாட்டு யோகா, தியானத்தை முறையாக நம், ஆசிரியர்கள் மூலம் அமெரிக்கர்கள் கற்றுக் கொண்டு யோகா, தியான முறைகளை அவர்களும் கடைப்பிடித்து, வாழ்வில் அமைதியடைகின்றனர் என்பது அங்கே சென்ற பின்னர், நான் அறிந்து கொண்ட புதுச்செய்தி. இதைக் கேட்டதும் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் காந்தி,
புத்தர், பாரதி, விவேகானந்தர் அவதரித்த இந்தப் புண்ணிய பூமியில் பிறந்தவள்   அல்லவா நான்.?



அமெரிக்காவைப் பார் - 2015 chapter 4

அமெரிக்காவைப் பார்
கலைச்செல்வி ராமநாதன்
(நவம்பர்  2015 நகரத்தார் மலரில் வெளிவந்த கட்டுரை) 







 நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் (2005ல் ) அமெரிக்கா போய் வந்த பின்னர் சிறியதாக அமெரிக்கப் பயணக் கட்டுரை நகரத்தார்  மலரில் எழுதியுள்ளேன். பின்னர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பின்லாந்தின் இனிய நினைவுகள் (சற்றே நீண்ட தொடர்  கட்டுரை) எழுதித் தாங்கள் அனைவரின்  மனதையும் மகிழ்வித்தேன் .  நாங்கள் அமெரிக்கா விற்கு  மூன்றாவது முறையாக    சென்று வந்த சுவாரஸ்ய மான  நிகழ்வுகளைப்  பற்றியும், பழகிய மனிதர்களைப்  பற்றியும் , தற்போது சிறிய கட்டுரையாக எழுத விரும்புகிறேன்.

May 27, 2015 அன்று சென்னையிலிருந்து அபுதாபிக்கு எத்திஹாட் ஏர்வேஸ் மூலம் ,3 மணிநேரம்  பயணம் செய்து ,  பின்னர் அங்கிருந்து  டல்லாஸிற்கு அதே எத்தியாட் மூலம் 14 மணிநேரம் பயணம் செய்து, பத்திரமாக எங்கள் புதல்வன் செந்தில்குமார்  வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தது ஒரு சிறிய சாதனையாகவே தோன்றியது. அவ்வளவு நேரம் விமானத்தில் தொடர்ந்து அமர்ந்திருந்தாலும், அதிகப் படியான களைப்போ, அலுப்போ எங்களுக்குத் தோன்றாததற்குக் காரணம்-
எங்கள் பேத்தி சிந்துவின் நடன அரங்கேற்றத்தைக் காண அல்லவோ கடல் கடந்து செல்கிறோம் என்ற ஆர்வமும், மகிழ்ச்சியும் தான்.

நாங்கள் US. சென்ற மறு நாளே நாச்சியாபுரம் செல்வமணி- அழகு அவர்கள் பெண்கள் அட்சயா, சோனாவுடன் எங்கள் பேத்திகள் சிந்து, சூர்யாவுடன் நாங்கள் அனைவரும் , ஒரு சிறிய உணவகத்தில், எங்களுக்கு  முன்னால் கார்கள் இடைவிடாமல் அங்கும்  இங்குமாக ஓடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு, அந்த நிலா வெளிச்சத்தில் ஊர்க்கதைகளை சிரித்துப் பேசி உணவருந்தியது சுவாரஸ்யமான விஷயம். அங்கே ஒலித்த மெல்லிசையும் இதமாக இருந்தது. இங்கு வந்து, ஒரிரண்டு வாரங்களில் பலர் எங்களைக் கேட்ட கேள்வி உங்களுக்கு Jet-lag ஆகவில்லையா - என்பது தான். ஆனால் எங்களுக்கு Jet-lag ஆகவில்லை என்பது தான் உண்மை . Jet-lag என்பது இரவில் விழித்திருப்பது, பகலில் தூங்குவது, பலருக்கும் தெரிந்த விஷயம் தான் இது. தெரியாதவருக்காக விவரம் எழுதுகிறேன்.

எத்தியாட் விமானத்தில் எனக்கு மிகவும் பிடித்த (50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அற்புதமான, பாடல்கள் நிறைந்த படம்) Sound of music போட்டபோது மிகவும் மகிழ்வுடன் பார்த்தேன். நான் 5வது முறையாகப் பார்க்கும் படம் காலத்தால் அழியாத Sound of music.

எல்லென்ஸ் என்ற இடத்தில் உள்ள அரங்கத்தில் கோப்பல் தமிழ்ச் சங்கத்தினரின் 13வது ஆண்டு விழா | May 31ந் தேதி மாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. வார இறுதி நாட்களில் தமிழ் பயிலும் சிறுவர் சிறுமிகளின் ஆடல், பாடல், நாடகம்,
அத்தனையும் அருமை. எல்லாருக்கும், பரிசுகளும் வழங்கப்பட்டன. அங்கு அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் தன்னார்வத் தொண்டர்கள் தம் பிள்ளைகளுக்கு முனைப்புடன் தமிழ் கற்றுக் கொடுப்பதும், அந்தப் பிள்ளைகளும் ஆர்வத்துடன் தமிழ் கற்றுக் கொள்வதும் சிறப்பு அம்சமாகும்.

நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 'சங்கே முழங்கு’ படப்பாடலுக்கு அதே மாதிரி உடையணிந்து , அதே வெண் சங்குடன் அந்தச் சிறுவர் சிறுமிகள் நடனம் ஆடியது இன்னும் அப்படியே என் கண்களுக்குள் நிழலாடுகிறது.

இங்கு அடிக்கடி மாலை நேரங்களில் walking போகும் வழக்கத்தை வைத்திருந்தோம். சில சமயங்களில் நானாகத் தனியாக walking சென்றால் கூட, ஏதும் பயமாகத் தெரிவதில்லை . ஏனெனில் இரவு 8, மணிக்கு மேல் தான் சூரியன் அஸ்தமிக்கிறார்.

என் புதல்வன் செந்தில் குமார் - லதா இருக்குமிடத்திற்குப் பெயர் Dancing water lane, அதைச் சுற்றியுள்ள இரண்டு இடங்களுக்குப் பெயர் Rustling Water lane, Sandy water lane, இந்த மூன்று பெயர்களும் இப்படி அமைவதற்குக் காரணம் இங்கே சற்று அருகில் ஒரு சின்ன ஆறு ஓடுகிறது.

அதன் நடுவே ஒரு அழகான சிறிய நீர் வீழ்ச்சி (Water falls) உள்ளது. இரவு நேரங்களில் விளக்கொளியில் நீர்வீழ்ச்சி மின்னுவது காண்பதற்கரிய காட்சியாகும். இங்கு எல்லார் வீடுகளிலும் 'Security Alarm' (பாதுகாப்பு உப காரணம்) கண்டிப்பாகப் பொருதத்தப்பட்டுள்ளது. ஒரு தடவை அதைப் புரிந்து கொள்ளாமல் நான் அதிகாலையில் கதவைத் திறக்க அலாரம் அலற, என் மகன் வந்து சரிசெய்ய, அங்கிருந்து (அதற்குள்ள அலுவலகத்திலிருந்து தொலைபேசி ஒலிக்க, என் மருமகள் லதா விளக்கம் கூற, அன்று ஐந்து நிமிடத்திற்குள் ஒரு சின்ன நாடகமே அரங்கேறியது. அதன் பின்னர் நான் கவனமாகத் தான் நடந்து கொண்டேன் என்பதைக் கூறவும்  வேண்டுமா என்ன?

நாங்கள் Walking சென்றபோது, அழகழகான பூக்கள் ஒரு வீட்டின் முன்னால் பூத்துக்குலுங்கின. பக்கத்தில் போய்ப் பார்த்தால் எல்லாம், பிளாஸ்டிக் பூக்கள். அசல் பூக்களை மிஞ்சும் பிளாஸ்டிக் பூக்கள், மனிதன் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டேன். அதே வீட்டின் முன்னால் மூன்று நாய்க்குட்டி பொம்மைகள் 'Welcome board' ஐக் கவ்விக் கொண்டு விருந்தினர்களை வரவேற்கின்றன.

இந்தச் சின்ன ஆறு, இந்த சின்ன நீர்வீழ்ச்சிக்கிடையே இனிமையான நட்புறவுடன் கூடிய ,  அறுபது வயதிற்கு மேல் கூடிய, 'சேலை சுடி அணிந்த, 6 பெண்களை நான் சந்தித்தேன். அதில் நாலு பெண்கள் வட இந்தியர்.
இரண்டு பெண்கள் தமிழ்ப்பெண்கள். அவர்கள் அனைவரும் தினந்தோறும் இரவு 7 மணியிலிருந்து 9மணி வரை அந்த ஒரே பெஞ்சில் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்வதையும், பஜனைப் பாடல்களை தத்தம் மொழியில் மனம் விட்டுப் பாடுவதையும் பார்த்தபோது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது. இந்த ஆறு பெண்களும், தங்கள் பிள்ளைகள் வீட்டிற்கு வந்திருப்பதாகவும் குறித்த காலத்தில் தாயகம் திரும்புவோம் என்றும்  கூறினார்கள். அதில் 'வசந்தி என்பவர்கள் வடலூரில் இருந்து வந்திருப்பதாகக் கூறியவர்கள்,
''குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா ” வைப் பாடிய போது நெகிழ்வாக இருந்தது. ஒரு நல்ல பக்திப் பாடலை, அதுவும் நம் தாய்மொழி - தமிழ் மொழிப் பாடலை, அந்த அமெரிக்க மண்ணில் கேட்ட போது மனநிறைவாக இருந்தது.

எதேச்சையாக அமெரிக்க மாத இதழான தென்றல் (April 2014) பத்திரிக்கையை காண நேரிட்டபோது பஞ்சு அருணாசலத்தின் புதல்வி (எங்கள் செந்தில்--லதாவின் நெருங்கிய குடும்ப நண்பர்) கீதா அருணாசலத்தின் புகைப்படத்தையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் படித்தபோது வியப்பாக இருந்தது. கவியரசு கண்ண தாசனின் மடியில் மூன்று வயது கீதா துருதுருவென்று அமர்ந்திருக்கிறார். இன்னொரு மடியில் அவர்கள் வருங்கால கணவர் சுப்ரமண்யம் அமர்ந்திருக்கிறார்-- Rare photo. திருக்குறள் முழுவதையும் 2014 இல் ஒப்புவித்துக் "குறளரசி” என்று பட்டம் பெற்றவர். இவர் metroplex தமிழ்ச் சங்கத்தின் தலைவி; தமிழ்ப் பள்ளி ஆசிரியை; தஞ்சாவூர் ஓவியக்கலையில்  வல்லுநர்; அமெரிக்கா வாழ்  நகரத்தார் சங்கத்தில் முக்கியப் பொறுப்பாளர்;  எனப் பன்முகங் கொண்டவர். எங்கள் பேத்தி சிந்துவின் ஓவியத்தை (நடன அசைவுடன் கூடிய ஒவியம்) அவ்வளவு தத்ரூபமாக வரைந்து அரங்கேற்றத்தின்போது அரங்கத்தின் முன்னால் Display பண்ணியவர் .அவர்கள் வீட்டில் அறுசுவை விருந்து சாப்பிட்டதும், அவர்கள் இல்லத்தினர் அனைவரையும், சந்தித்ததும் மறக்க முடியாத இனிமையான அநுபவம்.

டல்லாஸில் சச்சிதாநந்த சுவாமிகள் அவர்கள் கட்டி  ஜீலை -2015ல்  கும்பாபிஷேகம் ஆகியுள்ள 'காரியசித்தி ஹனுமான் கோவில்"   மிகவும் பிரசித்த பெற்ற கோவிலாக உள்ளது. மூலவர் ஹனுமான், மற்றும் பக்கவாட்டில் நம் சிவன், சக்தி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர், அனைவரும் உள்ளனர்.  இந்தக் கோயிலுக்குத் தொண்டு செய்வதற்கென்றே பல பக்தர்கள் கோயில் காம்பவுண்டிற்குள்ளேயே சின்னச்சின்ன வீடுகளாக கட்டி க் கொண்டு தன்னலமற்ற சேவை செய்து வருகின்றனர். இங்கு கூட்டுப் பிரார்த்தனை, பஜனை எல்லாமே நடைபெறுகிறது. இந்த பிளேனோ நகரில் மட்டுமல்லாது , மற்றும் இதே  மாதிரியான  நம் ஹிந்து கோவில்கள் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் கட்டப்பெற்று , அனைவரும் பக்தியுடன் வழிபடுவது சிறப்பு, அதுவும் முக்கியமாக ஹுஸ்டன் நகரில் நாட்டரசன் கோட்டை Sam கண்ணப்பன் அண்ணன்  அவர்கள் ,  பெரு முயற்சியுடன் கட்டியுள்ள மீனாக்ஷி அம்மன் கோவில், மிகவும் பிரசித்த பெற்ற கோவிலாகும். அந்த மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனையும், சிவனையும் வழிபட்டது எனக்கு மனநிறைவாக இருந்தது.

எங்கள் சிந்து தற்போது படித்து வரும் யுனிவர்ஸிட்டி ஆப் டெக்ஸாஸ், டல்லாஸிற்குச் சென்று ஜீன் மாதம் பார்த்து வந்தோம். அது மிக மிக விரிவான பல்கலைக்கழகம்.  அங்கே அத்தனை வசதிகளுடன், மேலும் நீச்சல் குளம் எல்லாம் கூட வைத்துக் கட்டப்பட்டிருக்கின்றது. இங்கே சில ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற, நம் வட இந்திய தொழில்  அதிபர் , நவீன் சிண்டால், இந்தக் கல்லூரிக்கு அன்பளிப்பாக ஒரு பெரிய தொகையைக்  கொடுத்துள்ளார். அதை நினைவு கூறும் வண்ணம் ஒரு கண்ணாடி shelf இல் அவரது புகைப்படமும், நமது இந்தியாவின் தேசியக் கொடியும் நவீன் சிண்டால் புகைப்படத்தின் அருகே வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்தபோது மனநிறைவாக இருந்தது.

எங்கள் மூத்த மகன் திருநாவு மருமகள் Dr.மீனா வீட்டிற்கு, Atlanta என்ற சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட அழகிய நகரத்திற்கு, சென்று அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து அங்கேயிருக்கும் ஹிந்து கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தது மிகவும் மனநிறைவான விஷயம். ''சுவாமி நாராயணன் கோயில் முற்றிலும் சலவைக் கற்களால் ஆனது. இதைக் கட்டியவர் ஸ்வாமி பரமுக மஹராஜ் என்பவர். ஆயிரத்து முந்நூறு பேர் முனைந்து 2005 ஆம் ஆண்டில் இக்கோயிலைக் கட்டியதாக கேட்டறிந்தேன் .. அவர் கூறிய "In the joy of others lives our Own." என்ற  நல்லதொரு வாசகத்தை  அங்குள்ள சலவைக் கற்களில், பொறித்து   வைத்துள்ளார்கள். இந்தக் கோவிலுக்கு முன்னால் அழகான சற்றே பெரிய குளம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு முன்னால் பதினைந்து கருங்கல்லால் ஆன யானைத் தலைகள் தண்ணீரைத் தங்கள் வாய் மூலம் குளத்துக்குள் ஊற்றுவது போல அமைப்பு உள்ளது. அந்தக் குளத்துக்குள் செல்ல நான்கு அகலப் படிகள் உள்ளன. ஆனால் யாரும் குளத்துக்குள் செல்வது இல்லை. குளத்துக்கு மேலே நின்றவாறே தங்கள் வேண்டுதல்களை மனத்துக்குள் சொல்லிக் கொண்டே சில்லறைக்காசுகளை வீசி எறிகின்றனர்.

மற்ற எல்லாக் கோவில்களையும் போல் இங்கு ஸ்பெஷல் பூஜைகள், ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் எல்லாமே நடைபெறுகின்றன. நாங்கள் சென்றபோது, ஒரு தம்பதியினர் அவர்கள் இல்லத்தினருடன் சதாபிஷேகம், இரண்டு வேத விற்பன்னர்கள் , உடனிருந்து ஸ்தோத்திரம் எல்லாம் சொல்ல, நடுவில் கலசத்துடன் எண்பதாம் கல்யாணம் செய்து கொள்வதைப் பார்க்க நேர்ந்தது ஒரு பாக்கியமே .

Dallas/Fort worth விமான நிலையத்தில் பார்த்த  வேடிக்கையான சில காட்சிகளையும், எழுத விரும்புகிறேன். ஒர்  ஆண்மகன் தன் ஷுக்களைக் கட்டிப் பத்திரமாகத் தன் முதுகுப் பக்கம் தொங்கவிட்டிருந்தார். அவர் சூட்கேஸில் ஷுக்களை வைக்க இடமில்லை போலும்!,  என நினைத்துக் கொண்டேன். பிறிதொருவர் தன் கேமராவை தலையைச் சுற்றிக் கட்டி முன் நெற்றியில் அந்தக் கேமரா தெரியுமாறு தோற்றத்திலிருந்தார். இன்னொருவர் போட்டிருந்த ஜீன்ஸில் பல பகுதிகள் வேண்டுமென்றே கிழித்துத் தைக்கப்பட்டிருந்தன. அந்த ஜீன்ஸும் பல இடங்களில் சாயம் போனதாக இருந்தது. இதெல்லாம் அந்த நாட்டின் fashion போலும்!  ஆனால் யாரும் யாரையும் கண்டு கொள்வதில்லை. ஏளனமாகப் பேசுவதுமில்லை! . இது இந்த அமெரிக்க மண்ணின் சிறப்பு அம்சம்.



Atlanta வில் ,  பெரிய  கடை ஒன்றில் ,  13வகை காப்பிக் கொட்டைகளைப் பார்க்க முடிந்தது. அதே சமயம் நம் இந்திய சைவ உணவகத்தில் பல்வேறு வகையான தோசை, சட்னி, சாம்பார் கிடைக்கிறது. வார இறுதியில் அனைவரும் தத்தம் குழந்தைகளுடன் இங்கு உணவருந்த வரத் தவறுவதில்லை . அந்த உணவகங்கள் நம் தென்னிந்திய 'சரவணபவனை' நினைவு படுத்தியது. Atlanta விலும் Dallas இலும் பல இடங்களில் நாங்கள் walking சென்றபோது பார்த்தது நாய்க்குட்டி வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக, வெளியே செல்லும் போது, அதற்காகவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை உடன் எடுத்துச் சென்று, அங்கேயிருக்கும் நாய்க்குட்டிகளுக்கான குப்பைத் தொட்டிகளில், போட்டு விடுகின்றனர்.




                                                                                         அட்லாண்டாவில் பேரன் ஹரிஷ் உடன் 



Atlanta வில் முழுவதுமே மலையாக இருப்பதால், எங்கள் மகன் வீட்டு பால்கனியில் இருந்து பார்த்தால் சில சமயங்களில் அழகிய மான் குட்டிகள் கீழே துள்ளி ஒடுவதைப் பார்க்க முடியும். அதே சமயம் முயல் குட்டிகளும் ஆங்காங்கே ஓடிக் கொண்டிருக்கும். Atlanta வில் பேரன் ஹரீஷ் உடன் கேரம் விளையாடியது, You know/ UNO விளையாடியது, அங்கே பால்கனியில் ஜவ்வரிசி வற்றல்போட்டு காய்ந்தவுடன் பொரித்துச் சாப்பிட்டது எல்லாமே மலரும் இனிமையான நினைவுகள்.

அங்கே நாங்கள் walking சென்றபோது ஒரே வீட்டில் நான்கு கார்களைப் பார்த்தோம். ஏனெனில் அமெரிக்காவில் பேருந்துவசதி, ரயில்வசதி எல்லாம் குறைவாகத்தானே உள்ளது. எல்லாவற்றிற்கும் கார் ஒன்று தான் கைகொடுக்கிறது. ஆக நம் இல்லத்தரசிகள் இங்கு வந்த பின்னர் முதன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது “கார் டிரைவிங்” தான் என்பதை சொல்லவும் வேண்டுமா?

மேலும் Atlanta வில் நாங்கள் பார்த்து ரசித்த சில இடங்களுள் குறிப்பிடத்தக்கவை Coco - Cola company, Georgia Aquarium ஆகும். 1886ஆம் ஆண்டில் John S. Pemberton Coco-cola என்ற புதுவகை பானத்தைக் கண்டுபிடித்ததாகவும் தற்போது உலகிலுள்ள பலரும் இப்பானத்தை விரும்பிக் குடிப்பதாகவும் வரலாறு கூறுகிறது.

 இந்த COCO-Cola பானத்தைப் பற்றிய சிறு குறிப்பு உள்ளது.அதாவது 1883 ஆம் ஆண்டு நடைபெற்ற Calcutta International Exhibition-ல் இந்த கொக்ககோலாவின் formula எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், அதைப்பார்த்துத் தான் Atlanta வில் முதன் முதலில் கொக்ககோலா தயாரித்ததாகவும் கூறுகிறார்கள். ஆக கோலாவின் தாயகம் நம் இந்தியா என்று வேண்டுமானால் நாம் மார் தட்டிக் கொள்ளலாம். இது எந்த அளவு உண்மை என்று யாருக்கும் தெரியாது. ஆனால் , தற்போது இந்த formula தெரிந்து வைத்திருப்பவர்கள் உலகிலேயே இருவர் மட்டும் தான் என்று எழுதப்பட்டுள்ளது.

Georgia Aquarium மிகமிகப் பிரம்மாண்டமானது. நம்மை அப்படியே கடல்சார் உலகிற்கு அழைத்துச் சென்று கட்டிப்போட வல்லது. இந்த “World of Cococola” விற்கு பக்கத்திலேயே தான் Georgia Aquarium -Pembenton Place என்ற இடத்தில் உள்ளது. உலகிலேயே இரண்டாவது பெரிய Aquarium இது தான். முதல்  பெரிய Aquarium சிங்கப்பூரில் உள்ளது.


நம் தலைக்கு மேல் கடல் போன்ற பிரம்மாண்ட அமைப்பு. அதற்குள் மீன்கள் நீந்துகின்றன. ஆக நம் தலையைச் சுற்றி வண்ண வண்ண மீன்கள், புது அனுபவம், இனிமையான அனுபவம். மூவாயிரம் கிலோ மீன்கள் மேலே உள்ளனவாம். அங்காங்கே  விவரம் எழுதப்பட்டிருக்கின்றன. மூவாயிரம் பவுண்டு எடையுள்ள Whale shark இன் உடலிலிருந்து வெளிச்சம் பரவுகிறது. தலை, காது, கண் எதுவுமே இல்லாத sea-animals!  இன்னும்  குடை வடிவத்தில் கூட உள்ளது! . இன்னும் பல்வேறு வடிவத்தில் மீன்கள்!!. இத்தனை இலட்சக்கணக்கான மீன்களுக்கும் எவ்வளவு பொறுப்பாக பணியாற்றுபவர் உணவளிக்கிறார். அவர்களை  நிச்சயம்  பாராட்டத்தான் வேண்டும்.


மீன் காட்சிச்சாலை பார்த்து, கொக்கோகோலா கம்பெனியும் பார்த்துப் பின்னர் நாங்கள் பார்த்த முக்கியமான நிறுவனம் உலகப்பிரசித்தி பெற்ற C.N.N. இந்த C.N.N. ஐ பற்றிக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. முதலில் பல்வேறு introductions அது, இது, இங்கே, இப்படி, அங்கே, அப்படி என guide விளக்கிக் கொண்டே வந்தார். பாதி புரிந்தது, பாதி புரியவில்லை. C.N.N என்பதன் விரிவு Cable Network News. இது உலகிலேயே மிகப்பெரிய தொலைக்காட்சி செய்தி நிறுவனம். ஆங்காங்கே உலகில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை அங்கே உயரத்தில் எழுதித் தொங்கவிட்டிருக்கின்றனர்.



                                                     (படங்கள் - அமெரிக்க பாராளுமன்றம் மற்றும் CNN  செய்தி வாசிக்குமிடம் )



உதாரணமாக
 1987 இல் லேடி டயனா இளவரசர் சார்லசை - மணந்தது.
1987. இல் Atlanta வில் Olympic Games நடைபெற்றது.
1997 இல் பிரிட்டன் 'ஹாங்காங்' நகரை சீனாவிற்கு திருப்பி ஒப்படைத்தல்.
2009-இல் Barrack Obama வை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது.
2001 Sept 11 - World Trade Centre  விமானத்தால் மோதி சேதமடைந்து


இது போன்ற பல புள்ளி விவரங்கள் அங்கே எழுதப்பட்டிருக்கின்றன. செய்திகள் வாசிக்கப்படும் அறையில் பலர் அமர்ந்து அவ்வப்போது செய்திகளை சிரத்தையுடன் வாசிக்கின்றனர். நாங்கள் மேலே நின்று கொண்டு கீழே அவர்கள் செய்தி வாசிக்கும் நேர்த்தியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கே செல்வதற்கு முன்னர் அந்த இளைஞன் African-American guide நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள், என்று பொதுவாகக் கேட்க பலரும் தங்கள் நாட்டையும், ஊரையும் சொல்ல, நான் 'We come from India' என்று கூறிய போது பெருமிதமாகவே இருந்தது. பல திவ்விய மகான்களையும், கங்கையையும், இமயமலையையும் கொண்ட புனித தேசமல்லவா நம் இந்திய தேசம். இதற்கு ஈடு இணை உண்டா ?


ஒரு Mexican பெண்ணை மாதிரிக்காக செய்திகளை வாசிக்கச் சொல்லிக் காட்டினார்கள். அந்தப் பெண்ணும் tourist தான். ஆனால் கொஞ்சம் கூட யோசிக்காது, இயல்பாக செய்திகள் வாசித்து எல்லாரின் கை தட்டலையும் பெற்றார்.

குறிப்பிட்ட நாளில் எங்கள் பேத்தி  சிந்துவின் அரங்கேற்றம் மிக விமரிசையாக  , வெற்றி கரமாக  நடந்தேறியது . அன்று  மேடை ஏறி அமெரிக்க மண்ணில் தமிழில் நன்றி உரை ஆற்றினேன் .

சிந்துவின்  நடன அரங்கேற்றம் 



 இங்கே வந்து நான் உருப்படியாக விரும்பிச் செய்த இரண்டு காரியங்கள், ஏற்கனவே பல முறை படித்த மகாகவி பாரதியின் கவிதைத் தொகுப்பையும், நம் கவியரசுவின் ஈடு இணையற்ற “அர்த்தமுள்ள இந்து மதம்" பத்து பாகங்களையும் மீண்டும் மனமொன்றிப் படித்தது தான். அர்த்தமுள்ள இந்து மதத்தின் ஐந்தாவது பாகத்தில் வரும்,  எனக்குப் பிடித்த  சில வரிகளையும் இங்கே  எழுதுவதில் , மகிழ்ச்சி கொள்கிறேன் .


"வேதம் அறிந்த பிராமணன், அதை நாலு பேருக்காவது சொல்லமற் போவது எவ்வளவு பாவமோ, அவ்வளவு பாவம் பிறருக்குத் தனது அனுபவங்களைச்
சொல்லாமல் இருப்பது."

--- என் அனுபவங்களை நான் பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை.

"கப்பல் தளத்தில் நின்று வானையும் கடலையும் நோக்கிய போது அந்தப் பிரம்மாண்ட சிருஷ்டி என்னை வியக்க வைத்தது."

பத்தாவது பாகத்தில் நம் கவிஞர் எழுதியது ...........-

"காலையில் இட்லி தோசை, மத்தியானம் சாப்பாடு, ராத்திரியில் மீண்டும் பலகாரம், இதற்காகவா நான் படைக்கப்பட்டேன்?............. ஒவ்வொரு ஜீவனும், ஒவ்வொரு லட்சியத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆன்மா ஒரு லட்சம் ஆன்மாக்களுக்கு வழிகாட்டுவதற்காகவே படைக்கப் பட்டிருக்கின்றது ."

"கையில் இருக்கும் பேனா நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். "

எங்கள் நெருங்கிய தோழி பிருந்தாவின் அண்ணன் பிரபுவின் வீட்டிற்குச் சென்று அவர்கள் HomeTheatre இல் Robo க்கள் சண்டைகள் நிரம்பிய திகில் படமான Transformer படத்தை என் பேரன் ஹரீஷீடன் பார்த்தது, பிரபுவுடன் தென்னிந்திய உணவகத்திற்குச் சென்று நம் இட்லி, வடை, தோசை சாப்பிட்டது எல்லாமே மறக்க இயலாத தருணங்கள்.

மகாகவி பாரதியின் வரிகளை நெஞ்சில் நிலைநிறுத்தி, தங்களுக்கு நினைவுபடுத்தி என் 'அமெரிக்காவைப் பார்' கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

"வலிமையுடையது தெய்வம், 
நம்மை வாழ்ந்திடச் செய்வது தெய்வம்
தெய்வ வலியுண்டு தீமையைப் போக்கும்"

எங்கள் பிள்ளைகள், பேரன்பேத்திகள் திருநாவு, மீனு, வினித், ஹரீஷ், செந்தில், லதா, சிந்து, சூர்யா கண்ண ன், மீனு (Finland), ஆர்த்தி , பாரதிக்கு வாழ்த்துக்கள், நெஞ்சார்ந்த நன்றிகள்.

என் கட்டுரையைப் பொறுமையாகப் படித்த அனைவருக்கும், நல்ல விதமாக வெளியிட்ட ஆசிரியருக்கும் நன்றி.

உலகம் சுற்றிய தமிழர் திரு.சோமலே, எங்கள் அப்பா தமிழ்ச்சான்றோர். மெ. திருநாவுக்கரசு அவர்களின் இனிய நண்பராவார். நெற்குப்பையில் எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டுக்காரரான எழுத்துலகில் முத்திரை பதித்த நண்பர் “திரு. சோமலே அவர்கள் பல ஆண்டுகட்கு முன்னர் எழுதிய அமெரிக்காவைப் பார்”

என்ற புத்தகத்தின் தலைப்பையே என் இந்தக் கட்டுரைக்கும் இப்போது தலைப்பாகக் கொடுத்துள்ளன்.

பயணக் கட்டுரையின் முன்னோடியான தெய்வத்திரு சோம. லே - அவர்களுக்கு நன்றி.